உயர்ந்த பொறுப்புகளில் இருந்தாலும், நம்மைக் ‘கீழ்ஜாதிக்காரர்களாகப்’ பார்ப்பதுதான் ஸநாதனம்!

21 Min Read

*செருப்பு வீசும் ஸநாதனவாதிகள்! *கடவுள்தான் செருப்பு வீசச் சொன்னாராம்!
*ஸநாதனத்திற்கும் – சமூகநீதிக்குமிடையிலான போர்!
ஸநாதனத்திற்கு எதிராக யாரும் பேசக்கூடாது என்பதற்கே இந்த மிரட்டல்!
‘‘உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு: நீதித் துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் யோக்கியதைப் பாரீர்!’’ கண்டனக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரின் விளக்கவுரை

சென்னை, அக்.15 – உயர்ந்த பொறுப்புகளில் இருந்தாலும், நம்மைக் ‘கீழ்ஜாதிக்காரர்களாகப்’ பார்ப்பதுதான் ஸநாதனம்! ஸநாதனத்திற்கு எதிராக யாரும் பேசக்கூடாது என்பதற்கே இந்த மிரட்டல் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு: நீதித் துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் யோக்கியதைப் பாரீர்! கண்டனக் கூட்டம்!

நேற்று (14.10.2025) மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது தாக்குதலைக் கண்டித்து நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

‘‘உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு – நீதித்துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் யோக்கியதை பாரீர்’’ என்ற கண்டனக் கூட்டம் ஒரு சில நாள்களிலேயே சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அறிவார்ந்த இந்த அரங்கத்தில் ஏராளமான வழக்குரைஞர்கள், நண்பர்கள், பகுத்தறிவுவாதிகள், மனிதநேயக்காரர்கள், ஜாதி ஒழிப்புக்காரர்கள் அத்துணை பேரும் திரண்டிருக்கிறீர்கள்.

ஓய்வு பெற்ற பிறகு, இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றுவதற்குத், துணிந்த ஒரு நீதிபதி இருக்கிறார் என்றால்,  அவர்தான் தோழர் மாண்பமை அரிபரந்தாமன் அவர்களாவார்கள்.

துணிச்சலாகப் பேசக்கூடியவர், உண்மையைப் பேசக்கூடியவர்!

அவருக்கு, இதற்குமேல் ஒன்றும் ஆசையில்லை. அதுவும் அவர் நீதிபதி ஆனதுகூட, யாரையும் தேடிப்பிடித்து நீதிபதி ஆகவில்லை. அவருக்கு வந்த வாய்ப்பு அது.

ஆகவே, துணிச்சலாகப் பேசக்கூடியவர், உண்மை யைப் பேசக்கூடியவர். அப்படிப்பட்ட அய்யா நீதிபதி அவர்களே,

முக்கிய பொறுப்பாளர்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தி னைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டு மக்களுக்குத் தந்தை பெரியார் சொன்ன சுயமரியாதை உணர்வை உணர்த்தும் வகையில், ஒரு பெரியார் தொண்டன் என்ற முறையில் இங்கே நான் என்னுரையைத் தொடங்கவிருக்கின்றேன்.

முதலில் நமக்கு மான உணர்ச்சி வேண்டும்!

‘‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’’

முதலில் நமக்கு மான உணர்ச்சி வேண்டும். இந்த வன்முறை நிகழ்வை மிகச் சாதாரணமாக ஆக்கிக் காட்டு கிறார்கள்.

இங்கே தோழர்கள் பேசும்போது, இதை ஒரு சாதா ரண நிகழ்வுபோல காட்டுகிறார்கள் என்று எடுத்துக் கூறினார்கள்.

இந்த சம்பவம் ஏன் ஏற்பட்டது?

இதற்குப் பின்னணி என்ன?

இதனுடைய விளைவுகள் என்ன? என்பன வற்றைப்பற்றி யோசிக்கவேண்டாமா?

மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக இந்தச் சமுதாயம் மாறினால்தான், இதற்குத் தீர்வு ஏற்படுமே தவிர, வேறு அதற்குப் பரிகாரம் கிடையாது.

தமிழ்நாடு

ஒரு சாதாரண சம்பவமாகப் பார்க்காதீர்கள்!

தந்தை பெரியார் அவர்கள், “சுயமரியாதை, சுயமரி யாதை’’ என்று வலியுறுத்திச் சொன்னார்கள். அந்த சுயமரியாதை உணர்வு எவ்வளவு முக்கியமானது என்பதை நீங்களெல்லாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு என்ற சம்பவத்தை ஒரு சாதாரண சம்பவமாகப் பார்க்காதீர்கள்.

கோட்சே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி எடுத்து, காந்தியாரைச் சுட்டுக் கொன்றதை ஒரு சாதாரண சம்பவமாக எடுத்துக்கொள்ள முடியுமா?

ஆனால், இன்று 2025 ஆம் ஆண்டில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்று இருப்பதை நன்றாக எண்ணிப் பாருங்கள்.

தலைமை நீதிபதி மீது என்ன ஆத்திரம்?

ஒரு தனி நபரின் செயல் அல்ல!

செருப்பைத் தூக்கிப் போட்ட ஒரு வழக்குரைஞரின் செயல், ஒரு தனி நபரின் செயல் அல்ல.

இதுதான் ஸநாதனத்தினுடைய யோக்கியதை என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.

இதனுடைய பின்னணி என்ன?

‘‘உச்சநீதிமன்றம் நம்மை மடக்கி மடக்கிக் கேள்வி கேட்கிறதே’’  என்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் இப்படி செய்திருக்கிறார்கள்.

“பார்ப்பானுக்குப் பின்புத்தி’’ என்பார் தந்தை பெரியார் அவர்கள்.

தந்தை பெரியார் சொன்னது எவ்வளவு உண்மையானது என்பதை நீங்களெல்லாம் புரிந்துகொள்ளவேண்டும்.

உச்சநீதிமன்றத்தைக் மீட்போம்; சமூகநீதியைக் காப்போம்!

