இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கேம்பிரிட்ஜ் தெற்காசிய மன்றத்தில் கடந்த 10-10-2025 அன்று, ‘திராவிட மாடலும் கல்வியும்: சாதனைகள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில், மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆற்றிய உரை பின்வருமாறு:-
கேம்பிரிட்ஜ் தெற்காசிய மன்றத்தின் மாண்புமிகு உறுப்பினர்களே, மதிப்புமிக்க பேராசிரியர்களே, மாணவர்களே வணக்கம்!
தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக மட்டுமல்ல. திராவிட மாடல் கல்வியின் மூலம் லட்சக் கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்து, எங்கள் அரசுப் பள்ளிகளைப் பெருமையின் அடையாளமாக மாற்றிய சாதனைகளையும் சவால்களையும் நேரில் கண்டவனாக இந்த அரங்கில் நான் நிற்கிறேன்.
சர் அய்சக் நியூட்டன் போன்ற அறிவியல் மேதைகள் உரை நிகழ்த்திய மகத்துவமான வரலாறு கொண்ட இந்த அரங்கில், அவருடைய அறிவியல் கண்டுபிடிப்புக்கும் திராவிட மாடல் எனும் சமூக மாற்றத்துக்கும் இடையேயான ஆழமான தொடர்பை உணர்கிறேன்.
ஒளிக் கீற்றில் மறைந்திருந்த நிறக்கற்றைகளை நியூட்டன் கண்டறிந்ததுபோல, எங்கள் திராவிட மாடல் ஒவ்வொரு குழந்தையின் பிறப்பு மற்றும் பொருளாதாரச் சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், அவர்களுக்குள் மறைந்து இருக்கும் திறன்களைக் கல்வியால் வெளிக்கொண்டுவந்தபடி இருக்கிறோம்.
வரலாற்று அடித்தளம்: மரபான அறிவும்
நவீனக் கொள்கையும்
எங்களுடைய இந்தக் கல்விப் பயணம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலான தமிழ் மரபில் வேரூன்றியுள்ளது. எங்கள் சங்க இலக்கியத்தில், கணியன் பூங்குன்றனார் எழுதிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் புகழ்பெற்ற வரிகள் உலக மாந்தர்களிடையேயான மனிதநேயத்தை வெளிப்படுத்துகிறது.
ஈராயிரம் ஆண்டுகளாக எங்கள் தமிழ்ச் சமூகம் உயிர்ப்புடன் சுமக்கும் இந்த உணர்வு
அய்.நா மன்றம் வரையிலும் மேற்கோள் காட்டப்பட்டு, தமிழ் மரபின் உலகளாவிய மதிப்பு அனைவராலும் கொண்டாடப்படுகிறது.
கடந்த நூற்றாண்டில் எங்கள் பாரதி சொன்னார். “சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்று. இது எங்களுடைய நவீன கொள்கைகளின் அறைகூவல். இந்த இரண்டு பாடல் வரிகளையும் ‘உலகளாவிய மனிதநேயம், அறிவுத் தேடல், எல்லார்க்கும் எல்லாம்’ எனும் திராவிட மாடலின் அடிப்படைக் கொள்கைகளுக்கு ஓர் அடையாளமாக என்னால் குறிப்பிட முடியும். இந்தக் கொள்கைச் சுடரில் வேர்விட்ட தலைவர்களின் வழி வந்தவனாக நான் இங்கு நிற்கிறேன்.
1910ஆம் ஆண்டுகளில் கல்வியும் வேலைவாய்ப்பும் சில முன்னேறிய வகுப்பினருக்கு மட்டுமே கிடைத்துவந்த சூழலில், திராவிட இயக்கத்தின் ஆரம்ப விதையான நீதிக்கட்சி உருவானது. டாக்டர் சி.நடேசனார், டி.எம்.நாயர், சர்.பி.தியாகராஜர், பனகல் அரசர் இராமராய நிங்கர் உள்ளிட்ட திராவிட இயக்க முன்னோடிகள், கல்வியே தமிழ்ச் சமூகத்தை உயர்த்தி, சமத்துவத்தை நிலைநாட்டும் ஒரே கருவி என்று உறுதியாக நம்பினார்கள். அரசியல் இயக்கம், பொது விவாதங்கள், அதிகாரம் பெறுதல், சட்டமியற்றுதல் எனும் ஜனநாயக வழியில் கல்விப் புரட்சியை ஏற்படுத்தினார்கள்.
