செங்கல்பட்டு. அக். 12, புலவர் சங்கரலிங்கத்தின் இணையரும் சுயமரியாதைச் சுடரொளியுமான கலாவதி அம்மையாரின் படத்தைத் திறந்து வைத்து கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வீரவணக்க உரை ஆற்றினார்.
செங்கல்பட்டு மாவட்டம் கோவிலாஞ்சேரியில் வசிக்கும் புலவர் சங்கரலிங்கத்தின் இணையர் கலாவதி அம்மையாரின் படத்திறப்பு நிகழ்ச்சி கடந்த 8.10.2025 அன்று மாலை 7 மணியளவில் அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு தலைமை ஏற்று உரையாற்றினார், புலவர் சங்கரலிங்கம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கழகத் துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாவட்டக் காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன், மதுரப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் மு.வேல்முருகன் மற்றும் புலவர் சங்கரலிங்கத்தின் குடும்பத்தினர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கலாவதி அம்மையாரின் படத்தைத் திறந்து வைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் மு.வேல்முருகன், தாம்பரம் மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன், ஆர்.டி.வீரபத்திரன், தொடர்ந்து கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சங்கரலிங்கம் பற்றியும், காலம் சென்ற அவரது இணையர் கலாவதி அம்மையார் பற்றியும் நினைவு கூர்ந்து உரையாற்றினர்.
இறுதியாக படத்தைத் திறந்து வைத்த கவிஞர் கலி.பூங்குன்றன் உரையாற்றினார். அவர் தமது உரையில், கலாவதி அம்மையார் ஆசிரியராக பணிபுரிந்தவர் என்பதை சுட்டிக்காட்டி, அந்த காலகட்டத்தில் பெண்களின் கல்வி நிலை எப்படி இருந்தது? அதை திராவிடர் இயக்கம் எப்படி மாற்றியது? புலவர் சங்கரலிங்கம் அவர்களுக்கு அவர் எப்படி தோன்றாத் துணையாக இருந்தார். பிள்ளைகளை நன்றாக படித்து வைத்து சமூகத்திற்கு பயன்படக் கூடிய அளவுக்கு ஆளாக்கியிருக்கிறார் என்றெல் லாம் பாராட்டிப் பேசினார். மேலும் அவர், புலவர் சங்கர லிங்கத்தின் சிறப்புகளை பட்டியலிட்டு உரை ஆற்றினார். இறுதியாக அனைவரையும் எழுந்து நின்று ஒரு நிமிடம் அமைதியாக மரியாதை செலுத்தக் கோரினார். அவ்வண்ணமே அனைவரும் மரியாதை செய்தனர்.
நன்கொடை
புலவர் சங்கரலிங்கம் சோழிங்கநல்லூர் மாவட்ட வளர்ச்சி நிதியாக ரூ,3000/- விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1,000/- கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் புலவர் சங்கரலிங்கம் மகன் வீரமணி சங்கரலிங்கம் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரை ஆற்றினர். அதில், ”தான் இந்தியாவில் பல மாநிலங்களுக்குச் சென்றிருப்ப தாகவும், தமிழ்நாடு அந்த மாநிலங்களைவிட எல்லா வகையிலும் முன்னேற்றம் அடந்திருப்பதாகவும், இதிலெல்லாம் தெரியாமல் இங்கிருப்பவர்கள் பேசிக்கொண் டிருக்கிறார்கள்” என்றும் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் அமுதா வேல்முருகன், மதுரப்பாக்கம் பஞ்சாயத்து துணைத் தலைவர் புருசோத்தமன், சோழிங்க நல்லூர் கழக மாவட்டத் துணைத் தலைவர் க.தமிழினியன், பொதுக்குழு உறுப்பினர் இரா.கலைச்செல்வன், எல்.அய்.சி. குணசேகரன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, பொதுக்குழு உறுப்பினர் மோகன்ராஜ், லட்சுமிபதி, உடுமலை வடிவேல், ஊடகவியலாளர் பர்தீன், ஓட்டுநர் மகேஷ், அஸ்வின் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.