‘‘நீதித்துறையில் இட ஒதுக்கீடு முறை இல்லா ததுதான், இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்குக் காரணம். உச்சநீதிமன்றத்தைக் மீட்போம்; சமூகநீதியைக் காப்போம்’’ என்று எல்லா எதிர்க்கட்சிகளுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

ஆமாம், நிச்சயமாக சமூகநீதியைக் காக்கவேண்டு மானால், உச்சநீதிமன்றத்தை மீட்போம் என்று சொல்லி யிருக்கிறார். அதற்காகத்தான் இந்தக் கூட்டமே – உச்சநீதிமன்றத்தின் மரியாதையை மீட்டோம்!

உச்சநீதிமன்றத்தை மீட்போம் என்றால், அந்தக் கட்டடத்தையல்ல. உச்சநீதிமன்றத்தின் மரியாதையைக் காப்பாற்றுவது.

நம்மாட்கள், சோற்றால் அடித்த வெறும் பிண்டங்களாக இருக்கக்கூடாது. அதை நினைத்தால், நம்முடைய ரத்தமெல்லாம் கொதிக்கின்றது.

மானமும் அறிவும் உள்ள சுயமரியாதை  மனிதர்களாக இருக்கவேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னார்.

அம்பேத்கர் வாழ்க, பெரியார் வாழ்க என்று சொல்லிவிட்டால் போதுமா?

ஒடுக்கப்பட்ட சமுதாயம் என்று பொதுவாகச் சொல்கி றோம். இப்போது பட்டியல் இனம், பட்டியல் இனம் என்று சொல்லும்போதுகூட அதில் கொஞ்சம் அடங்கிப் போகிறது; அதனுடைய கொடுமை தெரியவில்லை.

‘‘அடிமை வகுப்புகள்’’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார் அம்பேத்கர்!

நல்ல வார்த்தையை அம்பேத்கர் பயன்படுத்தினார். அவர் எழுதிய ஒரு நூலில், சூத்திரர்கள், பஞ்சமர்கள் இரண்டு பேரையும் இணைத்ததற்கு ஒரு வார்த்தையைப் போட்டார் ‘‘அடிமை வகுப்புகள்’’ (Servile Classes)  என்று.

தாழ்த்தப்பட்ட சமுதாயம் என்று சொல்வதற்கு நாம் கூச்சப்படக்கூடாது. அதைச் சொல்லவேண்டும் – அதைக் கேட்டு, இன்றைய இளைஞர்களுக்குக் கோபம் வரவேண்டும். ‘‘நான் தாழ்த்தப்பட்டவனா?’’ என்று கேட்கவேண்டும்.

‘‘தாழ்ந்தவன் அல்ல’’, “தாழ்த்தப்பட்டவன்!’’

யாரால் தாழ்த்தப்பட்டவன்?

எதனால் தாழ்த்தப்பட்டவன்?

ஏன் தாழ்த்தப்பட்டவன்? என்று கேள்வி எழவேண்டும்.

ஒரு சமுதாயத்திற்கு எதைக் கொடுத்தாலும் அறிவைக் கொடுக்கக்கூடாது என்ற நிலை இருந்தது.

அரசியலமைப்புச் சட்டத்தின் மீது பதவிப் பிரமாணம் எடுத்தபடி, உண்மையாகவும், உறுதியாகவும் செய்கிறார்

அப்படிப்பட்ட ஒரு சமுதாயத்திலிருந்து வந்து, படித்து, எழுந்து, சட்டம் படித்து வழக்குரைஞராகி, பிறகு நீதிபதியாக பல ஆண்டுகாலம் பணியாற்றுகிறார். பிறகு உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதியாகி, இன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கிறார்.

அவர் ஒரு பகுத்தறிவுவாதியாக இருக்கிறார். அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் மதச்சார்பற்ற கொள்கைக்கு,  அதன்மீது பதவிப் பிரமாணம் எடுத்தபடி, உண்மையாகவும், உறுதியாகவும் செய்கிறார்.

இங்கே உரையாற்றிய நீதிபதி அரிபரந்தாமன் சொன்னார்.

நேரடியாக நீங்கள் சென்று விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்யுங்கள்!

மத்தியப் பிரதேசத்தில் உள்ள கஜுராஹோ கோயில் வளாகத்தில் விஷ்ணு சிலையை மீட்டெடுக்கக் கோரிய மனு மீதான விசாரணையின் போது, ​​தலைமை நீதிபதி கவாய்,  ‘‘சுயவிளம்பர நோக்கத்தில் வழக்கு தொட ரப்பட்டு இருக்கிறது. இதற்கு நீங்கள் தொல்லியல் துறையிடம்தான் முறையிடவேண்டும். அதற்கு நாங்கள் உத்தரவு போட முடியாது’’ என்று சொல்லியிருக்கிறார்.

மீண்டும் மீண்டும் மனுதாரர் வற்புறுத்தவே, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்கள்,  ‘‘நீங்கள் (மனுதாரர்) விஷ்ணுவின் தீவிர பக்தர் என்று கூறுகிறீர்கள். நேரடியாக நீங்கள் சென்று விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அந்த இடம் ஏ.எஸ்.அய். கட்டுப்பாட்டில் உள்ளது. மனுவை தள்ளுபடி செய்கிறோம்” என்று சொன்னார் என்ற செய்தியைச் சொன்னார்.

இப்படிச் சொன்னதற்காக ஸநாதனவாதிகள் அவர்மீது கண்டனக் கணைகளை ஏவினார்கள். ஸநாதனம் துடித்தது.

பிறகு சில நாள்கள் கழித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்த வேளையில், அதிருப்தியில் இருந்ததாகச் சொல்லி, ஒரு வழக்குரைஞர் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பை வீசியுள்ளார்.

‘‘செருப்பு வீசிய ஸநாதனவாதி’’

செருப்பு வீசியவர் என்று அவரை இனிமேல் சொல்லக்கூடாது. ‘‘செருப்பு வீசிய ஸநாதனவாதி’’ என்றுதான் சொல்லவேண்டும்.

அந்த செருப்பு வீசிய ஸநாதனவாதி, ‘‘நான் மன்னிப்புக் கேட்கமாட்டேன்,  இதை நான் கடவுள் சொல்லித்தான் செய்தேன்’’ என்று சொன்னார்.

