புதுடில்லி, அக்.14- உச்சநீதிமன்றம் பிறப்பித்தது நிரந்தர உத்தரவு கிடையாது என தி.மு.க. வழக்குரைஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான பி.வில்சன் கூறினார்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து தி.மு.க. வழக்குரைஞர் பி.வில்சன் டில்லியில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-
இடைக்கால
உத்தரவுதான்
உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் இடைக்கால உத்தரவுகள் தான். அவை நிரந்தர உத்தரவுகள் கிடையாது. அவை ரத்தாக வாய்ப்பு இருக்கிறது. இந்தவழக்கில் இறுதியில் என்ன சொல்கிறார்கள்? என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இது மட்டும் அல்ல, இந்த வழக்கில் 2 பேர், அவர்களது பெயரில் மோசடியாக மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக விவாதித்து உள்ளனர். அது குறித்து மனுதாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. எனவே, அது மோசடி என தெரிய வந்தால் இந்த தீர்ப்பு ரத்து செய்யப்பட்டு விடும். எங்களையும் பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் கூறி யுள்ளது.
தண்டனை கிடைக்கும்
2 பேர் பெயரை மோசடியாக பயன்படுத்தி யது தெரிய வந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைக்கும். அவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால், கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை. தமிழ்நாடு அரசுதான் 10 லட்ச ரூபாயை உடனே அளித்தது.
இந்த வழக்கில் வெற்றி கிடைத்து விட்டதாக ஆதவ் அர்ஜூனா பேசுகிறார். வாய்க்கு வந்தபடி அவர் பேசியிருக்கிறார். அவர் பேசியது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.