தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்த நாள் காரைக்குடி மாவட்ட ப.க. நடத்திய கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி தி.பெரியார் சாக்ரடீஸ் நினைவுப்பரிசு வழங்கல்

5 Min Read

காரைக்குடி, அக். 16- பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான  பேச்சுப் போட்டியானது  12.10.2025, ஞாயிறு காலை 10.00  மணியளவில் காரைக்குடி, குறள் அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது. 33 கல்லூரி  மாணவர்களும் அவர்தம் பெற்றோர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சிக்கு  பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் செல்வம் முடியரசன் தலைமையேற்றார். வருகை தந்த அனைவரையும் பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் ந. செல்வராசன் வரவேற்றார்.

இந்நிகழ்வில் தலைமை உரையாற்றிய மாவட்டத் தலைவர் செல்வம் முடியரசன் தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு பற்றியும் சமூகத்தில் இருந்த மூடப்பழக்கவழக்கங்களை பெரியார் ஏன் எதிர்த்தார்? எவ்வாறு எதிர்த்தார்?  என்பதைப் பற்றியும்,  பெண்ணுரிமைக்கு அவர் தந்த  முன்னுரிமை பற்றியும்  எடுத்துரைத்தார்.

முன்னிலை வகித்த மாவட்ட ஆலோசகர் விஞ்ஞானி முழுமதி பேசுகையில்:- இக்கழகத்தால் தான் எவ்வாறு ஈர்க்கப்பட்டேன் என்பதையும் அதன் காரணமாகவே  குக்கிராமத்தில் பிறந்த நான்  விஞ்ஞானியாக உருவாக முடிந்தது என்றும் நினைவு கூர்ந்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட திராவிடர் கழக  மாவட்டக் காப்பாளர் சாமி திராவிடமணி கழகத்திற்கு காரைக்குடி கழக மாவட்டத்திற்கு செய்த தொண்டினையும், நான்கு தலைமுறைகளாக கழகத்திற்கு தனது குடும்பம் செய்து வரும் பணிகளையும் பகிர்ந்து கொண்டதோடு பகுத்தறிவாளர் கழகம் காரைக்குடியில் தோற்றுவிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வையும், ஆசிரியரின் உழைப்பையும்  அனைவரின்  கவனத்தையும் ஈர்க்கும் வகையில் விளக்கிக் கூறினார். காரைக்குடி மாவட்ட கழகத் தலைவர் ம.கு. வைகறை தனதுரையில்  கழக செயல்பாடுகள் குறித்தும்  தோழர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும்  எடுத்துரைத்தார்.

காரைக்குடி (கழக)  மாவட்டத்திற்குட் பட்ட ஒவ்வொரு  கல்லூரிகளுக்கும்  மாவட்ட தலைவர் செல்வம் முடியரசன், மாவட்டச் செயலாளர் ந. செல்வராசன், மாவட்டத் துணைச் செயலாளர் இரா. முத்துலெட்சுமி ஆகியோர் நேரில் சென்று அழைப்பு விடுத்ததோடு அவர்கள்  மேற்கொண்ட தொடர் முயற்சியின் காரணமாக  இவ்வாண்டு அதிக அளவில்  மாணவர்கள் கலந்து கொண்டனர். வழக்கம் போல் மாணவிகளே அதிக அளவில் கலந்து கொண்ட இப்பேச்சுப் போட்டிக்கான தலைப்புகளாக பெரியாருக்கு முன்னும் – பெரியாருக்கு  பின்னும், பெரியார் ஒரு கேள்விக்குறி? பெரியார் ஒரு ஆச்சரியக் குறி, எப்போதும் தேவை பெரியார், இட ஒதுக்கீடு, ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, நம்மை எதிர்நோக்கும் பிரச்சனைகள், பெரியார் இல்லாவிடில் இன்றும்… நாளையும்… நம் நிலை

என்ற ஆறு தலைப்புகள்  அறிவிக்கப் பட்டதோடு ஒவ்வொரு பேச்சாளர்களுக்கும் தலா 5 நிமிடம் ஒதுக்கப்பட்டு குலுக் கல் முறையில் போட்டியாளர்கள் பேச  அழைக்கப்பட்டனர்.  கலந்து கொண்ட ஒவ்வொருவரும் பெரியாரின் கொள்கை களையும்  அவரது  தன்னலமற்ற தொண்டி னையும் வியந்ததோடு  இடஒதுக்கீடு, பெண்ணுரிமை, ஜாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு, ஏன் தேவை பெரியார் என கழகப் பேச்சாளர்களைப் போல அனைவரும் வியக்கும் வகையில்  பேசி  அரங்கம் அதிர தங்களது  பேச்சுத் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இப்பேச்சுப் போட்டிக்கு  சி. தன்மானம் (உதவிப் பயிற்றுநர்  சுற்றுலா மற்றும் உணவக மேலாண்மைத் துறை அழகப்பா பல்கலைக் கழகம் காரைக்குடி,) முனைவர் பா. தென்றல் (உதவிப் பேராசிரியர் தமிழ்த் துறை சீதாலெட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரி பள்ளத்தூர்) முனைவர் இரா. ஷிரின் பர்கானா (கவுரவ விரிவுரையாளர் வரலாற்றுத் துறை அரசுக் கலைக் கல்லூரி மேலூர்)  ஆகியோர் நடுவர்களாக இருந்து வழிநடத்தி சிறப்பான தீர்ப்பினை வழங்கினார்கள்.

