கருத்துப் போர்க்களம், உரிமைப் போர்க் களத்திற்கு வயது முக்கியமல்ல; கொள்கைகள்தான் முக்கியம் – திடச் சித்தம்தான் முக்கியம்!
இது வேடிக்கைப் பார்க்க வந்த கூட்டமல்ல; லட்சியத்திற்காக போராட்டக் களத்தில் உயிரையும் விடுவதற்காகத் தயாராக இருக்கின்ற கூட்டம்!
சென்னை, அக்.16 கருத்துப் போர்க்களம், உரிமைப் போர்க் களத்திற்கு வயது முக்கியமல்ல. கொள்கை கள்தான் முக்கியம். திடச் சித்தம்தான் முக்கியம் என்ற உணர்வோடு நாம் அனைவரும் இங்கே வந்தி ருக்கின்றோம். இது கட்டுப்பாடு மிகுந்த கொள்கைக் கூட்டம். இது வேடிக்கைப் பார்க்க வந்த கூட்டமல்ல. கருத்துகளுக்கு களம் காணுவதற்காக, போராட்டக் களத்தில் தங்களுடைய லட்சியத்திற்காக உயிரையும் விடுவதற்காகத் தயாராக இருக்கின்ற கூட்டம். எனவே, இப்படிப்பட்ட ஓர் அற்புதமான இந்த இடத்தில், உரை யாற்றுவதற்கு வாய்ப்புப் பெற்றமைக்காக, எல்லையற்ற மகிழ்ச்சியை நான் பெறுகிறேன் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
கடந்த 4.10.2025 அன்று காலை செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் உள்ள ஆழ்வார் பேலஸ் மண்டபத்தில் நடைபெற்ற, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
எங்களைப் போன்றவர்கள் எல்லாம் பிறக்காத காலத்தில்…
மிகுந்த எழுச்சியோடும், நெகிழ்ச்சியோடும், மகிழ்ச்சியோடும் நடைபெறக்கூடிய இம்மாநாடு – செங்கற்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடாகும். இங்கே இருக்கக்கூடிய ஒரு சிலரைத் தவிர, எங்களைப் போன்றவர்கள் எல்லாம் பிறக்காத காலத்தில் 1929 ஆம் ஆண்டு நடைபெற்றது செங்கற்பட்டில் சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாடாகும்.
பல உரிமைகளையெல்லாம் சமுதாயம் பெறுவதற்குப் போராடிய இயக்கத்தின் மாநாடு!
அதனுடைய நூற்றாண்டு நிறைவு விழா – அறிவு பிறந்த சமுதாயம், மானம் பிறந்த சமுதாயம், உரிமைப் பெற்ற சமுதாயம், படிப்புரிமை, பதவி உரிமை, பெண்ணு ரிமை இப்படி பல உரிமைகளையெல்லாம் அந்த சமுதாயம் பெறுவதற்கு மக்களை ஒன்று திரட்டிப் போராடிய இயக்கத்தின் மாநாடு நடந்துகொண்டிருக்கின்றது. இந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்கக்கூடிய ஒரு கட்டளையை தோழர்களாகிய நீங்கள் எனக்கு அளித்திருக்கிறீர்கள்.
இந்த மாநாட்டிற்கு உண்மையான தலைவர் தந்தை பெரியார். நான் அவருடைய தொண்டன், அந்தப் பணியைச் செய்யக்கூடியவன். எனவே, அதை நடத்தி வைப்பதற்கு முன்வந்துள்ளேன்.
கொள்கை எதிரிகள்
மருண்டு போயிருக்கிறார்கள்!
நம்முடைய ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறும்போது, இந்த மாநாடு நடைபெறுகிறது. மாலையில், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நிறைவுரையாற்றுகிறார். ‘திராவிட மாடல்’ ஆட்சியைக் கண்டு, திக்கெட்டும் இருக்கக்கூடிய தெளி வுற்றவர்கள் எல்லாம் பாராட்டுகின்றார்கள். கொள்கை எதிரிகள் எல்லாம் மருண்டு போயிருக்கிறார்கள்.