கடவுள், என்னென்ன வேலையைச் செய்கிறார் பாருங்கள்!

நமக்குக் கோபம் யார்மீது வரவேண்டும்?

கடவுள் சொல்லித்தான், செருப்பை  எடுத்து வீசியிருக்கிறார். அப்படியென்றால், நமக்குக் கோபம் யார்மீது வரவேண்டும்?

ஒன்று, ஸநாதனத்தின்மீது!

இரண்டாவது கடவுள்மீது!

இரண்டுமே, மனிதத்தன்மைக்கும், சமத்துவத்திற்கும் யோக்கியதை இல்லாதவைகளாகும்.

ஈராக்மீது படையெடுத்ததற்குக் காரணமாக ஜார்ஜ் புஷ் என்ன சொன்னார்?

‘‘கடவுள் சொல்லித்தான் தாக்குதல் நடத்தினேன்’’ என்றார்.

உலகமே எதிர்பார்த்த பாபர் மசூதி இடிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்தது. அந்த வழக்கில் தீர்ப்பு எழுதினார்கள். யார் அந்தத் தீர்ப்பை எழுதினார்கள் என்ப தைக் குறிப்பிடவில்லை.

பிறகு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் சொன்னார், ‘‘கடவுள்தான், பாபர் மசூதி இருந்த இடத்தை, இராமர் கோவில் கட்டுவதற்குக் கொடுக்கச் சொன்னார். அதன்படி தீர்ப்பளித்தேன்’’ என்று!

எனவே,  அவர்களுக்குக் கடவுளைக் கூப்பிடுவதற்கு உரிமை உண்டு என்றால், எங்களுடைய சமுதாயத்திலிருந்து, ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து கடவுளைப்பற்றி பேசுவதற்கு உரிமை இல்லையா? அது என்ன இரட்டை அளவுகோலா?

கடவுள், உனக்கு மட்டும்தான் சொல்வாரா? அவர் இந்தப் பக்கம் சொல்கிறவர்; அந்தப் பக்கமும் சொல்ல மாட்டாரா?

சாதாரணமாக, கடவுள் படுகின்ற பாடு என்ன?

நீதிமன்ற நடைமுறையிலேயே அது நமக்கு மிகத் தெளிவாகத் தெரியுமே!

பிராசிகியூஷன் தரப்பு சாட்சி –
டிபன்ஸ் தரப்பு சாட்சி!

வழக்கில், சாட்சிகள் விசாரிக்கப்படுகிறார்கள்; இரண்டு வகையான சாட்சிகள் இருக்கிறார்கள்.

ஒன்று, பிராசிகியூஷன் தரப்பு சாட்சி.

இரண்டு, டிபன்ஸ் தரப்பு சாட்சி!

நம்முடைய நீதிமன்ற முறை எப்படி இருக்கிறது என்றால், நீதிமன்றத்தில், குற்றவாளிக்  கூண்டில் ஏறி ஒருவர் சாட்சி சொல்வதற்கு முன், பிரமாணம் எடுக்கவேண்டும். என்ன பிரமாணம் என்றால், ‘‘கடவுள் சாட்சியாக’’ என்றுதான் அதில் சொல்கிறார்கள்.

‘‘மனப்பூர்வமாக’’, ‘‘உளப்பூர்வமாக!’’

எங்களைப் போன்றவர்கள் யாரோ ஓரிருவர், ‘‘மனப்பூர்வமாக’’, ‘‘உளப்பூர்வமாக’’ என்று சொல்லித்தான் பிரமாணம் எடுப்பார்கள்.

பிராசிகியூஷன் தரப்பு சாட்சியும் ‘‘கடவுள் சாட்சியாக’’ என்று சொல்வார். டிபன்ஸ் தரப்பு சாட்சியும் ‘‘கடவுள் சாட்சியாக’’ என்றுதான் சொல்வார்.

தீர்ப்பு எழுதுகின்ற நீதிபதி என்ன செய்வார்?

ஒரு பக்கம்தான் தீர்ப்பு எழுத முடியும். அப்படியென்றால், ஒரு பக்கக் கடவுளுக்குத்தான் மரியாதை!

உங்களுடைய ‘ஸநாதனத்திற்கு’ என்ன பெருமை?

உதயநிதி ஸ்டாலின், ஸநாதனத்தைப்பற்றி பேசிவிட்டார் என்று அவர்மீது வழக்கு; இவர் மீது வழக்கு, என்றெல்லாம் சொல்லி, இந்த நாடே பூகம்பமாகிவிட்டது என்றெல்லாம் பேசினார்கள்.

ஸநாதனம் என்பது முழுக்க முழுக்க மனுநீதிதான்!

உன்னுடைய ஸநாதனம் என்பது ஜாதிதானே! ஸநாதனம் என்பது முழுக்க முழுக்க மனுநீதிதானே!

அதை நீங்களே ஒப்புக்கொள்கிறீர்களே!

நன்றாக இங்கே சொன்னார்களே, வருண தர்மம் – மேல்ஜாதிக்காரன் – உயர்ஜாதிக்காரன், உயர்ஜாதிக்காரனாகவே இருக்கவேண்டும். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர்கள் – தாழ்த்தப்பட்ட வர்களாக இருக்கவேண்டும்; சூத்திரர்கள் – சூத்திரர்களாக இருக்கவேண்டும். பஞ்சமன் – பஞ்சமனாகவே இருக்கவேண்டும்.

இதுதானே உன்னுடைய ஸநாதனம்.

இல்லை என்று யாராவது மறுக்க முடியுமா?

அந்த ஸநாதனத்தைக் காப்பாற்றவேண்டுமாம்.

இரண்டு நாள்களுக்கு முன்பு, பார்ப்பன ஏட்டில் ஒரு செய்தி வெளிவந்தது.

‘‘ஸநாதன தருமத்தின் பெரும் சொத்து என்ன தெரியுமா?’’

எதைக் கொடுத்தாலும், சூத்திரனுக்கு அறிவைக் கொடுக்கக் கூடாது என்பது மனுதர்மம்!

‘‘அறிவுதான் ஸநாதன தருமத்தின் பெரும் சொத்து’’ என்கிறார்கள்.

