பாட்னா, அக். 13 – அடுத்த மாதம் பீகார் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த மாதமே வாக்காளர் பட்டியல்சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் துரித கதியில் செய்து முடித்தது.
இதில் 3.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப் பட்டனர். உயிரிழந்தவர்கள், ஊடுருவல்காரர்கள் உள்ளிட்ட காரணிகளை வைத்து இந்த திருத்தும் மேற்கொண்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இருப்பினும் இதில் பாஜகவின் வாக்கு திருட்டு சதி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் பீகாரின் தோரையா (Dhoraiya) தொகுதியின் கீழ் உள்ள பட்சர் கிராமத்தில் வசிக்கும் 5 பேர் தாங்கள் உயிரிழந்ததாக குறிப்பிட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பூத் என் 216 இன் கீழ் வரும் மோகன் ஷா, சஞ்சய் , ராமரூப் யாதவ், நரேந்திர குமார் தாஸ், விஷ்னவார் பிரசாத் ஆகியோர் தாங்கள் இறந்துவிட்டதாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தொகுதி மேம்பாட்டு அதிகாரி (பிடிஓ) அரவிந்த் குமாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் அதிகாரியிடம் வழங்கிய கடிதத்தில், “அய்யா, நாங்கள் உயிருடன் உள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளனர். இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு பிழை சரி செய்யப்படும், எந்த ஒரு தகுதியுள்ள வாக்காளரின் வாக்குரிமையும் பறிக்கப்படாது என அதிகாரி அரவிந்த் குமார் அவர்களுக்கு உறுதி அளித்து வழியனுப்பி வைத்தார். முன்னதாக சாம்ரான் பகுதியில் உள்ள தும்ரி கிராமத்திலில் 15 பேர் இதேபோல் உயிரிழந்ததாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அதேபோல் 2018 உயிரிழந்த சோனியா சரண் என்பவரும் 2025 இல் உயிரிழந்த அவரின் மகன் மணித் மணி என்பவரும் வாக்களிக்க தகுதியானவர்களாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.