சென்னை, அக்.14– சென்னையில் மதுரவாயல் தொகுதியைச் சேர்ந்த பொது மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கும் நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி வாழ்த்திப் பேசினார்.
அப்போது அவர், “நம் அரசு அமைந்த நாள் முதல், இன்று வரை தமிழ்நாடு முழுவதும் சுமார் 19 லட்சம் பட்டாக்களைக் கொடுத்திருக்கிறோம்’’என்று அவர் குறிப்பிட்டார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:
இன்றைக்கு மதுரவாயல் பகுதிக்கு வருகை தந்து, 1,600 பேருக்கும் வீட்டு மனைப் பட்டாக்களை வழங்குகின்ற விழாவில், உங்களை எல்லாம் சந்திப்ப தில் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.
உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் இவை மூன்றும்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் இதுதான் அடிப்படையான தேவை. இதில் உடை, உணவு பெரும்பாலும் அனைவருக்கும் கிடைத்துவிட்டது என்று சொல்லலாம். ஆனால், குடியிருக்க இடம் வேண்டும், அதுவும் பட்டாவுடன் வேண்டும் என்பதுதான் இன்று இருக்கின்ற மக்களின் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, வீட்டுக்குப் பட்டா இல்லை என்றால், அதனால் ஏற்படுகின்ற வேதனைகளைப் பட்டியலிட முடியாது. மின்இணைப்பு வாங்க முடியாது, குடிநீர் இணைப்பு சாதாரணமாகக் கிடைத்துவிடாது, வங்கியில் கடன் கிடைப்பது கடினம், வேறு பிரச்சினைகள் காரணமாக எப்போது இடத்தை அப்புறப்படுத்த சொல்வார்களோ என்ற பதற்றம் கூடுத லாக இருக்கும்.
உங்களைத் தேடி பட்டா
இன்றைக்கு உங்களின் அந்த கஷ்டங்கள், பதற்றங்களை எல்லாம் போக்கி, பட்டா கொடுப்பதற்காக உங்க ளைத் தேடி வந்துள்ளோம். இன்று பட்டா கிடைத்ததால், இன்று இரவு உங்களின் வீடுகளில் நீங்கள் நிம்மதியாக, மகிழ்ச்சி யாக உங்கள் குடும்பத்துடன் தூங்கலாம். பட்டா என்பது உங்களின் நெடுநாள் கோரிக்கை மட்டுமல்ல, அது உங்களின் உரிமை. இன்றைக்கு, நம் முதலமைச்சர் அவர்களும், நம் திராவிட மாடல் அரசும் உங்களின் உரிமையை நிலைநாட்டி இருக்கிறது. இந்த மதுரவாயல் பகுதி யைப் பொறுத்தவரை, மிக வேகமாக வளர்ந்து வருகிற பகுதி. இந்தப் பகுதி எந்த அளவுக்கு வளர்கிறதோ, அதற்கு இணையாக உங்களின் வாழ்க்கைத் தரமும் வளர வேண்டும் என்பதுதான் நம் முதலமைச்சர் அவர்களின் ஒரே இலட்சியம்.
ஒரு லட்சத்து 40 ஆயிரம்
மதுரவாயல் மட்டுமல்ல, சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு ஒரேயடியாக பட்டா கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் எங்க ளுக்கெல்லாம் உத்தரவிட்டார்கள். சென்ற ஆண்டு நம் வருவாய்த்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில், ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் உதவியுடன் நம் முதல மைச்சர் அவர்கள் பலமுறை ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார்கள். அந்தக் குழுவின் பரிந்துரையைக் கொண்டு, நம் முதலமைச்சர் அவர்களின் வழி காட்டுதலின் அடிப்படையில், சென்னை மாவட்டத்தில் மட்டும், கடந்த ஓராண்டில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பயனாளிகளுக்கு, பட்டா வழங்கியுள்ளோம் என்பதை, இங்கு நான் மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டு உள்ளேன்.
