சென்னை,அக்.13- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த மாற்றுத் திறனாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.
வெடிகுண்டு மிரட்டல்
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் (11.10.2025) மதியம் அழைப்பு ஒன்று வந்தது. அதில் தொடர்பு கொண்டு பேசிய நபர் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலை யில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி விட்டு அழைப்பைத் துண்டித்தார்.
இதுகுறித்து தேனாம்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டில் சோதனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த சோதனையில் வெடி குண்டு எதுவும் சிக்காததால், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பதும் தெரியவந்தது.
கைது
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என விசாரணை நடத்தி னர். விசாரணையில் அந்த நபர் செங்கல் பட்டு மாவட்டம் திருப்போரூரைச் சேர்ந்த அய்யப்பன் (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.
விசாரணை குறித்து காவல்துறையினர் கூறுகையில், “அய்யப்பன் இளம் வயதிலேயே இளம் பிள்ளை வாதத் தால் இரு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி ஆவார்.
இவர் குடிப் பழக்கத்துக்கு அடிமையானதால், அடிக்கடி குடும்பத்தினருடன் தகராறில் ஈடு பட்டு வந்தார். அந்த வகையில், இவர் ஏற்கெனவே கடந்த 2020ஆம் ஆண்டு கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், சென்னைவிமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவராவார்.
பின்னர் வெளியே வந்த அவர், குடும்பத் தகராறில் 2021ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். அப்போதும் அவரைக் கைது செய்து சிறை யில் அடைத்தோம். இந்நிலையில் தற்போது மீண்டும் முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இவர் தொடர்ந்து இத்தகைய செயலில் ஈடுபட்டு வருகிறார். எனினும் அவருக்கு பள்ளியில் படிக்கும் 2 பெண் குழந்தைகள் இருப்பதால், அவரது குடும்பத்தின் நலனைக் கருத்தில் கொண்டு, அவரை எச்சரித்து மனித நேயத்துடன் மனைவியுடன் அனுப்பி வைத்தோம். ஆனாலும் அவரது நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிப்போம்”
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.