ஏவுகணை ஆய்வின் நாயகன்
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள் (15.10.1931)
அப்துல் கலாம் அக்டோபர் 15, 1931 அன்று இராமேஸ்வரத்தில் எளிய தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர். இந்தியாவின் அறிவியல் ஆய்வாளர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர். விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் இந்தியா சாதனை படைக்க முக்கியக் காரணமாக இருந்தவர்.
எஸ்.எல்.வி.-3 (SLV-III): இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் (இஸ்ரோ – ISRO) பணிபுரிந்தபோது, இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் ஏவூர்தியான எஸ்.எல்.வி.-III திட்டத்தின் இயக்குநராகக் கலாம் பணியாற்றினார். இந்த ஏவூர்தி, 1980ஆம் ஆண்டு ரோகிணி என்ற செயற்கைக்கோளை வெற்றிகரமாக புவியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தி, விண்வெளி ஆய்வு செய்யும் நாடுகளில் இந்தியாவையும் இணைத்தது. இது அவரது வாழ்வின் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்றாகும்.
விண்வெளி ஏவுதல் வாகனத் தொழில்நுட்பத்தில் அவர் பெற்ற அனுபவத்தின் மூலம், கலாம் பின்னர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டி.ஆர்.டி.ஓ – DRDO) ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தை (IGMDP) வழிநடத்தினார். அக்னி மற்றும் பிருத்வி போன்ற ஏவுகணைகளை வெற்றிகரமாக உருவாக்கி, இந்தியாவுக்கு ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் தன்னிறைவை அளித்தார். இதனால் அவர் “இந்தியாவின் ஏவுகணை நாயகன்” (Missile Man of India) என்று போற்றப்பட்டார்.
அறிவியல் ஆய்வாளராக, நிர்வாகியாக, குடியரசுத் தலைவராக அவர் ஆற்றிய பணிகள் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்டன. கிராமப்புறங்களின் மேம்பாட்டுக்காக அவர் உருவாக்கிய திட்டம் புரா (Providing Urban Amenities of Rural Areas) என்பதாகும். அதே பார்வை, தந்தை பெரியாரால் பல்லாண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டிருப்பதையும், அதை பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரியில் 1996ஆம் ஆண்டு முதலே செய்து வருவதையும் பார்த்து மகிழ்ந்த அவர், 20.12.2003 அன்று ‘பெரியார் புரா’ என்றே அதற்குப் பெயரிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது பிறந்தநாளில், அப்துல் கலாம் அவர்களின் விண்வெளி ஆய்வுக்கான பங்களிப்பை நினைவுகூர்ந்து, நாட்டின் வளர்ச்சிக்கு உத்வேகமாக இருந்த அவரின் கனவுகளை நிறைவேற்ற உறுதி கொள்வோம்.