ஆனால், எதைக் கொடுத்தாலும், சூத்திரனுக்கு அறிவைக் கொடுக்கக் கூடாது என்பது மனுதர்மம்.

எனவே, இந்த ஸநாதன தருமத்தை எதிர்க்க வேண்டாமா? ஒழிக்கவேண்டாமா?

ஸநாதனம் உண்மையிலேயே அறிவுப்பூர்வமாக இருந்திருக்குமேயானால், தீர்ப்பளித்த தலைமை நீதிபதி மீது வழக்குத் தொடுத்திருக்கலாம்; ஆனால், அவரை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்தும், அவருக்குப் பின் வருகின்ற நீதிபதிகள், ஸநாதனத்திற்கு எதிராகப் பேசக்கூடாது என்பதற்காக மிரட்டுகின்ற வகையில், இதுபோன்ற செயலைச் செய்திருக்கிறார்கள் என்றால், அது எந்த வகையில் நியாயமானது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா?

நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து, தந்தை பெரியார் பேசினார்.  நீதிமன்ற அவமதிப்பு என்று சொல்லி, வழக்குத் தொடுத்தனர்; அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதிலிருந்து பெரியார் பின்வாங்கவில்லை. ஒரு பெரிய அறிக்கையே கொடுத்தார்.

அப்படி செய்யாமல், ‘‘அதற்காக நீதிபதி மீது செருப்பு வீசுங்கள்’’ என்று சொல்வதா எங்களுடைய வேலை?

பெரிய பொறுப்புகளில் இருந்தால்கூட, நாங்கள் உங்களை மதிக்கமாட்டோம்!

ஆகவே, அதனுடைய அர்த்தம் என்னவென்று சொன்னால் நண்பர்களே, ‘‘நீங்கள் பெரிய பொறுப்புகளில் இருந்தால்கூட, நாங்கள் உங்களை மதிக்கமாட்டோம்’’ என்பதுதான்!

‘‘மற்றவர்களுக்கு நீங்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கலாம்; குடியரசுத் தலை வருக்குக்கூட பதவிப் பிரமாணம் செய்து வைப்பவராக இருக்கலாம். ஆனால், நாங்கள் இன்னமும் உங்களை கீழ்ஜாதிக்காரர்களாகத்தான் பார்க்கிறோம்; இதுதான் எங்கள் ஸநாதன தர்மம். அதனை நாங்கள் காப்பாற்றுகிறோம்’’ என்று சொல்கிறார்கள்.

அதை மற்றவர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டி ருப்பதா?

நியாயம் கேட்கவேண்டாமா? சிந்திக்கவேண்டாமா?

‘இவர்களைப் போன்று, எதிர்வினையாற்றுங்கள்’ என்று நாம் சொல்லமாட்டோம்.

மாறாக, அறிவுப்பூர்வமான எதிர்வினை வேண்டும். உணர்ச்சியற்ற நம்முடைய சோற்றால் அடித்த பிண்டங்களுக்கு, உணர்ச்சியை உண்டாக்கவேண்டும்.

நாம் சொல்லவேண்டிய விஷயத்தை, நம்முடைய நீதிபதி எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

‘துக்ளக்’
அட்டைப் படக் கார்ட்டூன்!

எப்பொழுதாவது ஒருமுறை பொய் சொன்னால், அதற்கு நாம் பதில் சொல்லலாம்.

ஆனால், எப்பொழுதுமே பொய் சொல்பவர்களுக்கு நாம் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை.

ஆகவேதான், அவர்கள் நமக்கு விளம்பரம் கொடுக்கி றார்கள்.

‘துக்ளக்’ பத்திரிகைக் கார்ட்டூனில்,

‘‘2026 தேர்தல்லே நாமதான் ஜெயிப்போமா? எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்?’’ என்னைப் பார்த்து முதலமைச்சர் ஸ்டாலின் கேட்கிறாராம்!

அதற்கு நான் பதில் சொல்வதுபோன்று போட்டி ருக்கிறார்கள், ‘‘ஸநாதனத்திற்கு எதிராகப் பேசிய உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி மீதே வடநாட்டில் செருப்பு வீசுகிறார்கள். ஸநாதனத்தைக் கேவலப்படுத்தி, நாங்கள் பேசாத பேச்சா? இங்கே ஒரு ஹிந்துவுக்குக் கூட அப்படி ரோஷம் வரலையே? அப்ப நாமதான் ஜெயிக்கணும்?’’ என்று நான் பதில் சொல்கிறேனாம்.

நாங்கள், மக்களிடம் சென்று, மக்களோடு மக்களாக இருப்பவர்கள்.

செருப்பு வீசியவரின் ஒப்புதல் வாக்குமூலம்!

‘‘ஸநாதனத்திற்கு எதிராகப் பேசிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீசினேன்’’ என்பதுதான் செருப்பு வீசியவரின் ஒப்புதல் வாக்குமூலம்.

அவர், எதற்காக ஸநாதனத்திற்கு எதிராகப் பேசினார்?

மதவெறி என்றால் என்ன?

ஸநாதனம் என்றால் என்ன?

ஹிந்துத்துவா என்றால் என்ன?

எல்லாம் ஒன்றுதானே!

இங்கே உரையாற்றிய நீதிபதி அய்யா பரந்தாமன் மிகச் சிறப்பாகச் சொன்னார். நாங்கள் எல்லோரும் ஒரே மாதிரியான கருத்து உடையவர்கள்தான். ஒருவருக்கொ ருவர் பேசி வைத்துக்கொண்டு பேசவில்லை.

ஆர்.எஸ்.எஸில் பயிற்சி எடுத்த கோட்சே,   காந்தி யாரைக் கொன்றதற்கு வருத்தப்படவில்லை, மன்னிப்புக் கேட்கவில்லையே!

கோட்சேவின்
‘‘May it Please Your Honour’’

அவரின் வாக்குமூலம் ‘‘May it Please Your Honour’’ புத்தகத்தில் இருக்கிறதே!

அதற்கு விளக்கம் சொல்கிறார்கள், ‘‘வழக்குரைஞர்கள் துணை இல்லாமல் அவரே வாதாடினார்; எழுதினார்’’ என்று அவருடைய பெருமையைச் சொல்கிறார்களாம்.

