டில்லி முதலமைச்சரின் பார்ப்பன ஆணவம்!

டில்லி முதலமைச்சர் ரேகா குப்தா பார்ப்பனச் சமூகம்தான் இந்தியாவில் அறிவொளியை ஏற்றிவைக்கும் சுடராக இருந்தது என்று பாராட்டிப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பித்தம்புராவில் 07.10.2025 அன்று நடைபெற்ற ‘அகில இந்தியப் பார்ப்பனர் மாநாட்டில்’ உரையாற்றியபோது

‘ஞானச் சுடர்’ “சமூகத்தில் யாராவது அறிவொளியின் துவக்கச் சுடரை ஏற்றி வைக்கிறார்கள் என்றால், அது நமது பிராமண சமூகம்தான். அவர்கள் வேத நூல்களை மட்டுமல்லாது, ஆயுதங்களையும் வணங்குகிறார்கள். ஆயுதங்கள் மற்றும் வேத நூல்கள் மூலமாக மட்டுமே நாம் இன்று சமூகத்தையும் நாட்டையும் பாதுகாக்க முடியும்.”

“ஞானத்தின் சுடரை ஏற்றி, தர்மத்தைப் பரப்பி, நல்லிணக்க உணர்வை வளர்ப்பதன் மூலம் பிராமண சமூகம் எப்போதும் சமூகத்தின் நன்மைக்காகவே உழைத்துள்ளது. இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளும், எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், பிராமண சமூகத்தின் நலனுக்காகவும், அவர்களை முன்னேற்றுவதற்கும் உழைக்க வேண்டும்.

முந்தைய அரசுகள் பிராமண சமூகத்தின் ஆலோசனையைப் புறக்கணித்ததால் நாடு பெரும் பின்னடைவைச் சந்தித்தது.’’

என்று கூறிய ரேகா குப்தா, ‘‘பிராமண சமுதாயம் தங்கள் ஆலோசனைகளைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும், டில்லியை வளர்ச்சியடைந்த டில்லியாக  நிறுவ பிராமணர்களின் ஆலோசனையோடு மக்கள் உழைக்க வேண்டும்’’ என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரேகா குப்தாவின் இந்தக் கருத்துகள் பல்வேறு தரப்பினரிடமிருந்தும்,  கடும் எதிர்ப்பைப் பெற்று வருகின்றன. ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சீவ் ஜா இந்த அறிக்கையைக் கேட்டு தான் அதிர்ச்சி அடைந்ததாகத் தெரிவித்தார். “எந்த ஒரு சமூகத்தைப் பற்றியும்  இதர சமூக மக்களின் உணர்வுகளை அவமதிப்பதாகும்” என்று அவர்  ‘எக்ஸ்’ தளத்தில்  கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்துகள், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாகச் சமூகத்தில் பிரிவினையை உருவாக்கக் கூடிய ‘ஜாதியவாதக் கருத்து’ என்று விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவரும் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி அவர்களும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

பார்ப்பனர்கள் பற்றி தந்தை  பெரியார் கூறிவந்த கருத்துகளும், கணிப்புகளும் எத்தகைய பேருண்மை என்பதை – இதுவரை புரிந்திராதவர்களும், தெரிந்திராதவர்களும் இந்தத் தருணத்திலாவது புரிந்துகொள்ள வேண்டும்; அறிய வேண்டும்.

கேரளாவில் நடைபெற்ற பார்ப்பனர்கள் மாநாட்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பங்கேற்றதுண்டு. மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பச்சையாகப் பார்ப்பனர் மாநாட்டில் பங்கேற்றார்.

கேரளாவில் நடைபெற்ற பார்ப்பனர்கள் மாநாட்டில் பேசிய சாஸ்த்ரா பல்கலைக் கழகப் பார்ப்பனப் பேராசிரியர் ‘‘நாய்களில் பல பிரிவுகள் உள்ளதுபோல, மனிதர்களிலும் வர்ணப் பிரிவு உண்டு’’, என்று பூணூல் திமிரோடு பேசினாரே!

பா.ஜ.க. ஆட்சி என்பது பார்ப்பனீய மேலாதிக்கச் சித்தாந்தத்தைக் கொண்ட ஒரு பாசிச அமைப்புதான். அந்த அடிப்படையில் தான் டில்லி முதலமைச்சர் பார்ப்பன ஆணவத்தோடு இந்த 2025ஆம் ஆண்டிலும் கொக்கரிக்கிறார்.

பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸில் உள்ள பார்ப்பனரல்லாதார்கள் சுயமரியாதை இருந்தால், இதைப் பற்றிச் சிந்திப்பார்களாக!

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *