துபாய், அக்.14-துபாயில் தரையில் காராகவும், வானில் எழுந்து விமானம் போல் பறக் கூடியதாகவும் உள்ள ‘பறக்கும் கார்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அமீரக-சீன இதற்காக நிறுவனங்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
ஒரு பாலைவன நிலப்பரப்பில் காரில் வேகமாக சென்று கொண்டு இருக்கிறோம். அதே காரில் வானில் உயர்ந்து பறக்குறோம். ஏதோ சினிமா மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளில் தோன்றுவதைபோல் இருக்கலாம். சமூக ஊடகங்களில் கூட காணொலிகளை நாம் பார்த்து இருக்கலாம். ஆனால் அதனை நிஜமாக்கும் வகையில் துபாயில் பறக்கும் கார் ஒன்றை பெங் ஏரோட் என்ற சீன நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த நிறுவனம் புதுமை படைக்கும் வகையில் பறக்கும் கார்களை மத்திய கிழக்கு பகுதிகளில் அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் பிரதேச அளவில் 600 பறக்கும் கார்களை சப்ளை செய்யவும் ஒப்பந்தங்களை பெற்றுள்ளது. ஒரு நீண்ட காராக இது பார்ப்பதற்கு உள்ளது. பட்டனை அழுத்திய உடன் தானாக இறக்கைகள் விரிந்து அதில் விசிறிகள் வெளிப்படுகின்றன.
அமரும் பகுதி ஹெலிகாப்டரின் உடல் பகுதி போல மாறி விடுகிறது. உட்கார்ந்த இடத்திலேயே கார் ஒன்று பறக்கும் வாகனமாக மாறுவதை காணமுடிகிறது. மீண்டும் பட்டனை அழுத்தினால் அந்த பறக்கும் அமைப்பு மீண்டும் காரின் உடலுக்குள் சென்று விடுகிறது. பால்ம் ஜுமைரா பகுதியில் பொது மக்களுக்கு இந்த பறக்கும் கார் குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
சீனாவின் பெண் பைலட் யுவாங்குவான் ச்சூ இதனை இயக்கி காட்டினார். தரையில் இருந்து 2 நிமிடங்கள் வானில் எழும்பி பறந்த இந்த அதிசய வாகனத்தை பலரும் மூக்கில் விரல் வைத்தபடி பார்த்தனர். இந்த காரை வாடிக்கையாளர்களிடம் வருகிற 2027-ம் ஆண்டு முதல் சந்தைப்படுத்த சீன நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எப்படி இருந்தாலும் மனிதரின் கற்பனை ஒரு நாள் நிஜமாவதை இதன் மூலம் உணர முடிகிறது.