சென்னை மட்டுமல்ல, பிற மாவட்டங்களில் புறம்போக்கு நிலத்தில் வசிக்கின்ற மக்களுக்கும் உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்று நம் முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். நம் முதலமைச்சர் தலைமையிலான, நம் அரசு அமைந்த நாள் முதல், இன்று வரை தமிழ்நாடு முழுவதும் சுமார் 19 லட்சம் பட்டாக்களைக் கொடுத்திருக்கிறோம் என்பதை இங்கு பெருமையோடு கூறிக்கொள்ள விரும்புகிறேன். இதற்குத் துணையாக இருந்து வழிகாட்டிய முதலமைச்சர் அவர்களுக்கும், அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், இந்த நேரத்தில் எனது பாராட்டுகளையும், நன்றியையும், வாழ்த்துகளையும், பயனாளிகளின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படி ஏழை, எளிய மக்க ளின் முன்னேற்றத்துக்காக டாக்டர் கலைஞர் வழியில், நம் முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து உழைத்துக்கொண்டு இருக்கிறார். கழக அரசைப் பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு நாளும் மக்களின் அன்பும், ஆதரவும் பெருகிக்கொண்டே இருக்கின்றன. அரசைத் தேடி மக்கள் வரவேண்டும் என்ற நிலைமையை மாற்றி, இன்றைக்கு மக்களைத்தேடி நம் அரசு வந்துகொண்டு இருக்கிறது. அந்த நிலைமையை முதலமைச்சர் அவர்கள் உருவாக்கி இருக்கிறார்.
குறை தீர்க்கும் முகாம்
கடந்த இரண்டு மாத காலமாக, `உங்க ளுடன் ஸ்டாலின்’ என்ற பெயரில், தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் மக்கள் குறைதீர்க்கும் முகாம்களை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறோம். அந்த முகாம்களில் வருகிற மனுக்களை முடிந்தவரை, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவற்றைப் பரிசீலனை செய்து வருகிறோம். முதலமைச்சர் அவர்களின் தனிப்பட்ட மேற்பார்வையில், அனைத்து அரசு அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, முதலமைச்சரின் தனி கவனத்துடன் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, சமீபத்தில் தொடங்கப்பட்ட வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களின் வீட்டுக்கே சென்று ரேசன் பொருட்களைக் கொடுக்கின்ற முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை நம் முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தினார். மகளிர் வளர்ச்சிக்காக மகளிர் விடியல் பயணத்திட்டம், மகளிரின் கல்வி உதவிக்காக புதுமைப்பெண் திட்டம், மாணவர்களின் கல்விக்காக தமிழ்ப்புதல்வன் திட்டம், பள்ளி குழந்தைகளுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மகளிரின் பொருளாதார உரிமைக்காக கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்று பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்.
இப்படி பல்வேறு முற்போக்கான திட்டங்களின் காரணமாக, இன்றைக்கு இந்தியாவிலேயே நம் தமிழ்நாடு 11.19 சதவிகித வளர்ச்சியுடன் முதலிடத்தில் சிறப்பாக விளங்கிக்கொண்டு இருக்கிறது. ஆகவே, உங்களுக்கு இன்னும் அதிக மாக உழைக்க நம் முதலமைச்சர் அவர்களும், நாங்களும் காத்து இருக்கி றோம். இந்த அரசு என்றைக்கும் மக்க ளாகிய உங்களுக்குத் துணையாக இருக்கும். எனவே, இந்த அரசுக்குத் துணையாக நீங்கள் என்றைக்கும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, பட்டாக்களைப் பெற வந்துள்ள உங்கள் அத்தனை பேருக்கும் மீண்டும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்த அமைச்சர் பெருமக்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் மீண்டும் என் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து, வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.
இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்திப் பேசினார்.
பங்கேற்றவர்கள்
அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சு.முத்துசாமி, மா.சுப்பி ரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் காரம்பாக்கம் கணபதி, மருத்துவர் எழிலன், அய்ட்ரீம்ஸ் மூர்த்தி, ஜோசப் சாமுவேல், பிரபாகர்ராஜா, வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன், துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் நொளம்பூர் ராஜன், டி.கே.மூர்த்தி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா, நில நிர்வாக ஆணையர் கே.எஸ்.பழனிசாமி, நில அளவு மற்றும் நிலவரி திட்டத்தின் இயக்குநர் தீபக் ஜேக்கப், சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் கணேசன், வட்டாரத் துணை ஆணையாளர் அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் கீதா, குணசேகரன், பாலவாக்கம் விஸ்வநாதன், பாலவாக்கம் மனோகரன், வேளச்சேரி பாஸ்கர், வீரமணி, சங்கர் கணேஷ், ராமாபுரம் ரவி, நவராஜ், நரேன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.