அப்படிப்பட்ட கோட்சே என்ன செய்கிறார், ‘காந்தியார் இனிமேல் உயிரோடு இருக்கக்கூடாது’ என்று நினைத்தார். அனால்தான், சுட்டுக் கொன்றார்.

மாறிய காந்தியார்
30 நாள்களுக்குள் கொல்லப்பட்டார்!

தந்தை பெரியார் அவர்கள், தன்னுடைய டைரியில், ‘‘இந்தியா மதச் சார்பின்மையுடன்  இருக்கவேண்டும்  என்று சொன்ன காந்தியார், 30 நாள்களுக்குள் கொல்லப்பட்டார்.’’

பெரியாருடைய முன்னோக்கினுடைய அடிப்படை என்ன?

‘ஸநாதனம் அறிவுப்பூர்வமானது’ என்று சொல்கி றீர்களே, அறிவுப்பூர்வம் என்றால்,  மாற்றுக்கு உட்பட்டது தானே அறிவு!

ஆனால், மனுதர்மத்தில் என்ன எழுதப்பட்டு இருக்கிறது? அரசியலமைப்புச் சட்டத்தில் இருப்பதற்கும், மனுதர்மத்தில் இருப்பதற்கும் இடையேதானே இன்றைக்கு நடைபெறுகின்ற போராட்டம்.

மனுதர்மத்தில், ‘தர்மம், ஸநாதன தர்மம், வருணாசிரம தர்மம், ஜாதி தர்மம்’ – இந்தத் தர்மங்களுக்கு ஆபத்து வந்தால், தண்டம் எடுத்தும் போராடலாம் என்று இருக்கின்றது.

வன்முறையைத்தானே நீங்கள் தூண்டுகிறீர்கள்!

காந்தியாரைச் சுட்ட கோட்சே, ஆர்.எஸ்.எஸிடம் பயிற்சி எடுத்த கோட்சே, எப்படி துப்பாக்கி எடுத்துச் சுட்டாரோ, அதுபோன்று வன்முறையிலும் ஈடுபடலாம் என்று வன்முறையைத்தானே நீங்கள் தூண்டுகிறீர்கள்.

அதேநேரத்தில், மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்?

‘‘அறிவைப் பயன்படுத்து’’, ‘‘அறிவை விரிவு செய் – அகண்டமாக்கு – விசாலப் பார்வையால் விழுங்கு உலகத்தை’’ என்பதுதானே நம்முடைய அமைப்பு.

சமூகநீதிக்கு எதிரானது!

எனவே நண்பர்களே, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம், எங்கோ நடை பெற்ற சம்பவம் என்று நினைக்கவேண்டாம்.  இந்தச் சம்பவம், இன்றைக்கும் சமூகநீதிக்கு எதிரானது.

ஸநாதனத்தினுடைய கோபம் – சமூகநீதிக்கு எதிரானது.

எப்படி சமூகநீதிக்கு எதிரானது?

மற்றவர்களுக்கெல்லாம் வழிகாட்டக்கூடிய  வழிமுறையைச் சொல்கிறார்!

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதி, இவ்வளவு சுதந்திரமாக, யாருக்கும் கட்டுப்படாமல் தன்னுடைய கருத்தைச் சொல்கிறார். அந்த நீதிபதி மீது எந்தக் குற்றச்சாட்டையும் வைக்க முடியவில்லை.

அதுமட்டுமல்ல, மற்றவர்களுக்கெல்லாம் வழிகாட்டக்கூடிய  வழிமுறையைச் சொல்கிறார்.

‘‘நான் ஓய்வு பெற்ற பிறகு, எந்தவிதமான அரசுப் பதவிகளையும் ஏற்றுக்கொள்ளமாட்டேன்’’ என்று உறுதியாக கூறினார்.

இவ்வளவு உறுதியான ஓர் ஆளை, அவ மானப்படுத்தினால்தான், மற்றவர்களும் பயப்படு வார்கள்.

இதுதானே அவர்களுடைய கருத்து.

ஸநாதனத்தினுடைய யோக்கியதை என்ன?

எனவே, இன்றைய போராட்டம் – ஸநாத னத்திற்கும் – சமூகநீதிக்கும்தான்.

இரண்டு தத்துவங்களுக்கிடையே நடைபெறுகின்ற போராட்டம்!

இது இரண்டு நபர்களுக்கு இடையே நடை பெறுகின்ற போராட்டம் அல்ல இது. இரண்டு தத்துவங்க ளுக்கிடையே நடைபெறுகின்ற போராட்டம்.

சமூகநீதிக் கொடி பறப்பதா? ஸநாதனக் கொடி பறப்பதா?

ஸநாதனக் கொடி என்றால், என்ன?

ஸநாதனக் கொடி என்றால், வருணதர்மம்.

நம்முடைய ஆட்கள் எந்தப் பதவிக்கும் போகக்கூடாது. இது ‘மகாமகா பெரியவா’ சொன்னது. ‘அவா சொன்னதை இவா கோலம் போட்டிருக்கா.’’

வருண தருமத்தில் எழுதியிருக்கிறார்கள்.

‘‘வருணக் காப்பு அப்படியே இருக்கவேண்டும். அதை மாற்றக்கூடாது’’ என்று!

‘‘சங்கராச்சாரி- யார்?’’  என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவுகள்!

‘‘தெய்வத்தின் குரல்’’ என்னும் புத்தகத்தின் அடிப்ப டையில், ‘‘சங்கராச்சாரி – யார்?’’ என்ற தலைப்பில், இதே மேடையில் 10 சொற்பொழிவை நடத்தியிருக்கின்றேன்.

மகாமகா பெரியவா சொன்னதைத்தான், நான் எடுத்துக் காட்டி பேசினேன். அந்தத் தொடர் சொற்பொழிவு புத்தக மாகவும் வெளிவந்திருக்கின்றது.

ஸநாதனம் என்றால், மோட்சத்திற்கு டிக்கெட் கொடுப்பது. ஸநாதனம் என்றால், அறிவுப்பூர்வமாகச் சொல்வது என்று சொல்கிறார்களே, அந்த அறிவு எல்லோருக்கும் வரவேண்டும் அல்லவா?