1920இல் முதன்முதலாகத் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்த நீதிக்கட்சி, கல்வியை வலுப்படுத்துவதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுத்தது. 1923இல் நீதிக்கட்சி கொண்டுவந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கம்யூனல் ஜி.ஓ எனும் வகுப்புவாரி அரசாணை, ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடலுக்கான அடித்தளத்தை அமைத்து, தனது கல்விப் புரட்சியைத் தொடங்கியது.
தந்தை பெரியார் அவர்கள் நீதிக்கட்சியை வழிநடத்தி, திராவிட இயக்கத்தை நிறுவி, சுயமரியாதை மற்றும் பகுத்தறிவுக் கொள்கைகளின் மூலம் சமூகரீதியிலான அறிவுப் பரவலுக்கு ஒளியேற்றினார். அவர் ஏற்றிய சுடர் இன்றும் திராவிட மாடலின் கல்வி முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக உள்ளது.
தந்தை பெரியார் வழியில் வந்த தளகர்த்தர் எங்கள் பேரறிஞர் அண்ணா, திராவிட இயக்கத்தைத் தேர்தல் அரசியல் களத்திற்குக் கொண்டுவந்தார். அவர் தலைமையில் நடந்த மொழிப் போராட்டங்கள் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையை வலுப்படுத்தின, பாதுகாத்தன.
வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அவை மொழி அடையாளப் போராட்டமாகவோ அல்லது மொழித் திணிப்புக்கு எதிரான போராட்டமாகவோ தோன்றலாம். ஆனால், முன்நோக்குச் சிந்தனையுடன் பேரறிஞர் அண்ணா, மொழித் திணிப்பின் தாக்கத்தை முன்கூட்டியே உணர்ந்து, ‘இரு மொழிக் கொள்கை’ எனும் எங்கள் கல்வி உரிமைக்கான கேடயத்தை எங்கள் கைகளில் அளித்துச் சென்றார்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா கட்டமைத்த சமூகநீதிக் கொள்கைகளால் உருவான நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழறிஞர் கலைஞர், அனைவருக்கும் கல்வி, ஒரே சமச்சீரான கல்வி எனும் சமூகநீதிக் கோட்பாடுகளால் மாபெரும் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தினார்.
நுழைவுத் தேர்வு ரத்து, இலவசப் பேருந்துப் பயணம், சீருடைகள், முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டண விலக்கு, பெண்களுக்கான தொழிற்பயிற்சி, கல்லூரிகள் அமைத்தல் என அவரது புரட்சிகர நடவடிக்கைகள் புதிய கல்விக் கனவுகளை நனவாக்கின. தமிழ்நாடு முழுவதும் கட்டியெழுப்பிய கல்வி நிறுவனங்கள், ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ எனும் அடையாளத்தை உருவாக்கின.
இன்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், திராவிட பாரம்பரியத்தின் தொடர்ச்சியை நாம் காண்கிறோம். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திறன் மேம்பாட்டுத் திட்டம், மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் கொண்டுவரப்பட்ட 70-க்கும் மேற்பட்ட புரட்சிகரத் திட்டங்கள் இன்று எங்கள் திராவிட மாடல் கல்வி முறையை புதிய உயரங்களுக்கு எடுத்துச் சென்றிருக்கின்றன.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, நீதிக்கட்சி ஆட்சி தொடங்கி இன்று வரை, ஒவ்வொரு திராவிட இயக்கத் தலைவர்களும், அனைவருக்கும் கல்வி, கல்வியின் மூலம் சமத்துவம், சமூகநீதிப் பரவலாக்கம் உள்ளிட்ட திராவிட மாடல் கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றி வருகின்றனர்.
நீதியின் நூற்றாண்டு: திராவிடப் பரிணாமம்
சமூகநீதியை எவ்வாறு அடைந்தோம்? 1920களில் சென்னையில் ஆயிரம் விளக்குப் பகுதியில் நீதிக்கட்சித் தலைவர்கள் ‘இலவச மதிய உணவுத் திட்டத்தை’ முதலில் அறிமுகப்படுத்தினார்கள். அது வறுமைக்கு எதிரான திட்டம் மட்டுமல்ல, ஜாதி அடிப்படையிலான பாகுபாட்டிற்கு எதிரான ஆயுதமாகவும் இருந்தது.
வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த நாளுக்கு முன்பு, பட்டியல், பழங்குடிச் சமூகங்கள், இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் ஒன்றாக அமர்ந்து, கல்வி கற்க முடியாத சமூக அமைப்பு இருந்தது.
நீதிக்கட்சி ஆட்சி, இலவச மதிய உணவை அறிமுகப்படுத்தியபோது, ‘ஜாதி, வகுப்பு, அல்லது சமூகப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு குழந்தையும் ஒன்றாக அமர்ந்து, உணவு உண்ணும், ஒன்றாகக் கற்கும். உணவு உண்ணும் இடம் சமத்துவத்தின் முதல் வகுப்பறையாக இருக்கும்’ எனும் புரட்சிகர அறிவிப்பை வெளியிட்டது.
ஒரு நூற்றாண்டு கழித்து, மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூகநீதிப் பார்வையில், 2022 செப்டம்பர் 15 அன்று இந்தியாவின் முதல் காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இன்று, இந்த புரட்சிகர முயற்சி 32,000+ பள்ளிகளில் 20.59 லட்சம் மாணவர்களுக்குச் சேவையாற்றுகிறது. இன்று எல்லா பின்னணியைச் சேர்ந்த குழந்தைகளும் ஒன்றாக அமர்ந்து காலை உணவு உண்ணும்போது, 1920இல் தொடங்கிய அதே புரட்சிகரச் செயலில் பங்கேற்கிறார்கள் .
பகிரப்பட்ட மாண்பின் மூலம்
தடைகளை உடைப்பது
இதன் முடிவுகள் ஆச்சரியமளிக்கின்றன:
40% வருகைப் பதிவு அதிகரிப்பு
* இடைநிற்றல் குறைவு
* கவனம் அதிகரிப்பு
* ஊட்டச்சத்துக் குறைபாடு குறைவு
மேலும், இந்தத் திட்டங்கள் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும், கனடா மற்றும் இங்கிலாந்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
திராவிட மாடலின் மய்யக் கொள்கைகள்
திராவிட மாடல் கல்வியானது அய்ந்து அடிப்படைத் தூண்களை அடிப்படையாகக்கொண்டது
முதலாவது: உலகளாவிய அணுகல் – “எல்லார்க்கும் எல்லாம்”
நாங்கள் இலவசக் கல்விக்கு அப்பாற்பட்ட ஒரு விரிவான சூழலை உருவாக்கியுள்ளோம். இதில் இலவச சைக்கிள்கள் (ஆண்டுக்கு 5.47 லட்சம்), மடிக்கணினிகள் (15.7 லட்சத்திற்கு மேல் வழங்கப்பட்டுள்ளன), பேருந்துப் பயண அனுமதி, சீருடைகள், பாடப்புத்தகங்கள் ஆகியவை அடங்கும்.
இரண்டாவது: சமூகநீதி மூலம் உள்ளடக்கம்
எங்கள் திட்டங்கள் உள்ளடக்கத்தின் (inclusivity)
டி.என்.ஏவை உள்ளடக்கியவை; அவை வெறும் நலத் திட்டங்கள் அல்ல, மாறாக மேம்பாடு.
* ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் மூலம், அரசுப் பள்ளிகளில் பயிலும் 2.73 லட்சத்திற்கு மேற்பட்ட இளம் பெண்கள் உயர்கல்வி பயில மாதந்தோறும் ரூ.1,000 பெறுகின்றனர்.
* தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலம் 3.28 லட்சத்திற்கு மேற்பட்ட ஆண் மாணவர்களுக்கு ஆதரவு வழங்கப்படுகிறது. வாய்ப்பு பாலினத்தைப் பொருட்படுத்தாமல் வழங்கப்படுகிறது.
