ஜகார்த்தா. அக். 14- இந்தோனேசியாவில் உள்ள டரோஜா பழங்குடியினர் இறந்தவர்களின் உடலை பதப்படுத்தி பாதுகாத்து பல ஆண்டு கழித்து அதிக செலவில் கொண்டாட்டத்துடன் இறுதி நிகழ்வை நடத்துகின்றனர். உலகின் பல பகுதிகளில் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படும் அல்லது எரியூட்டப்படும். ஆனால், இந்தோனேசியாவில் உள்ள டரோஜா பழங்குடியினர், தங்கள் குடும்பத்தில் இறப்பவர்களின் உடலை பதப்படுத்தி வைத்து அவர்களுடன் வாழ்கின்றனர். இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி பகுதியில் உள்ள டனா டரோஜா பகுதியில் இந்த வினோத வழக்கம் உள்ளது. இறப்பு என்பது மற்றொரு மிகப் பெரிய பயணம் என அவர்கள் நம்புகின்றனர்.
இப்பகுதிக்கு சென்றால் அங்குள்ள பழங்குடியினர், இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி அவற்றை டாங்கோனன் என்ற இடத்தில் வைத்து அவர்களுடன் வாழ்கின்றனர். அவற்றுக்கு உணவும் படைக்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பதப்படுத்தப்பட்ட உடலை சுத்தம் செய்து அவற்றுக்கு புத்தாடையும் அணிவித்து, தங்கள் குடும்பத்தில் புதிதாக பிறப்பவர்களிடம் அறிமுகம் செய்கின்றனர்.
பதப்படுத்தப்பட்ட அந்த உடல்கள் தலைமுடி மற்றும் வாயில் பற்களுடன் காய்ந்த நிலையில் உள்ளன. சிலரது உடல்கள், அவர்களின் வாழ்க்கைத் துணை இறக்கும் வரை பாதுகாக்கப்படுகின்றன. பல ஆண்டுகள் கழித்து இந்த உடல்களுக்கு அதிக பொருட் செலவில் கொண்டாட்டத்துடன் இறுதி நிகழ்வுகள் 5 நாட்களுக்கு நடத்தப்படுகிறது. அப்போது எருமை, பன்றிகள் பலியிடப்பட்டு நூற்றுக்கணக்கானோருக்கு விருந்தளிக்கின்றனர். இந்த இறுதி நிகழ்வில் தங்கள் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் செலவிடுகின்றனர். இறுதியில் ஒரு குடிசையில் வைத்து இறந்தவர்களின் உடல் எரியூட்டப்படுகிறது.