மலையாளத் திரைப்படமான ‘ஹால்’ தணிக்கை பணியின்போது, ஒன்றிய திரைப்படத் தணிக்கை வாரியம் அப்படத்தின் தயாரிப்பாளர்களை ‘மாட்டிறைச்சி பிரியாணி சாப்பிடும் காட்சியை’ நீக்கினால் தான் தணிக்கை சான்றிதழ் தருவோம் என்று மிரட்டல் பாணியில் கூறியிருப்பது திரைப்படத் தயாரிப்பாளர்களுக்குப் பெரும் பின்னடைவையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர் வீரா கூறியதாவது: ‘ஹால்’ திரைப்படத்திற்கான சான்றிதழைப் பெறுவதற்காக, செப்டம்பர் முதல் வாரத்தில் ஒன்றிய தணிக்கை அலுவலகத்தில் ஒப்படைத்தோம். பின்னர் படம் தணிக்கைக்காக மும்பையில் உள்ள சி.பி.எஃப்.சி. தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டது.
ஒரு கதாபாத்திரம் புர்கா அணிந்து இருக்கும் காட்சி! ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் என்ற அடையாளத்தை மறைத்துத் திரியும் ஒருவரைப் பார்த்து ஒருவர் ஆர்.எஸ்.எஸ். பாணியில் ‘த்வஜ பிரணாம்’ – ‘வணக்கம்’ என்று கேலியாக வாழ்த்துச் சொல்லும் காட்சி!
படத்தின் ஒரு காட்சியில் வரும் ‘கணபதி வட்டம்’ என்ற பெயரை ‘சுல்தான் பேக்கரி’ என்று மாற்றப்பட வேண்டும் மற்றும் படத்தில் மாட்டிறைச்சி பிரியாணி சாப்பிடும் காட்சி போன்றவற்றை நீக்கவேண்டும் என்று கூறியுள்ளனர்’’ என்றார்.
தணிக்கை வாரிய அதிகாரிகளின் நடவடிக்கைகள் வினோதமாக இருப்பதாகவும், இந்தப் பெரிய மாற்றங்களைச் செய்த பிறகும் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் (வயது வந்தவர்களுக்கானது) மட்டுமே வழங்குவதாக மிரட்டுவதாகவும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
‘‘இப்படம் மதங்களுக்கிடையேயான திருமணத்தைப் பற்றிய கருத்தை மட்டுமே கொண்டுள்ளது. மேலும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மதம் மாறாமல் தங்கள் உறவுகளைத் தொடர்வார்கள்” என்று தயாரிப்பாளர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.
ரூ.6 கோடி செலவில் உருவான இந்தப் படம், முதலில் செப்டம்பர் 19-ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. தணிக்கைக் குளறுபடிகள் காரணமாக, அதன் வெளியீட்டுத் தேதியை அக்டோபர் 10-ஆம் தேதிக்கு (தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது) மாற்றியுள்ளனர்.
தணிக்கைத் துறை அதிகாரிகள் தாமதம் செய்வதால், திரைப்படத் தயாரிப்பாளர்கள் கேரள உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். ஒன்றிய அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்படி ஒன்றிய அரசு வழக்குரைஞர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு அக்டோபர் 14-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
எப்படி இருக்கிறது? ஒன்றிய அரசு, தன்னதிகாரம் படைத்த அத்தனை நிர்வாகத்தையும் தன் கட்டை விரல் அழுத்தத்தின் கீழ் நிறுத்துகிறது. தேர்தல் ஆணையமாக இருந்தாலும் சரி, நீதிமன்றங்களாக இருந்தாலும் சரி ‘கோல் எடுத்தால் குரங்காடும்’ என்ற நிலைதான்.
குடியரசுத் தலைவரையுமே எடுத்துக் கொள்ளலாம். நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழா, திறப்பு விழாவுகளுக்குக் குறைந்தபட்சம் அழைப்புக்கூட அவருக்கில்லை.
எல்லாம் மோடி! மோடி!! மோடி!!! அதற்கடுத்து ‘அமித்ஷா! அமித்ஷா!! அமித்ஷாதான்!!!
ஒரு திரைப்படத்தில் மாட்டுக் கறி சாப்பிடும் காட்சியை மாற்றி அமைக்க வேண்டும் என்று சொல்வதெல்லாம் தணிக்கைத் துறையின் வேலையா?
உண்மையைச் சொல்லப் போனால் மாட்டுக்கறி ஏற்றுமதியில் முன்னிலையில் இருப்பவர்கள் எல்லாம் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்தாம். உணவுப் பிரச்சினையில்கூட மதவாத மூக்கை நுழைப்பது படுேகவலமாகும்!
பசுவைக் ‘கோமாதா’ என்று பரப்புரை செய்யும் பார்ப்பனர்கள் பார்வைக்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டு!
யாகங்கள்பற்றி யஜுர் வேதம் தரும் பட்டியலை எடுத்துச் சொன்னால் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்கள்?
கோஸிவம் என்ற யாகம் பசு மாடு, காளை மாடு இவைகளைக் கொல்லும் யாகம். அஷ்டதச பசு விதானம் பதினெட்டுப் பசுக்களைக் கொலை செய்து நடத்தும் யாகம் – இப்படி எத்தனையோ எடுத்துக்காட்டுகளை அவர்களின் வேதங்களிலிருந்தே பட்டியலிட முடியும்.
தானடித்த மூப்பாகத் துள்ளிக் குதிக்குது ஆரியம், இதற்கொரு முடிவு கட்டாவிட்டால் இந்தியாவின் எதிர்காலம் இருள் சூழ்ந்து விடும் – எச்சரிக்கை!