எனவே, அவர்கள் மாயாஜாலத்தைத் தேடுகிறார்கள்; மாயமானைத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில்தான், இந்த மாநாடு கூட்டப்பட்டு இருக்கின்றது.
மாநாட்டினுடைய சிறப்பு –
தந்தை பெரியார்தான்!
நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – இந்த மாநாட்டி னுடைய சிறப்பு என்ன என்று சொல் லும்போது தந்தை பெரியார்தான் அந்த சிறப்பாவார்.
நான் எண்ணிப் பார்த்தேன், கணக்குப் போட்டுப் பார்த்தேன் தோழர்களே, அப்படி கணக்குப் போட்டுப் பார்த்த நேரத்தில், செங்கற்பட்டு சுயமரியாதை இயக்க மாகாண மாநாட்டினை, 1929 இல் தந்தை பெரியார் அவர்கள் நடத்தியபொழுது, அய்யாவிற்கு வயது 50. முறுக்கோடு அவர்கள் இருந்தார்கள்.
இன்றைக்கு அவருடைய தொண்டனுக்கு வயது 92. விரைவில் 93.
உரிமைப் போர்க் களத்திற்கு வயது முக்கியமல்ல; திடச் சித்தம்தான் முக்கியம்!
எனவே, இந்தப் போர்க் களம், கருத்துப் போர்க்களம், உரிமைப் போர்க் களத்திற்கு வயது முக்கியமல்ல. இங்கே கொள்கைகள்தான் முக்கியம். திடச் சித்தம்தான் முக்கியம் என்ற உணர்வோடு நாம் அனைவரும் இங்கே வந்திருக்கின்றோம்.
உங்களையெல்லாம் நான், வருக! வருக! வருக! என்று நெஞ்சார்ந்து வரவேற்கின்றேன்.
எந்தக் கட்சியில் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல; எந்தக் கொள்கையில் இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்!
இதோ எங்களுடைய சகோதரர்கள், அவர்கள் எந்தக் கட்சியில் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல; எந்தக் கொள்கையில் இருக்கிறார்கள் என்பதுதான் மிக முக்கியம்.
இதோ ஒரு குழல்கள் அல்ல; பல குழல்கள் தயாராக இங்கே இருக்கின்றன. அப்படிப்பட்ட அருமையான வாய்ப்பைப் பெற்றிருக்கின்ற இந்த நேரத்தில் உங்களையெல்லாம் தனித்தனியே பெயர் சொல்லி அழைப்பதற்கு நீண்ட நேரம் ஆகும்.
இந்த மாநாடு, ஏராளமான பேர்களுக்கு நெருக்கடி களைக் கொடுத்திருக்கின்றது. எனக்கேகூட தோழர்கள் கட்டளையிட்டார்கள். அதனை நான் வரவேற்கிறேன். “உங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கு கிறோம்‘‘ என்று சொன்னார்கள்.
நீங்கள் பணியாற்ற வேண்டிய நேரம்!
ஆம், அதை நான் வரவேற்கிறேன். ஏனென்றால், இது எங்கள் நேரம் அல்ல; இது உங்கள் நேரம். நீங்கள் பணியாற்ற வேண்டிய நேரம். நாட்டிற்கு மிக முக்கிய மான நேரம்.
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான இந்த நேரத்தில், கண்ணெதிரே இருக்கக்கூடிய நீங்கள் மட்டும் இந்த நிகழ்ச்சியை கேட்டுக்கொண்டிருக்கவில்லை. இதே இடத்தில், மூன்று இடங்களில் இந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.
இங்கே நேரிடையாக உங்களை நான் பார்க்கிறேன். மூன்று இடங்களிலும் காணொலிமூலம் தோழர்கள் கட்டுப்பாட்டோடு பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
கட்டுப்பாடு மிகுந்த கொள்கைக் கூட்டம்!