உள்ளடக்கத்திற்கான எங்கள் உறுதிப்பாடு, எண்களுக்கு அப்பாற்பட்டது. மாற்றுத்திறனாளி மாணவர்களின் பதிவு 85.19% உயர்ந்துள்ளது. அன்புக் கரங்கள் திட்டத்தின் மூலம், ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 ஆதரவு வழங்கப்படுகிறது, அவர்களுக்கு நிதி உதவி மட்டுமல்ல, பரிவு மற்றும் உரிமையுணர்வையும் வழங்குகிறது.
மூன்றாவது: சிறப்பை ஜனநாயகப்படுத்துதல்
ஸ்மார்ட் போர்டுகள், மேம்படுத்தப்பட்ட ஆய்வகங்கள், மற்றும் டிஜிட்டல் திறன்களுடன் கூடிய ஆசிரியர்கள் என எங்கள் பள்ளிகளை நவீன வசதிகளுடன் பொருத்தியுள்ளோம். கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்கள் ஒரே மாதிரியான நவீனக் கற்றல் சூழலைப் பெறுகின்றனர். புவியியல் எல்லைகளை உடைத்து, எங்கள் மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் போன்ற முன்னோடித் துறைகளில் அனுபவம் பெறுகின்றனர். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து TEALS திட்டத்தின் மூலம் தொழில்நுட்பக் கல்வியை மேலும் வலுப்படுத்தியுள்ளோம்.
நான்காவது: மாற்றத்தை
வழங்கும் திட்டங்கள்
எங்கள் கொள்கைகள் அளவிடக்கூடிய முடிவுகளை அடிப்படையாகக்கொண்டவை. இலவசப் பேருந்துப் பயண அனுமதி கிராமப்புற மாணவர்களின் இடைநிற்றலைக் குறைத்துள்ளது. மாணவர்களுக்கான நிதி உதவிகள் உயர்கல்விப் பதிவைத் தேசியச் சராசரியைவிட உயர்த்தியுள்ளன. ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் 0% இடைநிற்றல் விகிதத்தை அடைந்த முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
அய்ந்தாவது: மொழி மற்றும்
கலாச்சார பெருமை
எங்கள் தமிழ் அடையாளத்தைக் கொண்டாடும் அதே வேளையில், உலகளாவிய அறிவைத் தழுவுகிறோம். எங்கள் இரு மொழிக் கொள்கை, மொழிப் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கிறது. அதே நேரத்தில், பன்னாட்டுப் போட்டித்தன்மையை உறுதி செய்கிறது.
கல்வி சிறப்பு: உலகளாவிய அங்கீகாரம்
NIRF 2025 தரவரிசையின்படி, இந்தியாவின் முதல் 100 உயர்கல்வி நிறுவனங்களில் 17 தமிழ்நாட்டில் உள்ளன.இது தேசத்தின் முதன்மை நிறுவனங்களில் 17 ஆகும். IIT மெட்ராஸ் முதல் இடத்திலும், அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசுப் பல்கலைக்கழகங்களில் இரண்டாம் இடத்திலும் உள்ளன.
செஸ் வீரர்களான குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோர் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் தங்களின் தனித்துவத்தை நிரூபித்தவர்கள். மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ‘தமிழ்நாடு சாம்பியன்ஸ்’ முயற்சி அவர்களுக்கு ஒவ்வொரு படியிலும் ஆதரவளித்துள்ளது.
எங்கள் முதன்மைத் திறன் மேம்பாட்டுத் திட்டமான ‘நான் முதல்வன்’ மூலம், வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப உலகில் மாணவர்கள் தங்கள் இடத்தைப் பிடித்து பிரகாசிக்க வலுவான அடித்தளத்தை உருவாக்குகிறோம். வருங்காலத்தில், ‘திராவிட மாடலால் உயர்ந்தோம்’ என அவர்கள் பெருமையுடன் கூறுவார்கள்.
எனது பயணம்
2021இல் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றேன். திராவிட இயக்கக் குடும்பத்தில் பிறந்து, திராவிட மாடல் கல்வியால் பயனடைந்து, ஒவ்வொரு மாணவருக்கும் வலுவான கல்வி அடித்தளத்தை உருவாக்க எங்கள் மாநிலம் எதிர்கொண்ட சவால்களை நேரில் கண்ட சாட்சியாக, இந்தப் பெரும் பொறுப்பை உணர்ந்தேன்.
