‘துக்ளக்’கில் இரண்டு கார்ட்டூன்கள்! வன்முறையைத் தூண்டும் ‘துக்ளக்’ மீது சட்டம் பாயுமா?-மின்சாரம்

6 Min Read

22.10.2025 நாளிட்டு – நேற்று வெளிவந்த ‘துக்ளக்’ ஏட்டில் அட்டைப் படக் காட்டூன் இதோ:

‘நீதித் துறையிலும் இடஒதுக்கீடு தேவை’ என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணியின் நீண்ட நாள் கருத்தை அட்டைப் படம் போட்டு விளம்பரம் செய்துள்ள ‘துக்ளக்’ ஏட்டின் ஆசிரியர் திருவாளர் குருமூர்த்திக்கு ஒரு சபாஷ் போடலாம் தான்!

‘பார்ப்பானுக்கு முன்புத்தி கிடையாது’ என்பதற்கு மேலும் ஒரு சான்று இது.

முதலமைச்சரையும் திராவிடர் கழகத் தலைவரையும் கேலி செய்வதாக நினைத்துக் கொண்டு, கடைசியில் திராவிடர் கழகத் தலைவர் ‘நீதித் துறையிலும் சமூக நீதி தேவை’ என்று தொடர்ந்து வலியுறுத்திவரும் கருத்தினை ‘துக்ளக்’ வாசகர்களுக்குத் தெரிவித்து விட்டாரே! குருமூர்த்தி அய்யர்வாள்!

ஈரோட்டில் தி.மு.க. மண்டல மாநாடு பெருந்துறையில் நடந்தது (2018 மார்ச்சு 24 மற்றும் 25).

அந்த மாநாடு நடந்து முடிந்த நிலையில் ‘துக்ளக்’கில் – திருவாளர் குருமூர்த்தி அய்யர் என்ன எழுதினார்?

“அம்மாநாடு தி.க.வின் நிலையைத் தழுவுவது போல் தோன்றுகிறது” என்று புலம்பினாரா இல்லையா?

அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் “நாங்கள் செல்லும் பாதையை பெரியார் திடல்தான் தீர்மானிக்கிறது” என்று தி.மு.க. தலைவர் மானமிகு மு.க.ஸ்டாலின் செவிளில் அறைந்தமாதிரி பதில் சொன்னாரே!

மின்சாரம்

இவ்வாண்டு அக்டோபர் 4 அன்று செங்கற்பட்டு மறைமலைநகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் முதல் அமைச்சர்  மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் “என்னை வழிநடத்தும் நல்லாசிரியர்தான் நம்முடைய தகைசால் தமிழர் ஆசிரியர் அய்யா அவர்கள்!” என்று பளிச்சென்று சொல்லவில்லையா? கருப்புச் சட்டைக்காரர்களுக்கு ஒரு “சல்யூட்டும்‘ அடித்தாரே!

‘துக்ளக்’ அட்டைப் படக் கார்ட்டூனிலும் திராவிடர் கழகத் தலைவரிடம் முதலமைச்சர் ஆலோசனை கேட்பது போல் தானே சித்தரிக்கப்பட்டுள்ளது.

மீன் பிடிக்கப் போய் முதலையிடம் சிக்கிய கதையாக அல்லவா இருக்கிறது புத்தி பேதலித்த குருமூர்த்தியின் கதை.

5.7.2017 ‘துக்ளக்’கில் (பக்கம் 12, 13இல்) தி.மு.க.வுக்கு அறிவுரை சொல்லுகிறார் இந்த ஆரியப்புத்திரர்; அதையும் கேளுங்கள்! கேளுங்கள்!!

கேள்வி: மு.க.ஸ்டாலின் குறைபாடுகள் மாறிவிட்ட நிலையில், அவரை ஆதரிக்க உங்களுக்கு ஏன் மனம் வரவில்லை?