இது கட்டுப்பாடு மிகுந்த கொள்கைக் கூட்டம். இது வேடிக்கைப் பார்க்க வந்த கூட்டமல்ல. இது கருத்துகளுக்கு களம் காணுவதற்காக, போராட்டக் களத்தில் தங்களுடைய லட்சியத்திற்காக உயிரையும் விடுவதற்காகத் தயாராக இருக்கின்ற கூட்டம்.
எனவே, இப்படிப்பட்ட ஓர் அற்புதமான இந்த இடத்தில், உரையாற்றுவதற்கு வாய்ப்புப் பெற்ற மைக்காக, எல்லையற்ற மகிழ்ச்சியை நான் பெறுகிறேன்.
இங்கே வந்திருக்கின்ற நம்முடைய தலைவர்களை யெல்லாம் வருக, வருக என்று தலைதாழ்ந்து வரவேற்கிறேன்.
இந்த மாநாட்டிற்காக தோழர்கள், கன்னியாகுமரி யிலிருந்து, திருத்தணியிலிருந்து, கருநாடகத்திலிருந்து, மும்பையிலிருந்து, ஜப்பான் நாட்டின், டோக்கி யோவிலிருந்து வந்திருக்கின்றீர்கள்.
‘‘பெரியார் உலக மயம் –
உலகம் பெரியார் மயம்!’’
‘‘பெரியார் உலக மயம் – உலகம் பெரியார் மயம்’’ என்று நிரூபிப்பதற்காக இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கின்றீர்கள்.
பலரும் வியந்து பார்க்கிறார்கள்.
தோழர்களே, இரண்டு மாதத்திற்கு முன்பு, எனக்கு ஒரு பெரிய அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. இன்னும் அந்த அறுவைச் சிகிச்சையிலிருந்து நான் முழுமையாக குணமடையவில்லை.
சிகிச்சையிலிருந்து குணமடைவதற்காக மருந்து களை மருத்துவர்கள் கொடுக்கிறார்கள் என்றால், அது ஒரு பகுதி. ஆனால், நான் முழுமையாக சிகிச்சையைப் பெறவேண்டும் என்று சொன்னால், அதற்காக நான் தேடி, நாடி, ஓடி வந்திருக்கின்ற மருந்துதான் தோழர்களாகிய நீங்கள். உங்களுடைய உற்சாகம். கைகோர்த்துக் கொண்டிருக்கின்ற இந்த இணைப்பு.
ஆரியம் களத்தில் நின்று, எதிரிகளாக இருக்கின்ற வர்களை முறியடித்ததாக வரலாறு கிடையாது!
அதிலும், இப்போது ஆரியம் வாலாட்டிப் பார்க்கிறது. ஆரியம் எப்போதுமே களத்தில் தான் நின்று, எதிரிகளாக இருக்கின்றவர்களை முறியடித்ததாக வரலாறு கிடையாது.
மரத்திற்குப் பின்னால் ஒளிந்து நின்ற இராமனைப் போல, வாலியை வதம் செய்வதற்காக, மரத்திற்குப் பின்னாலிருந்து அம்பு விட்டதைப்போல, சில அம்புகளை ஏவிவிடுகிறார்கள்.
வம்புகள் செய்கின்ற அம்புகளால், நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது!
அதில், காகித அம்புகள் உண்டு; திரைப்பட அம்புகள் உண்டு. வம்புகள் செய்கின்ற அம்புக ளால், நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது. ஏனென்றால், இரும்புக் கோட்டையை நோக்கி காகித அம்புகளும், திரைப்பட அம்புகளும், வம்பு களும் வந்தாலும், அம்புகளுக்குத்தான் சேதாரம் ஏற்படும்.
‘‘தி.மு.க. கூட்டணியில் இருக்கின்றவருக்கு அதிர்ச்சி; இவர் வெளியேறுகிறார்; திருமா அந்தக் கூட்டணியிலிருந்து இந்தக் கூட்டணிக்கு வரப் போகிறார்’’ என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள்.
