புதுடில்லி, அக் 14- தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மோடி அரசு சிதைத்து விட்டது என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
12.10.2025 அன்று கார்கே வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ தளப்பதிவில், ’20 ஆண்டுகளுக்கு முன், டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் தலைமைத்துவத்தின்கீழ் செயல்பட்ட காங்கிரஸ் தலைமையிலான முற்போக்குக் கூட்டணி அரசு, அய்க்கிய ஆர்டிஅய் எனப்படும் ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005’-அய் அமல்படுத்தியதன் மூலம் வெளிப்படைத்தன்மை மிகுந்த ஒரு சகாப்தத்தில் ஒன்றிய அரசு அடியெடுத்து வைத்தது.
ஆனால், கடந்த 11 ஆண்டுகளில் மோடி அரசு ஆர்டிஅய் சட்டத்தை அமைப்பு ரீதியாக அரித்துவிட்டது. அதன்மூலம் ஜனநாயகத்தையும், குடிமக்களின் உரிமையையும் ஓட்டைபோட்டு விழுங்கியுள்ளது.
2019 இல், தகவல் தொடர்பு ஆணையர்களின் பத விக்காலம் மற்றும் ஊதிய விவகாரங்கள் ஆகியவற்றின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டதன் மூலமாக சுயாட்சி கண்காணிப்பு நிறுவனங்களை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நிறுவனங்களாக மாற்றி மோடி அரசு ஆர்டிஅய் சட்டத்தை ஹேக் செய்தது.
மின்னணு முறையிலான தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டம், 2023-இன் மூலம், இச்சட்டத்தால் ஆர்டிஅய் சட்டத்தின் பொதுநல குறிக்கோள் சிதைக்கப்பட்டது.
மேலும், ஊழலை மூடிமறைக்கும் ஒர் பாதுகாப்பு கவசமாக ‘தனிப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது’ என்ற பெயரிலான அணுகுமுறை பயன்படுத்தப்படுகிறது.
மத்திய தகவல் ஆணையரகமானதுதலைமை தகவல் ஆணையர் இல்லாமல் இயங்கி வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இப்பதவி 11 ஆண்டுகளில் 7 ஆவது முறையாக காலியாக உள்ளது. இப்போது அங்கு 8 காலியிடங்கள் உள்ளன. அவையனைத்தும் 15 மாதங்களுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ளன.
‘எந்தத் தரவும் இல்லை’ என்ற அறிவிப்பை இப்போது அதிகமாகப் பார்க்க முடிகிறது. அதிலும் குறிப்பாக, கரோனா, கால மரணங்கள் உள்ளிட்ட பல முக்கிய பேரிடர்கள் குறித்து அறிய விரும்பினால், இந்த அறிவிப்பே தென்படுகிறது. இதன்மூலம், தரவுகளை அழித்து பொறுப்புத்துறப்பேற்கப் பார்க்கிறது அரசு.
2014 முதல், நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்டிஅய் செயல்பாட்டாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதன்மூலம்,‘பயங்கரவாதப் பருவகாலம்’ என்பதை அவிழ்த்துவிட்டு, உண்மையை வெளிச்சம்போட்டுக் காட்ட முயற்சிப்பவர்களை தண்டிக்கப் பார்க்குமொரு அணுகுமுறை இருப்பதாக கார்கே ‘எக்ஸ்’ தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய நீதித்துறை தரவு வலை அமைப்பு
நீதித்துறை பற்றி தரும் தகவல்கள்
புதுடில்லி, அக்.14 தேசிய நீதித்துறை தரவு வலையமைப்பு (National Judicial Data Grid) என்பது, இந்திய உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள், மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களைப் பற்றிய தகவல்களின் முழுமையான களஞ்சியம் ஆகும். இது முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டது. இந்த வலையமைப்புப் பக்கத்தின் உதவியுடன், இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும்.
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் தவிர, நீதிபதி பதவியிடங்களின் காலியிடங்கள் குறித்த புள்ளிவிவரங்களையும் அறிந்து கொள்ளலாம். இந்த வலையமைப்பு, நீதித் துறையின் பல்வேறு நிலைகளில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையை நாட்டின் பொதுமக்கள் அறிந்துகொள்ள உதவுகிறது. முக்கியமாக நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கும் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு, இந்தத் தரவுத்தளம் மூலம் கிடைக்கும் புள்ளிவிவரங்கள் மிகவும் உதவியாக இருக்கின்றன.
இந்த வலையமைப்புப் பக்கத்தில் கிடைக்கும் தரவுகள், நீதித்துறை செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த உதவுகின்றன. இந்த தகவல்கள் நாள்தோறும் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. எனினும், இந்தத் தகவல்களைப் புதுப்பிப்பதில் அவ்வப்போது சிக்கல்கள் எழவும் செய்கின்றன.
நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் இருந்து விரிவான மற்றும் துல்லியமான தரவுகளை பகிரும்போதுதான், அந்தத் தகவல்களை ஒருங்கிணைப்பு செய்து. அதன்மூலம் கிடைக்கும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், திறன் மிகுந்த நீதித் துறை செயல்பாடுகளுக்கான கொள்கைகளை வகுக்க முடியும். ஆகவே, அனைத்து நீதிமன்றங்களும் இந்தத் தரவுகளை தவறாமல் பகிர வேண்டும் என்று இந்திய சட்ட ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
பிரதமர் கிசான் திட்டத்தில் விதிகளை மீறி பணம் பெற்ற இணையர்
புதுடில்லி, அக்.14 பிஎம் கிசான் திட்டத்தில் கணவனும், மனைவி இருவரும் விதிகளை மீறி பணம் பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி குடும்பத்தில் ஒரு உறுப்பினர் மட்டுமே இந்தச் சலுகையை பெறத் தகுதியானவர். என்றாலும் கணவன், மனைவி என இருவருமே பயன்பெற்றுள்ளது ஒன்றிய வேளாண் அமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம்-கிசான்) திட்டத்தின் 31.01 லட்சம் பயனாளிகள் குறித்து ஆராயப்பட்டது. அதில் 17.87 லட்சம் பேர் கணவன்-மனைவி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி குடும்பத்தில் ஒருவர்தான் பயனாளியாக இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இருப்பினும், கணவன்-மனைவி இருவரும் ஒரே நேரத்தில் பணப் பலன்களை இந்த திட்டத்தின் மூலம் பெற்றுள்ளனர். இது விதிமுறைகளை மீறிய செயலாகும்.
இதையடுத்து, ஒன்றிய வேளாண் அமைச்சகம் தற்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுகுறித்து அனுப்பியுள்ள கடிதத்தில், அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் பயனாளிகள் குறித்த சரிபார்ப்புப் பணிகளை முடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.