பதில்: தி.மு.க.வின் சிந்தனையிலும், திசையிலும் மு.க.ஸ்டாலின் மாற்றம் கொண்டு வருவார் என்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது. இப்போதுகூட இல்லை என்று சொல்ல மாட்டோம். ஆனால் திராவிட சமுதாய – அரசியல் நம்பிக்கைகளிலிருந்து வெகுவாக விலகி, கடந்த 50 ஆண்டுகளில் ஆன்மிக மயமாக மாறிவிட்ட தமிழ்நாட்டுக்கு உகந்த சமுதாய – அரசியல் சிந்தனை இன்னும் தி.மு.க.வில் உருவாகவில்லை. உதாரணமாக இப்போது எதற்கு ஹிந்து எதிர்ப்பு? மேலும் அண்ணாவாலேயே கைவிடப்பட்ட – திராவிட நாடு உள்பட தி.மு.க.வின் பல கொள்கைகள் நீர்த்துப் போய் விட்டன என்றும் தெரியும். பிறகு இப்பொழுது அந்தக் கொள்கைகளை நினைவூட்டும், தி.மு.க.வின் சரித்திரத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

மின்சாரம்

இதை எல்லாம் பார்க்கும் போது மாறுவதா வேண்டாமா என்று ஸ்டாலின் குழம்புகிறார் என்று தோன்றுகிறது.

1963இல் அண்ணா, தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கையைக் கைவிட தைரியமாக முடிவெடுத்தது போல் தி.மு.க.வுக்குப் புது வடிவம் கொடுக்க ஸ்டாலின் முன்வரவேண்டும்.

அண்ணா அன்று அந்த முடிவை எடுக்கவில்லை யென்றால், இன்று தி.மு.க.வே இருந்திருக்காது.

அதுபோல் தைரியமாக ஸ்டாலின் செய்தால், அவர் மாறுகிறார் என்று ஏற்கலாம். அப்படிப்பட்ட மாற்றம் தி.மு.க.வுக்கு நல்லது தமிழ்நாட்டுக்கு அவசியம்”

(‘துக்ளக்‘, 5.7.2017 பக். 12, 13)

‘நரியை நனையாமல் குளிப்பாட்டுவது’ என்று சொல்லுவார்களே, அந்தப் பார்ப்பன நரித்தனம் தி.மு.க.வுக்கு அறிவுரை கூறுவதில் முழு நிர்வாணமாகவே தெரியவில்லையா?

தி.மு.க.வுக்கு அறிவுரை கூறிட இவர் யார்? ‘காக்கா நீ அழகாய் இருக்கிறாய் – வாயைத் திறந்து ஒரு பாட்டுப் பாடு என்றதாம் நரி; நரியின் நோக்கம் காகம் வாயில் இருக்கும் வடை மீது தான்; காகம் வாய் திறந்து பாடினால் வடை சுலபமாகக் கிடைக்கும் அல்லவா?’

ஆரியத்தின் தந்திரத்தை ‘ஆரிய மாயை’ நூலில் அண்ணா  அழகாகப் பிடித்துக் காட்டியுள்ளாரே! திராவிடர் கழகம் என்று திராவிடத்தை உள்ளடக்கிப் பெயர் சூட்டியதே இந்த ஆரியத்தைப் பிரித்துக் காட்டத்தானே! இந்த ஆரியம் தான் ஆண்டாண்டு காலம் திராவிடத்தை ஜாதிப் பிளவுக்கு ஆட்படுத்தியது.

கடவுளைக் காட்டி, மதத்தைக் காட்டி, வேதத்தைக் காட்டி, புரட்டு சாஸ்திரங்களைக் காட்டி, மூடப்பக்தியையூட்டி மலையிலிருந்து உருட்டி விட்டது – இந்த ஆரியம் தானே!

ஆதிக்கப் புரியைத் தன் கையில் கொண்டு வர எத்தனை நயவஞ்சக மையைத் தடவி ‘துக்ளக்’கில் கட்டம் கட்டுகிறது.

தி.மு.க. கொள்கையிலிருந்து மாறுவதா, வேண்டாமா என்று ஸ்டாலின் குழம்புகிறாராம்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆரியத்தின் நயவஞ்சக வலையை அறுத்துக் கூறுபோட்டு தோரணமாகத் தொங்க விடப்பட்டதே. அதைப் புதுப்பிக்க ‘நரி-காகம்’ பாணியில் கதையளப்பதா? “தந்திரமூத்தியே போற்று!” என்று ஆரியத்தைப் பற்றி ஆபி டுபே சொன்னதை அறிஞர் அண்ணா அவர்கள் அருந்தமிழில் படம் பிடித்துச் சென்றுள்ளாரே!, அந்தக் கதையின் நோக்கம் மிச்ச நச்சம் இருந்தால், அதுவும் புதைகுழிக்குப் போக வேண்டியதுதான்.

தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கையைக் கைவிட தைரியமாக முடிவெடுக்க வேண்டுமாம், தைரியமாக முடிவெடுத்தால் இவர் மாறுகிறார் என்று ஏற்கலாமாம்!

