சென்னை, அக்.11- சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க 20 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளதாக தலைமை மருத்துவர் கவிதா தெரிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சல்
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஏடிஸ் வகை கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலால் நடப்பாண்டில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவ முகாம்களும், டெங்கு வார்டுகளும் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
தனி வார்டு
இதுகுறித்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கவிதா கூறியதாவது:-
டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக இதில் கொசு வலையுடன் கூடிய 10 ஆண்களுக்கான படுக்கைகள், 10 பெண்களுக்கான படுக்கைகள் என மொத்தம் 20 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப கூடுதல் படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்படும். இந்த வார்டில் கபசுர குடிநீர், உப்பு கரைசல், கசாயம் போன்ற இயற்கை மருந்துகளும் சிகிச்சைக்காக வருபவர்களுக்கு கொடுக்கப்பட இருக்கிறது. 2 நாட்களுக்குமேல் அதிகப்படியான காய்ச்சல் இருந்தால் உடனடியாக சிகிச்சை எடுத்து கொள்ள வேண் டும். டாக்டர்களின் பரிந்துரைப்படியே மருந்துகள் சாப்பிட வேண்டும். வீட்டில் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் இருக்கும் வீட்டில் அதிக கவனத்துடன் சுத்தமாக வைத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மலைப்பகுதி மாற்றுத் திறனாளிகளுக்கும்
விடியல் பயணம்: அரசாணை வெளியீடு
சென்னை, அக்.11- தமிழ்நாட்டில் சாதாரண கட்டண பேருந்தில் பெண்கள் கட்டணமில்லா பயணம் செய்து வருகின்றனர். இந்தத் திட்டத்திற்கு விடியல் பயணம் என பெயரிடப்பட்டுள்ளது. இது பெண்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருந்து வருகிறது. மலைப் பகுதியிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மலைப்பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தி, அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மற்றும் அவருடன் வரும் ஒரு துணையாளர் சாதாரண கட்டண அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுதந்திர தின உரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.