விழுப்புரம், அக். 14- விழுப்புரத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
தொல்லியல் பொருட்கள்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த வரலாற்று பேராசிரியர் அரங்க மாயகிருஷ்ணன், கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை ஆய்வாளர் ஜெயப்பிரதா ஆகியோர் வீடூர் பகுதியில் களஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்தில் நெசவுத்தொழில் சிறப்பாக வளர்ந்திருந்ததை காணும் விதமாகவும், நெசவு தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட சுடுமண்ணால் ஆன கோள வடிவில் செய்யப் பட்ட துளை வடிவம் கொண்ட தக்களி, சுடுமண் பானை ஓடுகள், பெண்கள் கண்ணிற்கு மை இடுதலுக்கு பயன்படுத்திய செம்பினால் ஆன அஞ் சனக்கோல் உள்ளிட்டவற்றை கண்டு பிடித்துள்ளனர். இந்த அஞ்சனக்கோல் 4.5, 4.8, 8.7 என உயரம் கொண்டவைகளாக கிடைத்துள்ளன.
சங்க காலத்தில் பருத்தி, எலிமயிர் மற்றும் பட்டு நூலில் இருந்து ஆடைகள் நெய்யப்பட்டன என்பதற்கும், நெசவுத் தொழில் வீடுகள்தோறும் ஒருசிறு தொழிலாக செய்யப்பட்டதற்கும் ஆதாரமாக இவை கிடைக்கப்பெற்றுள்ளன. அதேபோன்று அஞ்சனக் கோல் என்பது கண்ணுக்கு மை தீட்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும்,
இது பெரும்பாலும் மெல்லிய உலோகக் கம்பியாக இருக்கும்.அஞ்சனக்கோல், அஞ்சன சலாகை என்றும் அழைக்கப்படுகிறது. பண்டைய காலத்தில் பொன், வெள்ளி, செம்பு அல்லது இரும்பு போன்ற உலோகங்களில் செய்யப்பட்டிருந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் வீடூரில் கண்டெடுக்கப் பட்டுள்ளதால் அங்கு அகழாய்வு மேற்கொள்ள வேண்டுமென வரலாற்று ஆய்வாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் வழுதாவூரில் சங்ககால மணிகள் செய்வதற்கு தொழிற்சாலை இருந்ததற்கான ஆதாரமாக மணி செய்யும் மூலப்பொருட்கள், மணி கோர்க்கும் ஊசிகள் ஆகியவையும் கிடைக்கப்பெற்றுள்ளன. கருப்பு, சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் போன்ற நிறங்களில் கிடைக்கப்பெற்ற மணிகள் சங்க காலத்தில் சிதம்பரம் மணிக்கொல்லை தொழிற்சாலையில் இருந்ததுபோல இங்கேயும் கிடைக்கப்பெற்றுள்ளன.