மரத்தைச் சுற்றிப் பிணைந்திருக்கும் மலைப்பாம்பு போல் இந்த 2025ஆம் ஆண்டிலும் நாக்கில் தேன் தடவுகிறது – ஏற்கலாமாம் – இவர்களின் ஏற்புக்குத்தான் திமுக ஏங்கிக் கிடக்கிறதா?

தூக்கி வைத்துக் கொஞ்சுவது போல தொப்பொன்று தூக்கி எறிய ஆரிய குருமூர்த்தி நரிகள் பழைய பஞ்ச தந்திரக் கதைகளுக்குப் புது சோடனைகள் என்ற மோகினி அவதாரத்தை எடுக்கப் பார்க்கிறது! ‘உனக்கும் பேப்பே, உன்  அப்பனுக்கும் பேப்பே!’ என்ற அஸ்திவாரப் பலத்தைப் போட்டுக் கொடுத்துதான் போயிருக்கிறார் பகுத்தறிவுப் பகலவன் – புத்துலகத் தொலைநோக்காளர் தந்தை பெரியார்.

அவர் மறைந்து 52 ஆண்டுகள் ஆன நிலையிலும் ஆரியத்தை தூங்க விடாமல் பதற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார். 21 மொழிகளில் அவரின் கருத்துக் கருவூலங்கள் உலகெங்கும் உலா வந்து கொண்டுள்ளன.

தந்தை பெரியார் பிறந்த நாளை ‘சமூகநீதி நாள்’ என்று அரசே அதிகாரப்பூர்வமாக அறிவித்ததோடு அல்லாமல் அந்நாளில் தலைமைச் செயலாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை சமூக நீதி உறுதிமொழி எடுக்க வைக்கப்பட்டுள்ளது என்பதை குருமூர்த்திகள் மறக்க வேண்டாம் – மறைக்க முடியாது.

இரண்டாவது கார்ட்டூன் ‘துக்ளக்’ 39ஆம் பக்கத்தில்.

இதன் உள்ளடக்கம் என்ன? “ஸநாதனத்துக்கு எதிராகப் பேசின சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மேலேயே செருப்பு வீசுறான். ஸநாதனத்தைக் கேவலப்படுத்தி நாங்க பேசாத பேச்சா? இங்கே ஒரு ஹிந்துவுக்குக் கூட அப்படி ரோஷம் வரலையே? அப்ப நாமதான் ஜெயிக்கணும்?”

“சனாதனத்துக்கு எதிரான சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மேலேயே வடநாட்டுல் செருப்பு வீசுறாங்க” என்கிறது துக்ளக்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மாண்பமை பி.ஆர்.கவாய் ஸநாதனத்துக்கு எதிரா பேசினாரு என்கிறார் திருவாளர் குருமூர்த்தி.

ஓர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறாததைக் கூறியதாக அபாண்டமாகக் பழி சுமத்துகிறார் என்றால் – இவர் மீது சட்டப்படியாக எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன என்பதே வெகு மக்களின் கேள்வி. சட்டம் அறிந்தவர்களின் முக்கியமான கேள்வி.

மற்றொன்று, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி மேல் செருப்பு வீசியுள்ளான். ஸநாதனத்தைக் கேவலமாக பேசுகிறார்களே இவர்களைத் தாக்க எவரும் வரலையே என்று  வன்முறையைத் தூண்டும் வகையில் அதன் ஆசிரியர் திருவாளர் எஸ்.குருமூர்த்தி எழுதியுள்ளாரே – துக்ளக்கில் கார்ட்டூன் மூலம் வன்முறையைத் தூண்டுகிறாரே – இவர் மீது மாநில அரசே நடவடிக்கை எடுக்கலாம்.

பிறப்பில் பேதம் பேசும் ஸ்நாதனத்தை எதிர்த்துப் பேசாமல் இருந்தால் தூக்கி வைத்துக் கொஞ்ச வேண்டுமா!

ஒன்றியத்தில் காவிகளின் ஆட்சி அதிகாரம் இருப்பதால் துளிர்விட்டுள்ளதா என்ற கேள்வி எழத்தான் செய்யும்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பை வீசியவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் வன்முறையைத் தூண்டும் வகையில் எழுதும் ‘துக்ளக்’கின் மீதும், அதன் ஆசிரியர் குருமூர்ததி மீதும் நடவடிககை பாயாதது ஏன்? என்ற கேள்வி வெகு மக்கள் மத்தியில் கோபக் கனல் போல் எழுந்து நிற்கிறது என்பதை அரசின் கவனத்துக் கொண்டு வருவது நமது கடமை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *