உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அவர்களை இலக்காகக் கொண்டு அரங்கேறும் நிகழ்வுகள், நமது நாட்டின் அரசியல் சாசன நிறுவனங்களின் மீதும், குறிப்பாக நீதித்துறையின் மீதும், ஒரு திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்படுவதாகவே எண்ணத் தோன்றுகிறது.
அவர் ஓர் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்து தலைமை நீதிபதியாக உயர்ந்துள்ளார் என்ற நிலையில், அவர் மீது உயர்ஜாதியினர் கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சி பல நிகழ்வுகளின் மூலம் வெளிப்படுகின்றது.
தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற பிறகு, பி.ஆர். கவாய் அவர்கள் முதன்முதலில் தனது சொந்த மாநிலமான மகாராட்டிராவுக்கு 19.05.2025 அன்று வருகை தந்தபோது, அவரை வரவேற்க அரசு மரபுப்படி மாநில அரசின் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் போன்ற முக்கிய அரசு அதிகாரிகள் யாரும் செல்லவில்லை. இது குறித்து கவாய் அவர்களே தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். “இது புரோட்டோகால் பற்றிய பிரச்சினை கூட அல்ல, அரசியல் சாசன அமைப்புகள் ஒன்றுக்கொன்று அளிக்கும் மரியாதை பற்றிய கேள்வி” என்று அவர் சுட்டிக்காட்டினார். இது நீதித்துறைக்கு நிர்வாகத் தரப்பால் வேண்டுமென்றே அளிக்கப்பட்ட அவமரியாதையாகவும், அவரது சமூகப் பின்னணியின் காரணமாகவே இத்தகைய புறக்கணிப்பு நிகழ்ந்ததாகவும் பல்வேறு அமைப்புகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளன.
அக்டோபர் 6, 2025 அன்று, உச்சநீதிமன்ற விசாரணையின்போது, வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் தலைமை நீதிபதி கவாய் மீது செருப்பை வீசினார். இந்த நிகழ்வு, “ஸநாதன தர்மத்திற்கு எதிரான அவமரியாதையை சகிக்க மாட்டோம்” என்ற முழக்கங்களுடன் நிகழ்ந்தது. இதை ஸநாதன தர்மத்திற்கான போராட்டமாக சித்தரிக்க முயல்கின்றனர். ஒரு நாட்டின் தலைமை நீதிபதி மீதே – நீதிமன்றத்தின் உள்ளேயே இத்தகைய தாக்குதல் முயற்சி நடக்கும்போது, காவல்துறை உள்ளிட்ட அரசு அமைப்புகள் விரைந்து நடவடிக்கை எடுக்காமல் அமைதி காப்பதாக எதிர்க்கட்சிகளும், சமூக இயக்கங்களும் குற்றஞ்சாட்டின.
இந்தச் சம்பவங்கள் அனைத்திற்கும் மேலாக, சமூக வலைதளங்களில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அவர்களைக் குறிவைத்து மிக மோசமான, ஜாதிய ரீதியிலான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அரியானாவைச் சேர்ந்த உயர்கல்வி படித்த நபர் ஒருவர் தலைமை நீதிபதி கவாய் அவர்களைச் ஜாதிய ரீதியாக இழிவுபடுத்தும் நோக்குடன், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு ஆட்சேபனைக்குரிய காட்சிப்பதிவை சமூக வலைதளங்களில் பரப்பினார். அந்த நபர் பி.ஆர்.கவாய் அவர்களை மிகவும் மோசமாக சித்தரித்திருந்தார்.
முன்னதாக, இந்தியாவின் முதல் தாழ்த்தப்பட்ட (தலித்) தலைமை நீதிபதியாக மாண்புமிகு நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்கள் பணியாற்றினார். அவரது பதவிக் காலத்திலும் வழக்குரைஞர்கள் சரி வர ஒத்துழைக்கவில்லை என்று அவரது உதவியாளர் குற்றம் சாட்டி இருந்தார். இது தொடர்பாக கே.ஜி.பாலகிருஷ்ணன் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது வேறு விஷயம்.
இருப்பினும் அவர் பதவி விலகிய பிறகு அவரது குடும்பத்தினர் மீது ஊழல் குற்றசாட்டுகளைக் கூறி கே.ஜி.பாலகிருஷ்ணன் பதவியில் இருந்த போது அந்தப்பதவியைப் பயன்படுத்தி அவரது குடும்பத்தினர் ஊழல் செய்தனர் என்று கே.ஜி.பாலகிருஷ்ணனின் கண்ணியத்திற்குக் களங்கம் விளைவித்தனர். வேறு எந்தத் தலைமை நீதிபதிகளும் இது போன்ற ஒரு நெருக்கடிகளை பதவி விலகிய பிறகு சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமூகநீதி என்பது எல்லா நிலைகளிலும் குறிப்பாக நீதித் துறையிலும் தேவை என்று நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகிறோம்.
கே.ஆர்.நாராயணன் குடியரசுத் தலைவராக இருந்த போது, உச்சநீதிமன்றத்திற்கு நான்கு நீதிபதிகள் நியமனம் செய்வது பற்றி ஒரு பட்டியலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அனுப்பி வைத்தார்.
அதில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள், பெண்கள் இடம் பெறாதது பற்றி தன் கருத்தை எழுதி அனுப்பினார். ‘உச்சநீதிமன்றத்தில் தகுதி தான் முக்கியம் – மற்றபடி இடஒதுக்கீடு எல்லாம் நீதிபதிகள் நியமனத்தில் பார்க்க முடியாது’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கோப்பைத் திருப்பி அனுப்பிய நிகழ்வுகளும் உண்டு.
அதுவும் இப்பொழுது தலைமை நீதிபதியாக உள்ள பி.ஆர்.கவாய் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் – புத்த மார்க்கத்தையும் சேர்ந்தவர் என்பதால் அவமதிப்புக் கூடுதலாக எகிறிக் குதிக்கிறது என்பதையும் முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்; இதற்கொரு முடிவு கட்டப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களே ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அனைவரும் குரல் எழுப்ப வேண்டாமா? எங்கே பார்ப்போம்!