அதில் உள்ள இரண்டு பகுதியை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன்.

ஸநாதனத்தைப் பரப்புவதுதான் என்னுடைய வேலை: மகாமகா பெரியவா!

பார்ப்பனர்களில், அந்த வழக்குரைஞர் ஸநாதன வாதியாக இருந்தாலும், அல்லது கோட்சே போன்ற ஸநாதனவாதியாக இருந்தாலும், அல்லது வேறு இடத்தில், ‘‘நான் எல்லாவற்றையும் துறந்துவிட்டேன். நான் சந்நியாசியாகி விட்டேன். ஸநாதனம்தான் எனக்கு மிகவும் முக்கியம் – ஸநாதனத்தைப் பரப்புவதுதான் என்னுடைய வேலை’’ என்று சொல்லி, “மகாமகா பெரியவா’’ என்று இன்று வரையில் உயர்த்தி வைத்திருக்கிறார்களே –  அவராக இருந்தாலும், அவரைப்பற்றி நாம் தவறாகச் சொல்லவில்லை.

ஆனால், அவர் என்ன பேசினார்?

‘‘நான்கு ஜாதிகளையும்
நானே படைத்தேன்!’’

கீதையில் இருக்கின்ற ஒரு பகுதிக்கு அவர் பதில் சொல்கிறார்.

‘‘சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்’’ – ‘‘நான்கு ஜாதிகளையும் நானே படைத்தேன்’’ என்று அவதாரமான கடவுள் கிருஷ்ணன் சொல்கிறார். அதனால், அதை மாற்ற முடியாது.

‘‘சுதர்மா’’ என்றால் என்ன அர்த்தம் என்றால், ‘‘நானே நினைத்தாலும் இந்தத் தர்மத்தை மாற்ற முடியாது’’ என்று எழுதி வைத்திருக்கிறார்.

அதனைத் திசை திருப்பி விடுவதற்கு சில பேர் முயற்சி செய்தார்கள். எப்படி என்றால், ‘‘அது குணத்தைப் பொருத்ததே தவிர, ஜாதியைப் பொருத்தது அல்ல’’ என்று சொன்னார்கள்.

ஆனால், ‘அது அப்படியில்லை’ என்று சங்கராச்சாரியார் மறுத்திருக்கின்றார்.

அப்படி அவர் மறுப்புச் சொல்லிய ஒரு பகுதியைச் சொல்கிறேன்.

‘‘சம வாய்ப்பு விஷயம் குணம் மனப்பான்மையை வைத்து, தொழில் என்பது வெறும் புரளி என்பது மாதிரிதான் எல்லோருக்கும் சமமான வாய்ப்பு இருக்கவேண்டும் என்பதும் நடைமுறைச் சாத்தியமே இல்லை’’ என்கிறார்.

நம்மாட்கள் புரியாமல், பக்தி என்று சொல்லி ஏமாந்து போகிறார்கள்!

எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், ஸநாதனம் என்பார்கள், கவிதை என்பார்கள், நம்மாட்கள் புரியாமல், பக்தி என்று சொல்லி ஏமாந்து போகிறார்கள்.

சினிமாவைப் பார்த்து இளைஞர்கள் எப்படி ஏமாறு கிறார்களோ, அதுபோன்று சில நேரங்களில், பக்தியைக் காட்டியவுடன், படித்தவர்களும் ஏமாந்துவிடுகிறார்கள்.

‘‘தெய்வத்தின் குரல்’’ மூன்றாம் பகுதி!

இதோ என்னுடைய கைகளில் இருப்பது ‘‘தெய்வத்தின் குரல்’’ மூன்றாம் பகுதி.

‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்பதுதான் சம வாய்ப்பு.

‘‘அனைவருக்கும் அனைத்தும் கூடாது’’ என்பதுதான் ஸநாதனம்.

கம்யூனல் ஜி.ஓ. என்று மிகப்பெரிய அளவிற்கு வந்து விட்டது. அதை ஒழித்துவிடவேண்டும் என்று தெளிவாக இதில் சொல்லியிருக்கிறார்.

அவர்கள் சந்நியாசியாக ஆனாலும்கூட,  அவர்களுக்குக் கம்யூனல் ஜி.ஓ.வைப்பற்றி எவ்வளவு கவலை? என்பதை எண்ணிப் பாருங்கள்.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்றால் என்ன?

பார்ப்பனர்களுக்குரிய உரிமையை மறுத்தார்களா, நீதிக்கட்சி ஆட்சியின்போது?

முற்றும் துறந்த முனிவர்!? சந்நியாசி, அப்படிப்பட்ட வருக்குத் தமிழ்நாட்டு அரசியல் மீது மிகவும் கவலை.

கம்யூனல் ஜி.ஓ.
ஒழிக்கப்படவேண்டுமாம்!

கம்யூனல் ஜி.ஓ. ஒழிக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டு,  ‘‘இதற்கு யார் ஒப்புக்கொள்கிறார்களோ, அவாளுக்கு ஓட்டுப் போடுங்கள்; இதற்கு யார் எதிராக இருக்கிறார்களோ, அவாள் அரசாங்கம் வரக்கூடாது’’ என்பதுதான்.

இதுதானே உங்கள் பிரச்சாரம்! ஆர்.எஸ்.எஸ். இதைத்தானே இன்றைக்கும் செய்கிறது.

எனவே, பெயர்கள் வெவ்வேறாக இருக்கும்; நிலைகள் வெவ்வேறாக இருக்கும். ஆனால், அவர்கள் நூலிழையை ஒரே இலக்கை நோக்கி இழுக்கிறார்கள்.

இந்தப் புத்தி, நம்முடைய சமுதாயத்திற்கு வேண்டாமா? எழுந்து நிற்கவேண்டாமா?

‘‘தெய்வத்தின் குரல்’’ புத்தகத்தில், மூன்றாம் பாகம், 182 ஆம் பக்கத்தில் ‘மகாபெரியவா’  சொல்கிறார்,

சங்கராச்சாரியார் பேசுகிறார்:

‘‘ஜாதி தர்மம், வர்ணாசிரமதர்மம் என்றுதான் இருக்க வேண்டும். இதற்கு மாறுபட்டு இருக்கக்கூடாது’’ என்று அவர் மிகத் தெளிவாகச் சொல்லுகின்றார்.

‘’வர்ணமென்றும், ஆசிரமம் என்றும் தர்மங்களைப் பிரித்துக் கொண்டதால்தான் மற்ற எந்த மதஸ்தர்களாலும் முடியாத மிக உயர்ந்த கொள்கைகளை நம் மதஸ்தர்கள் ஏராளமானவர்கள் அநாதி காலந்தொட்டு அழியாமல் காப்பாற்றி வந்திருக்கிறார்கள்.

மற்ற மத புருஷர்களின் உபதேசத்தையே இன்றைக்கும் இருக்கிற நம்மவர்கள் எடுத்துக்கொண்டு – ஆனால் அவர்களைப்போல் ஆத்ம சம்பந்தமாகவும் இல்லாமல், பெரும்பாலும் அரசியல் நோக்கத்திலேயே, “எல்லோரும் ஒன்றுதான், எல்லோரும் எல்லாக்காரியங்களையும் செய்யலாம்’’ என்று ஆரம்பித்து ஒவ்வொருவரும் இதைச் சொல்லுவது கூடாது.

சிலருடைய அனுஷ்டானத்தாலேயே சகலருக்கும் தர்ம மழை! அன்புமழை, ஆண்டவனுடைய அருள்மழை கிடைத்து விடும்படியாக வர்ணாசிரம விவாகம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

சாஸ்திரங்களை நியாயப்படுத்தி சொல்லுகின்றார்!

எனவே அதிகாரப் பேதப்படி நாலு வர்ணத்தையும் நாலு ஆசிரமத்தையும் ஒட்டி ஏற்பட்டிருக்கும் வித்தி யாசமான தர்மங்களைத்தான் பின்பற்ற வேண்டுமே தவிர, (பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்ர என்ற தர்மங்களைத்தான் பின்பற்ற வேண்டுமே தவிர, மாற்றி வேறு இடத்திற்குப் போகக் கூடாது) எல்லோருக்கும் ஒன்றுதான் தர்மம் என்று பண்ணப்படாதது என்பதிலேயே நம் சாஸ்திரங்கள் உறுதியாக இருக்கிறது” என்று சொல்லி மிகத்தெளிவாகச் சாஸ்திரங்களை நியாயப்படுத்தி சொல்லுகின்றார்.

இங்கே மேலும் சொல்கிறார்: ‘‘ஒரு காலத்தில் பிராம ணன் தலையில் கைவைத்தது பரவிப் பரவி, இப்போது “ஃபார்வர்ட் கம்யூனிட்டி” என்று பேர் வைக்கப்பட்ட சமூகங்களிலும் இது பரவி காலேஜ் அட்மிஷன், சர்க்கார் உத்தியோகம் எல்லாவற்றிலும் பின்னால் தள்ளப்படு வதில் முடிந்திருக்கிறபடியால், இவர்கள் எல்லோரும் எதிர்காலத் தலைமுறை விஷயத்தில் விழிப்போடு ஏற்பாடு செய்ய வேண்டும்’’ – என்கிறார் சங்கராச்சாரியார்.

சங்கராச்சாரியார் ஆன்மீகத்தில் ஈடுபடுகிறாரா? அரசியல் செய்கிறாரா?

விழிப்போடு இருக்க வேண்டுமென்றால் – எதிர்த்து கோர்ட்டிற்குப் போ, கிளர்ச்சி நடத்து!’ என்று சங்கராச்சாரி சொல்கிறார்.

எனவே சங்கராச்சாரியார் ஆன்மீகத்தில் ஈடுபடுகிறாரா? அரசியல் செய்கிறாரா? சங்கராச்சாரியாருக்கு மனிதப்பார்வை இருக்கிறதா? அல்லது பூணூல் பார்வை இருக்கிறதா? என்பதை இதிலிருந்து தெளிவாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.

“சில வகுப்பாருக்கு உரியதையும் புறக்கணித்து சர்க்காரே பிற்பட்ட வகுப்பாருக்கு அதிகப்படி சலுகை காட்டுவதால்தான் இந்த விஷயத்தில் மட்டும் நான் கொஞ்சம் கம்யூனல் பேஸிஸில் (வகுப்பு அடிப்படை யில்) பேசியாக வேண்டியிருக்கிறது.’’

வெளிப்படையாகவே சொல்கிறார். இந்த விஷ யத்தில் நான் கம்யூனலாகத்தான் பேசுகிறேன் என்று வெளிப்படையாகவே அவர் சொல்வதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

சங்கராச்சாரியாருக்குப் பக்கத்திலிருப்பவர்கள் யார் யார் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்!

சங்கராச்சாரியார் ஆன்மீகத்திற்காக மட்டுமல்ல. அவர் அரசியலுக்காகவும் இருக்கிறார். அரசியல் செய்து கொண்டிருக்கிறார். அரசிலமைப்புச் சட்டம் அவருடைய தாழ்வாரத்திலே கிடந்து உருவாக்கப்பட்டது என்பதைத் தெரிந்து, அவருக்குப் பக்கத்திலிருப்பவர்கள் யார் யார் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

இங்கே இன்னொரு கருத்தைச் சொல்லுகின்றார். உலகத்தைப் பார்க்க வேண்டிய இந்த மடாதிபதி லோகத்திற்கே குருவாக இருக்கக்கூடியவர்-எதைப்பற்றி இப்போது கவலைப்படுகின்றார்; மண்டல் கமிஷனைப் பற்றிக் கவலைப்படுகின்றார்.

கம்யூனல் ஜி.ஓ.விற்கு
எதிராகப் பேசுகிறார்!

கம்யூனல் ஜி.ஓ.வான வகுப்பு உரிமைதான் மண்டல் கமிஷனின் தத்துவம். சங்கராச்சாரி இந்த கம்யூனல் ஜி.ஓ.வைப்பற்றி கவலைப்படுகின்றார். கம்யூனல் ஜி.ஓ.விற்கு எதிராகப் பேசுகிறார்.

தன்னை ‘லோககுரு’ என்று சொல்லிக் கொண்டா லும், தன்னுடைய உண்மையான உருவத்தை வெளிப்படுத்துகிறார்.

‘’நான் சொல்வது எல்லாருக்கும்தான் என்றாலும், “பிராமணர்”களில் வசதியுள்ள பென்ஷனர்களுக்கு இதைக் குறிப்பாகச் சொல்கிறேன்.”

-”லோககுரு’’ என்பவருக்குப் “பிராமணர்கள்” என்ற பார்வை எதற்கு?

இன்னுமொரு செய்தி; பத்திரிகையில் பார்த்திருக்கக் கூடும்.

பூணூலை எடுத்து விட்டால்தான் உண்மையான சந்நியாசியாம்!

இந்த சின்ன சங்கராச்சாரிக்கு சடங்குகள் நடந்த போது – அவருடைய பூணூலைக் கத்தரித்து எடுத்தார்களாம். காரணம், பூணூல் இருந்தால் குடும்ப பந்தம், மற்ற பந்தங்கள் எல்லாம் அதற்கு உண்டு என்று அர்த்தம். பூணூலை எடுத்து விட்டால்தான் உண்மையான சந்நியாசி; அதற்காக சம்பிரதாயமாக அதைச் செய்வது வழக்கம் என்று சொல்கிறார்கள்.

சடங்கு நடத்தி பூணூலைக் கத்தரித்துவிட்டு உல கத்தையே நோக்கிப் பார்க்கவேண்டிய சங்கராச்சாரியார் எல்லோருக்கும் என்று சொல்லாமல் ‘பிராமணர்’களுக்கு மாத்திரம் சொல்வதாகச் சொல்கிறார்.

“மற்ற சமூகங்களில் நிராதரவான இளைஞர்களை ஆதரிக்க அந்தந்த சமூகத்தில் வசதியுள்ளவர்கள் நிரம்ப ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். ‘பிராமணர்’களுக்குத்தான் அந்த ஸ்பிரிட் இல்லை. காலேஜ் அட்மிஷன், உத்தி யோகம் பெறுவது எல்லாவற்றிலுமே கம்யூனல் ஜி.ஓ. வந்த நாளாக ‘பிராமணப் பசங்கள் அதிகக் கஷ்ட திசையில் இருக்கிறார்கள். இப்போதும் அந்த சமூகத்தில் சவுகர்யமுள்ளவர்கள் இதைக் கவனிக்காமலிருப்பது நியாயமில்லை.’’

சங்கராச்சாரியை உறுத்திய
கம்யூனல் ஜி.ஓ.!

மற்ற சமூகத்தில் வசதியுள்ளவர்கள் தங்கள் சமூகத்தி னருக்கு உதவிகள் செய்து தருவது உண்மையா? யாரும் தன்னளவிற்கு வந்துவிடக்கூடாது என்று நினைப்ப வர்கள்தான் அதிகம். கம்யூனல் ஜி.ஓ. சங்கராச்சாரியை எவ்வளவு உறுத்துகிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இப்படிச் சொன்னால் என்ன அர்த்தம்?

நம்மவர்களிடையே பிரிவினையை உண்டாக்குவ தற்குத்தானே! முன்னேறிய சமூகத்தினருக்கு, ‘பார்வர்டு’ என்று பெயர் வைத்திருப்பார்களே தவிர, வேறொன்றும் கிடையாது.

‘சூத்திரன்’ என்று சொல்லும்போது, அதில் பார்வர்டும் கிடையாது, பேக்வர்டும் கிடையாது. எல்லோரும் ‘சூத்திரன்’தான்!

எங்களுக்கு ‘வன்முறை
ஒரு பொருட்டல்ல!’

ஆகவே, ‘‘அப்பேர்ப்பட்ட ஒரு சூழ்நிலை வந்த தால், சமூகநீதியில் உயர்ந்து நீங்கள் வந்தாலும், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக வந்தாலும், மிகப்பெரிய பதவிகளுக்குச் சென்றாலும், உங்களை ஸநாதனம், எங்கள் சமூகம், வருணதர்மம் அங்கீகரிக்காது. உங்களை அவமானப்படுத்துவது மட்டுமல்ல, உங்களை எச்சரிப்போம். நாங்கள் இனிமேல் போராடுவதற்கு எல்லா ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டோம். எங்களுக்கு ‘வன்முறை ஒரு பொருட்டல்ல’’ என்று அன்றைக்குக் கோட்சே காட்டியதை, இன்றைக்கு வேறு ரூபத்தில் திருப்பிச் செய்து காட்டுகிறார்கள்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பாட்டு!

ஆகவேதான், நாம் சொன்னோம் – இதற்கு விடியல் என்ன? உடனடியாக அதற்குரிய எதிர்ப்பை நாம் எப்படிக் காட்டுவது என்று கேட்டால், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஒரு பாட்டு எழுதியிருக்கிறார்.

‘‘ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்

உதையப்பராகிவிட்டால் ஓர் நொடிக்குள்

ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி

ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ!’’

என்பதுதான்!

இப்போது அதனை செய்யவேண்டும் என்று நாம் சொல்லமாட்டோம்.

‘‘ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் ஓட்டப்பராகவேண்டும்!’’

அதற்குச் சுருக்கமான வழி, அரசியலமைப்புச் சட்ட ரீதியாக, ஜனநாயக ரீதியாக கண்டுபிடித்த வழி என்ன வென்றால்,

‘‘ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர்

ஓட்டப்பராகவேண்டும்!’’

ஒடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகவேண்டாம்; 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஒழுங்காக ஓட்டுப் போட்டால்,  உதையப்பர்களாக வேண்டாம்.

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும்!

எனவேதான், ஜாதி ஒழியவேண்டும், தீண்டாமை ஒழியவேண்டும், சமூகநீதி நிலைக்கவேண்டும், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும் என்றால், அதற்குத் தாண்டி இன்றைக்கு நம்மை மிரட்டுகிறார்கள், நம்மை அவமானப்படுத்துகிறார்கள்.

அதனை நம் சமூகம் சந்திக்கவேண்டும்.

உறுதியேற்போம்! தொடருவோம்!!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *