கன்னியாகுமரி, அக்.12- கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள சைமன்காலனி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசீலன், மீனவர். இவருக்கு சொந்தமான விசைப்படகில் இவரும், வேறு சில மீனவர்களும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு குளச்சலில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் தேங்காப்பட்டணம் கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அவர்கள் விரித்த வலையில் ஆரஞ்சு நிறத்தில் உருண்டை வடிவிலான ஒரு வியப்பான பொருள் சிக்கியது. இதையடுத்து அந்த பொருளை படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் இதுகுறித்து குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர், கியூ பிரிவு காவல்துறையினர் மற்றும் உளவு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அந்த உருளையை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது, அந்த பொருள் இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மய்யத்திற்கு சொந்தமான கடல்சார் தகவல் தொடர்பு கருவியான டிரிப்ட்டர் மிதவை என்பது தெரிய வந்தது. இது கடல் நீரோட்டம், உப்புத் தன்மை கண்டறிய நடுக்கடலில் மிதக்க விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த மிதவை மீனவர்களின் வலையில் சிக்கியது தெரியவந்தது.
இதுகுறித்து இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மய்ய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அத்துடன் காவல்துறையினர் அந்த டிரிப்ட்டர் மிதவையை கைப்பற்றி குளச்சல் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அண்ணாமலை இன்னும் பா.ஜ.க. மாநில தலைவர் என்ற மனநிலையில் இருக்கிறார்’: திருமாவளவன்
கரூர்,அக்.12- கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலா ரூ.50 ஆயிரம் வீதம் 40 குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம், த.வெ.க. தலைவர் விஜய் தொடர்பாக பா.ஜ.க. மாநில மேனாள் தலைவர் அண்ணாமலை கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது திருமாவளவன் கூறியதாவது;-
“இல்லாத கட்டுக்கதைகளை பேசுவதே அண்ணாமலையின் வாடிக்கையாக இருக்கிறது. கற்பனையாக பல செய்திகளை அவர் பரப்புகிறார். அரசியல் செய்ய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் சமூக பதற்றத்தை ஏற்படுத்துவதில் அவர் குறியாக இருக்கிறார்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க. மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகின்றன. ஆனால் அண்ணாமலை இன்னும் பா.ஜ.க. மாநில தலைவர் என்ற மனநிலையில் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறார்.
கரூரில் விஜய்க்கு என்ன ஆபத்து ஏற்படக்கூடும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவருடைய உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய அளவுக்கு என்ன சூழல் இங்கு நிலவுகிறது என்பதை அண்ணாமலைதான் விளக்க வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.