உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெண்கள் இளம் வயதிலேயே பெரும் சவால்களை சந்திக்கின்றனர். அது அவர்களில் உடல் நிலையிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பெண்கள் உடல் ஆரோக்கியத்திற்காக செய்துகொள்ள வேண்டிய 8 பரிசோதனைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
உடல் ஆரோக்கிய ரீதியில் சில சவால்களை பெண் குழந்தைகள் எதிர்கொள்கின்றனர். குறிப்பாக பருவம் எய்திய பிறகு இந்த சிக்கல் தொடங்கி விடுகின்றது. இதன் விளைவாக மாபெரும் சிக்கல்களுக்கு பெண்கள் பின்னாளில் ஆளாகிவிடுகின்றனர். போதிய கால இடைவெளியில் பெண்களுக்கு அத்தியாவசியமான மருத்துவப் பரிசோதனைகளை செய்து கொண்டால் பல சிக்கல்களை தடுக்க முடியும். அந்த வகையில் பெண்கள் கட்டாயம் செய்துகொள்ள வேண்டிய 7 பரிசோதனைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சிபிசி பரிசோதனை : முழு ரத்தக் கணக்கு என்று சொல்லக் கூடிய சிபிசி பரிசோதனையை பெண் குழந்தைகளுக்கு செய்வதன் மூலமாக, அவர்களின் ரத்தத்தில் உள்ள சிவப்பு ரத்த அணுக்கள், வெள்ளை ரத்த அணுக்கள், ரத்த தட்டுக்களின் எண்ணிக்கை குறித்து தெரிய வரும். இந்தப் பரிசோதனையின் மூலமாக ரத்தச்சோகை, தொற்றுகள், நோய் எதிர்ப்பு சக்தி பற்றாக்குறை போன்ற சிக்கல்களை கண்டறிந்து கொள்ளலாம். உடல் சோர்வு, உடல் எடை இழப்பு, காய்ச்சல், பலவீனம் போன்ற அறிகுறிகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு இந்தப் பரிசோதனை கட்டாயம் ஆகும்.
இரும்புச்சத்து : இரும்புச்சத்து குறைபாடு காரணமாகவே ரத்தச்சோகை ஏற்படுகின்றது. உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் போதுமான அளவில் உற்பத்தி ஆகாதபோது ரத்தச்சோகை ஏற்படுகின்றது. இரும்புச்சத்து கொண்ட உணவுகள் மற்றும் மருந்துகளின் மூலமாக இதனை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
வைட்டமின் பரிசோதனை : வைட்டமின் பரிசோதனையை செய்து கொள்வதன் மூலமாக பெண்களின் உடலில் வைட்டமின் டி மற்றும் பி12 பற்றாக்குறை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். வைட்டமின் டி சத்து குறைபாடு காரணமாகவே எலும்பு சார்ந்த பிரச்சினைகள் உண்டாகும். தசை பலவீனம், சோர்வு, எலும்புகளில் வலி போன்ற சிக்கல்களை எதிர்கொள்ளும் பெண்களுக்கு இந்தப் பரிசோதனை அவசியமானது.
சிறுநீர் பரிசோதனை: சிறுநீரை எடுத்து மைக்ரோஸ்கோபிக் பரிசோதனை செய்வதன் மூலமாக அதில் ஏதேனும் தொற்றுகள் இருக்கிறதா என்பதை கண்டறியலாம். அடிக்கடி வயிற்று வலி, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் அல்லது சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியேறுதல் போன்ற சிக்கல்களை எதிர்கொள்பவர்களுக்கு இந்தப் பரிசோதனை அவசியம் ஆகும்.
மல பரிசோதனை : குடலில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய மல பரிசோதனை உதவியாக அமையும். நீடித்த வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற சிக்கல்களை எதிர்கொள்ளும் பெண்களுக்கு இந்தப் பரிசோதனை செய்யலாம்.
கண் பார்வை பரிசோதனை : உலகை விசாலமாகக் காட்டும் திறவுகோல் நம் கண்கள் தான். அத்தகைய கண்களின் ஆரோக்கியம் குறித்தும், குறிப்பாக கண் விழித்திரையின் ஆரோக்கியம் குறித்தும் அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
ஹார்மோன் பரிசோதனை : பருவம் அடைவதில் தாமதம் ஏற்படுகின்ற பெண்களுக்கு இந்தப் பரிசோதனையை கட்டாயமாக செய்ய வேண்டும். அதேபோல தைராய்டு செயல்பாடு, இனப்பெருக்க திறன், கர்ப்பப்பை நீர்க்கட்டி போன்ற பிரச்சினைகளை அறியவும் இந்தப் பரிசோதனை அவசியம் ஆகும்.
புற்றுநோய் பரிசோதனை : பெண்களை அதிகளவில் தாக்கும் மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆகியவற்றை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அவசியமானது. 30 வயதை கடந்த பெண்கள் புற்றுநோய்க்கான பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மேலும், மார்பக பகுதி மற்றும் பெண் உறுப்பில் அசௌகரியம் இருக்கும் பெண்கள் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனையை மேற்கொள்ளுவது அவசியம்.