ஹாத்ராஸ், அக். 13- உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸில் இரு சக்கர வாகன காட்சிக்கூட (Showroom) உரிமையாளர் அபிஷேக் குப்தா கடந்த வெள்ளிக்கிழமை பேருந்தில் பயணித்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார்.
கொலை
இந்து மகாசபா என்ற அமைப்பின் தலைவி பூஜா ஷகுன் பாண்டே, அவரது கணவர் மற்றும் அசோக் பாண்டா என்ற நபர் ஆகியோர் ஆள் வைத்து அபிஷேக் குப்தாவை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.
பூஜா ஷகுன் பாண்டே வீட்டில் வெகு காலமாக வேலை பார்த்த முகமது பைசல் மற்றும் ஆசிப் என்ற இரண்டு கூலிப்படையினர் மூலம் இந்த கொலை அரங்கேறி உள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே முகமது பைசல் மற்றும் ஆசிப், பூஜாவின் கணவர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். சம்பவத்திற்குப் பிறகு பூஜா சகுன் பாண்டே தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் ராஜஸ்தானில் ஆக்ரா – ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் பூஜாவை மடக்கிப்பிடித்து கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.
இந்து சபா தலைவி பூஜா ஷகுன் பாண்டே முன்னதாக மகாத்மா காந்தியாரின் கொலையை நடித்துக்காட்டும் விதமாக அவரது உருவப் படத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி நடித்துக்காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.