இப்போட்டியில்  அ. சாருமதி (அழகப்பா அரசு கலைக் கல்லூரி காரைக்குடி) முதலிடத்தையும் முகம்மது கைய்ப் (வித்யா கிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதுவயல்) இரண்டாம் இடத்தையும்  அ. மாதரசி (அழகப்பா அரசு கலைக் கல்லூரி, காரைக்குடி) மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 3000/- இரண்டாம் பரிசாக ரூ.2000/- மூன்றாம் பரிசாக  ரூ.1000/- என மொத்தப் பரிசுத் தொகை ரூ.6000/-த்தை

சுயமரியாதைச் சுடரொளி தி. பெரியார் சாக்ரடீஸ் நினைவாக திராவிடர் கழக  காப்பாளர் சாமி. திராவிட மணி வழங்கியதோடு போட்டியினை சிறப்பாக நடத்திட முன்முயற்சிகளை மேற்கொண்ட பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் செல்வம் முடியரசன், மாவட்டச் செயலாளர். ந. செல்வராசன்,  நெறியாளராக இருந்து போட்டியை நடத்திய மாநில துணைப் பொதுச் செயலளார் முனைவர் மு.சு. கண்மணி, ஒருங்கிணைப்பை  செய்திருந்த மாநில அமைப்பாளர் ஒ. முத்துக்குமார் ஆகியோருக்கு பொன்துகில் அணிவித்து  பாராட்டினார்.

முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், நல்லதொரு  தீர்ப்பினை வழங்கிய நடுவர்களுக்கும்  நினைவுப் பரிசினையும்  பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் முனைவர் மு.சு. கண்மணி வழங்கியதோடு பேச்சுப் போட்டியினை வெகு சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்திருந்த பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்களையும், ஒத்துழைப்பு நல்கிய திராவிடர் கழக தோழர்களையும் பாராட்டிப் பேசினார்.

மாவட்ட பக தலைவர் செல்வம் முடியரசன் போட்டியில் வெற்றி பெற்றவர்களை வாழ்த்தும் விதமாகவும், நடுவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும்,  நிகழ்ச்சியில் பல்வேறு வகையில் உதவியாய் இருந்த  பகுத்தறிவாளர் கழக மற்றும் திராவிடர் கழகத் தோழர்களுக்கும்  இன்னும் பிற தோழர்களுக்கும் புத்தகப் பரிசுகளை வழங்கி மகிழ்ந்தார்.

கழக பேச்சாளர் என்னாரசு பிராட்லா வெற்றி பெற்றவர்களை வாழ்த்திப் பேசும் போது, கழகப் புரவலர் ஆசிரியர் அவர்களின் முயற்சியால் கொண்டுவரப்பட்ட 69 சதவீத இட ஒதுக்கீடு குறித்தும் அதனால் நாம் அடைந்து வரும் பலன்கள் குறித்தும் இளம் தலைமுறையினர்  அறியும் வகையில் விளக்கிப் பேசினார்.

தொடர்ந்து பேசிய  பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் ஒ. முத்துக்குமார் இவ்வாண்டு புதிதாக பகுத்தறிவாளர் கழகத்தில் இணைந்த  தோழர்களை அறிமுகம் செய்ததோடு,  மாநிலத்தின் சார்பில்  அவர்களுக்கு புத்தகங்களை  பரிசுகளை வழங்கினார்.

மேலும்  இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 51A(H)-குறித்தும் அதனடிப்படையில்   இயங்கக் கூடிய பகுத்தறிவாளர் கழகம் பற்றியும் அதன் கொள்கை பற்றியும்  எடுத்துரைத்ததோடு மாணவர்கள் பேச்சோடு நின்று விடாமல் காலத்தின் தேவையையும், அவசியத்தையும் உணர்ந்து இன்னும் தொடர்ந்து  தேடுங்கள்,  கடமையுணர்ந்து இது போன்ற கழகத்தில் தங்களை இணைத்துக் கொள்ளுங்கள், இணைந்து செயல்படுவோம், இது காலத்தின் தேவை மட்டுமல்ல  கட்டாயம் என கேட்டுக்கொண்டதற்கிணங்க புதிதாக 4 கல்லூரி மாணவர்கள் அதே மேடையில் தங்களை பகுத்தறிவாளர் கழகத்தில்  இணைத்துக் கொண்டனர். இவர்களுக்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் மு.சு-கண்மணி புத்தகப்  பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட கழக செயலாளர் வி.செல்வமணி, மாவட்ட கழக துணைத் தலைவர் கொ.மணிவண்ணன்,  காரைக்குடி மாநகர கழகத் தலைவர் ந. ஜெகதீசன், தேவகோட்டை ஒன்றிய நகரத் தலைவர் வீர. முருகப்பன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட  அமைப்பாளர் தா. பாலகிருட் டிணன், மாவட்ட துணைச் செயலாளர் இரா. முத்துலெட்சுமி, நகர கழக செயலாளர் அ.பிரவீன் முத்துவேல், முனைவர் வி. பாஸ்கர், தோழர்கள்  ஆரோக்கியம், ராஜா முகம்மது ஆகியோர் பேச்சுப் போட்டியில்  கலந்து கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ்களை வழங்கி,  வாழ்த்துகளை தெரிவித்தனர்.

நடுவர்கள், வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவருக்குமான  சான்றிதழ்களை பக மாவட்ட துணைச் செயலாளர் இரா.  முத்துலெட்சமி  வழங்கினார். நிகழ்வின்  இறுதியாக கலந்து கொண்ட தோழர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் பக மாவட்ட துணைச் செயலாளர் இரா.  முத்துலெட்மி நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *