சென்னை, அக்.14- திருநங்கைகள் பாதுகாப்புக்கான அரண் இல்லங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கட்டடம் திறப்பு
மதுரை மாவட்டம் தல்லாகுளம் தங்கராஜ் சாலையில் கட்டப்பட்டுள்ள மதுரை அரசு சட்ட கல்லூரிக்கான புதிய கல்விசார் மற்றும் நிர்வாக தொகுதி கட்டடத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (13.10.2025)திறந்து வைத்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் வேலூர் அரசு சட்டக் கல்லூரிக்கு தரை மற்றும் 2 தளங்களுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டிடத்தையும் அவர் திறந்து வைத்தார்.
அரண் இல்லங்கள்
திருநங்கைகள் நலன் காத்திடும் தொடர் நடவடிக்கைகளின் வரிசையில், திருநங்கைகள் எதிர்நோக்கும் சமூக, மனநலம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த சவால்களை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு பாதுகாப்பான, மதிப்பும் மரியாதையும் நிறைந்த ஆதரவான வாழ்விட சூழலை உருவாக்கும் நோக்கில், அரண் இல்லம் என்ற சிறப்பு மய்யங்களை நிறுவ தமிழ்நாடு அரசு தீர்மானித்தது.
அதன் முதல்கட்டமாக, சென்னை செனாய்நகர் மற்றும் மதுரை அண்ணாநகர் ஆகிய இடங்களில் அமைக் கப்பட்டுள்ள அரண் இல்லங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (13.10.2025) திறந்து வைத்தார்.
25 பேருக்கு அனுமதி
குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கை, திருநம்பி, இடைபாலின நபர்களுக்கு 1 வாரம் முதல் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை பாதுகாப்பான மற்றும் தற்காலிக தங்குமிடம் வழங்குதல், தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தின் அடையாள அட்டை பெற்ற எந்த மாவட்டத்தைச் சேர்ந்த நபரும் பயன்பெறுவ தோடு, ஒவ்வொரு இல்லத்திலும் 25 பேர் தங்க அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை சுற்றுச்சூழல் பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய காட்சிமுனை மற்றும் தள மேம்பாட்டுப் பணிகள், கரூர் மாவட்டத்தில் உள்ள பொன்னணியாறு அணையில் மேம்படுத்தப்பட்ட படகுத்துறை பணிகள், சுகாதாரப் பணிகள், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைக்கப்பட்ட சாகச மற்றும் சுற்றுச்சூழல் முகாம் என முடிவுற்ற 4 சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
அடிக்கல்
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் அமைதுள்ள புங்கனூர் ஏரியில் படகுகுழாம் உள்ளிட்ட பணிகள், திண்டுக்கல் மாவட்டம் புல்லாவெளி அருவி மற்றும் ஒட்டன்சத்திரம்-இடையக் கோட்டை நங்காஞ்சியாறு அணைப்பகுதி, திருச்சி மாவட்டம் புளியஞ்சோலை அருவி ஆகியவற்றில் சுகாதார வளாகம், நடைபாதை, சிறுவர் விளையாட்டு பூங்கா, குடிநீர் வசதி, வழிகாட்டுப்பலகைகள் மற்றும் மின் வசதிகள் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள். ராமேசுவரத்தில் ஓட்டல் தமிழ்நாடுக்கு தேவையான உள்கட்டமைப்பு மற்றும் நவீன வசதிகளுடனான கட்டுமானப் பணிகள் ஆகிய புதிய திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் நேற்று (13.10.2025) அடிக்கல் நாட்டினார்.
சிப்காட்டில் 16 குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் ரூ.190 கோடி செலவில் உணவு பூங்காக்கள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அறநிலையத்துறை
பின்னர் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 43 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4 திருக்கோவில்களில் 4 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு உதவி ஆணையர் அலுவலக கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி. ரூ.48 கோடியே 81 லட்சம் செலவில் 7 திருக்கோவில்களில் 13 முடிவுற்ற பணிகள், ஒரு இணை ஆணையர் அலுவலகம், 13 ஆய்வர் அலுவலகங்களை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் உதவி பொறியாளர் (மின்), இளநிலை வரைதொழில் அலுவலர் மற்றும் உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 83 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் மணி வாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சிறீதர், கூடுதல் ஆணையர் பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.