கோவிட்-19 உலகளவில் கல்வியை பாதித்தபோது, மாண்புமிகு முதலமைச்சரின் வழிகாட்டுதலில், ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். குழந்தைகளின் வீடுகளுக்கு ஆசிரியர்களையும் தன்னார்வலர்களையும் அனுப்பி, கல்வியுடன் தொடர்பில் இருப்பதை உறுதி செய்தோம்.
கோவிட் பின்னர் இயல்பு நிலை திரும்பியபோது, ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை அறிமுகப்படுத்தி, தொற்றுநோயால் ஏற்பட்ட கற்றல் இடைவெளிகளை நிவர்த்தி செய்தோம். திறன் திட்டம் மூலம் அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவை வலுப்படுத்தி, மாணவர்களை மீண்டும் முதன்மைக் கல்வியில் இணைத்தோம்.
அமைச்சராக, அரசுப் பள்ளிகளின் பிம்பத்தை மாற்றுவதற்கும் அவற்றை பெருமையையுடையதாகவும் அடையாளமாக மாற்றுவதற்கு, எனது நாட்கள் அர்ப்பணிக்கப்பட்டன.
அனைத்துத்தரப்பையும் உள்ளடக்கிய (inclusiveness) உலகமயமாக்கலும் தமிழ்நாடும்
உலகமயமாக்கல், இந்தியாவை மறுவடிவமைக்கத் தொடங்கியபோது, தமிழ்நாடு தயாராக இருந்தது. முத்தமிழறிஞர் கலைஞரின் தொலைநோக்குத் தலைமையில், இந்தியாவின் முதல் தகவல் தொழில்நுட்பக் கொள்கையை உருவாக்கி, தொழில்நுட்ப மாற்றத்திற்கு அடித்தளமிட்டோம்.
இன்று, தமிழர்கள் உலகளாவிய தலைவர்களாக உருவாகியுள்ளனர். வணிகங்களை வழிநடத்தி, புதுமையான கண்டுபிடிப்புகளை முன்னெடுத்து, சாத்தியமற்றவற்றைச் சாதித்து வருகின்றனர்.
எங்கள் கல்விச் சிறப்பின் சான்று
இந்தியாவின் புகழ்பெற்ற சந்திரயான் விண்வெளிப் பயணங்களை வழிநடத்திய மூன்று இயக்குநர்களும் தமிழ்நாட்டின் கல்வி முறையின் விளைச்சலாவார்கள்.
நியூட்டனின் ஒளிக்கற்றை மற்றும் பிரிஸம் பரிசோதனை இன்று எங்கள் திராவிட மாடல் கல்விப் புரட்சியுடன் ஆழமாக ஒத்துப்போகிறது. ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் மறைந்திருக்கும் திறன்கள் நிறக்கற்றையின் பல வண்ணங்களைப் போன்றவை. அவை அறிவியல் ஆர்வம், கணிதம், பகுத்தறிவு, தொழில்நுட்பப் புதுமை படைப்புச் சிந்தனை எனப் பலவகைப்பட்டது. திராவிட மாடல் கல்வி ஒரு பிரிஸத்தைப்போல, ஒவ்வொரு குழந்தையின் மறைந்திருக்கும் திறனை அடையாளம் கண்டு, தனித்துவத்தைக் கண்டடைந்து ஒவ்வொரு குழந்தையின் தனிப்பட்ட விருப்பத்துக்கான பாதையை அமைத்துக் கொடுத்து, அவர்களைக் கொண்டாடுகிறது.
நியூட்டன், ‘எனது திறன்கள் சாதாரணமானவை; எனது செயல்பாடுகள் மட்டுமே எனக்கு வெற்றியைத் தருகின்றன. நான் ஒரு சாதாரண மனிதனாக இங்கு நிற்கிறேன், கல்வியால் வலிமையடைந்து, சமூக உணர்வால் வழி நடத்தப்படுகிறேன்’ என்று கூறியது போல தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி நாட்டை மேம்படுத்துகிறது.
நாம் இதே நோக்கத்துடன் செயல்பட்டால், நம் குழந்தைகள் உயர்ந்து, நம் சமூகங்கள் கல்வியால் வளர்ச்சி பெறும். சாதாரணமானவர்கள் அசாதாரணவற்றைச் சாத்தியமாக்கும் விடியலை உருவாக்குவோம்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.