தொட்டியம், அக். 15- தொட்டியம், சிறீசபரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் கராத்தே & சிலம்பம் மகாகுரு, பி.எம்.சேகர் சிலம்பக் கலைக் கூடம் ஆகியவை இணைந்து நடத்திய, மாநில அளவிலான 3ஆம் ஆண்டு சிலம்பப் போட்டிகள், திருச்சி சிறீரங்கத்தில் கடந்த 05.10.2025ஆம் தேதியன்று நடைபெற்றது.
இப் போட்டிகளில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் அய்ந்தாம் வகுப்பு மாணவி சி. ஷிஃபா 10 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் ஒற்றைக் கம்புப் போட்டியில் மாநில அளவில் முதலிடத்தோடு தங்கப் பதக்கமும், 14 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில், ஏழாம் வகுப்பு மாணவி பி.ஆர்.ஜனீஷாசிறீ வேல்கம்புப் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடத்தோடு வெள்ளிப் பதக்கமும் வென்று பள்ளிக்குப் பெருமை தேடித் தந்துள்ளனர்.
மாணவிகளின் இந்த வெற்றிக்குப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.