உங்கள் ஜம்பம் ஒருபோதும் பலிக்காது.
கொள்கை ரீதியாக இந்த இயக்கம் நீடிக்கும்!
கடைசி மதவெறியனை ஒழிக்கின்ற வரைக்கும் இந்த இயக்கம் இருக்கும்.
கடைசி ஜாதி வெறியனை அழிக்கின்ற வரையில் இந்த இயக்கம் இருக்கும். அது தனிப்பட்ட முறையில் அல்ல, கொள்கை ரீதியாக இந்த இயக்கம் நீடிக்கும்.
எப்படி தொற்று நோய்களை அழிக்கின்ற வரையில், மருத்துவர்கள் தேவையோ, மருத்துவமனைகள் தேவையோ, மருந்துகள் தேவையோ – அதுபோலத்தான், இந்த இயக்கத்தினுடைய தத்துவம் தோழர்களே!
எனவே, இதையெல்லாம் எடுத்துச் சொல்லி, மிக நீண்ட அளவிற்கு விளக்கம் தருவதற்கு வாய்ப்பு இல்லை. இந்தக் குறுகிய காலத்தில், நானும் அந்த நேரக் கட்டுப்பாட்டிற்குக் கட்டுப்படவேண்டியவனாக இருக்கின்றேன்.
மாலை நிகழ்ச்சிக்கு இயற்கை ஒத்துழைக்கும் என்றாலும், இங்கே சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – மாநாட்டுத் தலைமை உரைக் குறிப்புகள் என்று, இதுவரை நான் உட்கார்ந்து தயாரித்து உரையை எழுதியது என்பது மிக மிகக் குறைவு. உடனடியாக அந்த உரை அச்சிட்டு வந்திருக்கின்றது, உங்களுக்கெல்லாம் கிடைக்கும். அதில் பல கருத்துகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.
சுருக்கமாக உங்களுக்குச் சொல்லவேண்டுமானால், இங்கே புத்தகங்களை வெளியிட்டார்கள். இங்கே என்னுடைய சகோதரர்கள் வந்திருக்கிறார்கள். மூத்த வர்கள் அமர்ந்திருக்கின்றீர்கள். தாய்மார்கள், சகோதரிகள் அமர்ந்திருக்கின்றீர்கள்.
இந்த இயக்கத்தினுடைய
தனிச் சிறப்பு!
பெண்ணடிமை இருந்த ஒரு சமுதாயத்தில், பெண்களும், அபலைகளும், விதவைகளும் அடிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரு சமுதாயத்தில் அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்ததுதான் இந்த இயக்கத்தினுடைய தனிச் சிறப்பகும். செங்கற்பட்டு சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாட்டில் போட்ட தீர்மானங்கள்தான் – இன்றைய அர சாங்கச் சட்டங்கள். இன்றைய தீர்மானங்கள், நாளைய அரசாங்கச் சட்டங்கள்.
இப்படி ஓர் இயக்கத்தை, இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றில் எளிதாகக் கண்டுபிடிக்க முடியுமா?
அரசியலுக்குப் போகாத ஓர் இயக்கம் – அரசியலமைப்புச் சட்டங்களைத் திருத்தியிருக்கிறது!
அரசியலுக்குப் போகாத தந்தை பெரியார், பதவிக்குப் போகாத தந்தை பெரியார், தேர்தலில் நிற்காத பெரியார், ஓர் இயக்கம் – அரசியலமைப்புச் சட்டங்களைத் திருத்தி யிருக்கிறது.
ஒரு திருத்தம் மட்டுமல்ல நண்பர்களே, பெரியார் காலத்தில் மட்டுமல்ல; முதலாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் எதற்காக தெரியுமா? வகுப்புரிமைக்காக, சமத்துவவுரிமைக்காக, எல்லோருக்கும் வாய்ப்பில்லை என்பதற்காக. பெரியாருக்குப் பிறகு அவரது பணி தொடர்ந்து நடக்காது – அது தீர்ந்தது. கலைஞருக்குப் பிறகு, அரசியலில் வெற்றிடம் என்றெல்லாம் கணித்தார்கள், பெரியாருக்குப் பிறகு, திராவிடர் கழகம் இருக்காது. அப்படியே இருந்தாலும் ஊருக்கு ஒரு நான்கு கிழவர்கள் இருப்பார்கள்.
லட்சோப லட்ச இளைஞர்கள் இங்கே அணிவகுத்து வந்திருக்கின்றார்கள்!
பெரியாரோடு முடிந்து போய்விடும் என்று கணித்தவர்களின் நினைப்பை, பொய்யாக்கி, லட்சோப லட்ச இளைஞர்கள் இங்கே அணிவகுத்து வந்திருக்கின்றார்கள். ஏராளமான தாய்மார்கள், சகோதரிகள் இங்கே வந்திருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட இந்த இயக்கத்தில் நிறை வேற்றிய தீர்மானங்களால்தான் பெண்ணுரிமை, இன்றைக்கு இந்த அளவிற்கு வளர்ந்திருக்கின்றது.
இந்த இயக்கம், இரண்டு தத்துவப் போர்க ளுக்கிடையில், இன்னமும் தேவைப்படுகிறது.
பெரியாருடைய உழைப்பினால். பலனடைந்தாலும் அவர்களில் சில பேர், நுனிப்புல் மேய்கிறவர்கள்!
நூற்றாண்டுகளுக்கு முன்பு, பெரியார் பார்ப்பன எதிர்ப்பு இயக்கத்தை நடத்தினார். இப்போது அது தேவையா? என்று கொஞ்சம் ஆதங்கப்படுகின்றவர்கள் இருக்கின்றார்கள் அல்லவா, பெரியாருடைய உழைப்பி னால். பலனடைந்தாலும் அவர்களில் சில பேர், நுனிப்புல் மேய்கிறவர்கள்; குழாயை மாட்டிக்கொண்டு, கணினியைத் தட்டிக் கொண்டிருக்கின்றவர்கள் – அதை மட்டுமே பார்த்து, தங்களுடைய வாழ்வில் எல்லாம் சரியாக இருக்கிறது என்று தப்புக் கணக்குப் போடுகிறவர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.
இந்த இயக்கம் சாதித்து என்னவென்று கேட்பவர்களுக்கு…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டினை நடத்துகிறார்களே, அப்படி என்ன அந்த இயக்கம் சாதித்துவிட்டது என்று கேட்கின்றவர்களுக்கு ஒன்றே ஒன்று.
வீதி வீதியாகக் கேளுங்கள் தோழர்களே, தெருத் தெருவாகப் பிரச்சாரம் செய்யுங்கள்.
நூறாண்டுகளுக்கு முன்னால், தோளில் துண்டு போடுகின்ற உரிமை நமக்கு உண்டா?
நூறாண்டுகளுக்கு முன்பு, கால்களில் செருப்புப் போடுகின்ற உரிமை நமக்கு உண்டா?
அதுமட்டுமல்ல, நம்முடைய சகோதரரிகள், தாய்மார்கள் இங்கே அமர்ந்திருக்கின்றார்களே, அவர்களுக்கு நூறாண்டுகளுக்கு முன்பு நாற்காலியில் அமர்ந்திருக்கின்ற இந்த வாய்ப்பு உண்டா?
தந்தை பெரியார்தான் சொன்னார், “மக்கள் தொகை யில் 50 சதவிகிதம் பெண்கள் என்றால், அவர்களுக்கு 50 சதவிகிதம் கொடுக்கவேண்டும்’’ என்றார்.
இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சி!
அதைச் செய்து காட்டி, அமர்ந்திருக்கின்ற ஆட்சி தான், இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சி, மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
அதனால்தானே, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் துடிக்கின் றார்கள்; அதனால்தானே, ஆரியம் இன்றைக்கு நெருப்பில் கை வைத்ததைப்போல துடிக்கின்றது. இதனை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டாமா?
(தொடரும்)