லக்னோ, அக்.12 பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் பாலி யாவில் உள்ள ஜனநாயக் சந்திர சேகர் பல்கலைக்கழகத்தில் கடந்த 7.10.2025 அன்று 7 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற உத்த ரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் (பெண்) பேசுகையில், “திரு மணம் செய்யாமல் சேர்ந்து வாழக் கூடாது (லிவ்-இன் உறவு). அவ்வாறு சேர்ந்து வாழ்ந்தால் பின் விளைவுகள் நன்றாக இருக்காது. திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வோர் இடையே வன்முறைச் சம்பவங்கள் நடக்கிறது” என சர்ச்சைக்குரிய வகை யில் பேசினார்.
தொடர்ந்து அதற்கு மறுநாள் (8.10.2025) வாரணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தின் 47 ஆவது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆனந்திபென் படேல் உரை யாற்றுகையில்,
“எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு மகள்கள் கவ னமாகச் சிந்திக்க வேண்டும். லிவ்-இன் உறவுகளில் இருந்தும், சுரண்டல்க ளுக்கு வழிவகுக்கும் சூழ்நிலைகளில் இருந்தும் விலகி இருக்கவேண்டும். நமது மகள்களுக்கு சொல்ல ஒரே ஒரு செய்தி உள்ளது. லிவ்-இன் உறவுகள் இப்போது பிரபலமாக இருக்கலாம். ஆனால் அதைச் செய்யாதீர்கள். உங்கள் வாழ்க்கையைப் பற்றி நீங்களே முடிவுகளை எடுங்கள். என்ன நடக்கிறது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீங்கள் 50 துண்டு களாகக் காணப்படுவீர்கள்” என அவர் கூறினார்.
உச்சநீதிமன்றமே, திருமணம் செய்யாமல் இருவர் இணைந்து வாழ்வதை ஏற்று, தீர்ப்புகள் வழங்கி யுள்ளது. ஆனால், குஜராத் மாநில மேனாள் பா.ஜ.க. முதலமைச்சரும், இந்நாள் உ.பி. ஆளுநருமான ஆனந்திபென், அத்தீர்ப்புக்கு மாறாக, அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் பேசியிருப்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
உ.பி. உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநி லங்களில் ஜாதிப் பஞ்சாயத்துகளும், ஆணவப் படுகொலைகளும், ஜாதி, தீண்டாமை வன்கொடுமைகளும் அதிகமாக நடைபெற்று வருகின்றன. அவற்றைத் தடுத்து நிறுத்தவேண்டிய அரசுப் பொறுப்பில் இருப்பவர், அதைக் காட்டி அச்சமூட்டுவது சரியில்லை என்று மாணவர்கள் கண்டனம் தெரி வித்துள்ளனர்.