திருவாங்கூர் சமஸ்தானம் (5) ‘‘மனிதத் துயரங்களும்… மாறாத வடுக்களும்!’’

மருத்துவர்
இரா.கவுதமன்
இயக்குநர்,
பெரியார் மருத்துவ அணி

னிதர்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் மூன்றுமே ஏறத்தாழ 80 சதவீத மக்களுக்கு இயல்பாக கிடைக்காமல் ஜாதியக் கொடுமைகள் தடுத்தன.

நல்ல உணவு அவர்கள் சாப்பிடமுடியாது. பால், நெய் போன்ற விலை உயர்ந்த உணவுகள் அவர்கள் உண்ண முடியாது. வசதியான வீடுகளில் அவர்கள் வசிக்க முடியாது. குடிசைகள்தான் அவர்கள் இருப்பிடம்.  கோயில்கள் ஊருக்கு நடுவில் இருக்கும். அதைச்சுற்றி நம்பூதிரி பார்ப்பனர்கள் வசிக்கும் ‘தரவாடு’கள். (உயர்குடியான பார்ப்பனர்கள், நாயர்கள் வசிக்கும் பாரம்பரிய மூதாதையர் இல்லங்கள்) மற்ற அனைத்து ஜாதியினரும் தனியாக ஊருக்கு ஒதுக்குப் புறமாகத்தான் ‘குடிசை‘களில் வாழ முடியும்.

உயர்ஜாதியினர் வாழ்விடங்களிலிருந்து விலக்கி வைக்கப்பட்டே இருந்தனர் (நம்மூரில் இருந்த ‘‘சேரி’’கள் போல். உடையைப் பற்றியும் இதே ஜாதியக் கொடுமைதான். பெரும்பாலான ஜாதிகள் (நம்பூதிரிகள், நாயர்கள் தவிர) சேர்ந்த மக்கள் இடுப்புக்குக் கீழும், முட்டுக்கு மேலும்தான் ஆடை அணிய முடியும். இதில் மிகவும் கொடுமை. என்னவென்றால்
பெண்களுக்கும் இதே உடைக் கட்டுப்பாடுதான்.  ஆண்டின் பெரும் பகுதி மழை பெய்யும் நாடு திருவாங்கூர்.  அங்கு இந்த குறைந்த ஆடையுடன் கீழ்ஜாதியினர் வாழவேண்டிய நிலை. இப்படி மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் கூட ஜாதியக் கொடுமைகளால் மறுக்கப்பட்டன. கோயில்களும் அதன் நிலங்களும் நம்பூதிரி பார்ப்பனர்கள் வசமே இருந்ததால் நாளடைவில் அவர்கள் பெரும் நிலக்கிழார்களாக மாறி- னர். மழை மிகுந்த நாடாக திருவாங்கூர் நாடு இருந்ததால் செழுமையான நாடாக இருந்தது.

அதனால் நிலஉைடமையாளர்களான நம்பூதிரி பார்ப்பனர்கள் பெரும் செல்வந்தர்களாக இருந்தனர். மக்களிடம் வரி வசூலிக்கும் உரிமையை கையில் வைத்திருந்த” சூத்திர’’ நாயர்களும் அடுத்த பெரும் செல்வந்தர்களாக இருந்தனர். இந்த நம்பூதிரி – நாயர் கூட்டணி தவிர மற்ற உழைக்கும் மக்கள் அனைவருமே வறுமையில் வாடும் ஏழைகளாகவே இருந்தனர்.

அவர்கள் ஏழ்மையைப் பயன்படுத்திக் கொண்ட நம்பூதிரி- நாயர் கூட்டணி அவர்களை அடிமைகளாகவே நடத்தினர். இரணியல், தொடுவெட்டி, படந்தாலுமூடு ஆகிய பகுதிகளில் கீழ் ஜாதிக்காரர்களை அடிமைகளாக விற்க, பெரும் அடிமைச் சந்தைகளே இருந்தன. அடிமைகளிடம் கடுமையான வேலைகளை வாங்குவதும், அந்த வேலைகளைச் சரியாக செய்யாதவர்களை கடுமையாக தண்டிப்பதும் பரவலாக நடந்தன. கீழ் ஜாதி அடிமைகளை வாங்குவதற்கும், விற்பதற்கும் சமூகத்தில் முழு அங்கீகாரம் இருந்தது. அடிமைகளுக்கு வயதாகியும், நோயுற்றாலும் அவர்களுக்கு இட்ட வேலைகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் அவர்கள் கொலை கூட செய்யப்பட்டார்கள். ஒரு காலக் கட்டத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் 1,64,684 அடிமைகள் இருந்ததாக கொல்லம் திவான் குறிப்பிட்டதாக ஒரு பதிவு இருக்கிறது.  பலவிதமான கொடுமைகளுக்கு ஆளான அடிமைகளின் பெண்கள் முதலாளிகளின் வன்கொடுமைக்கு ஆளானார்கள்.  பலவிதமான வன்கொடுமைகளுக்கும் உள்ளான அடிமைகள் பலர் ஒன்று சேர்ந்து, திருவாங்கூரின் ஆங்கில காப்பாளர்க்கு, ஒரு மனு போட்டனர். அந்த மனுவில், ‘‘பரம்பரை பரம்பைரையாக நாங்கள் விவசாயிகள். ஆனால் விவசாயக் கூலிகளாக, அடிமைகளாக நடத்தப்படுகிறோம். கடுமையான வேலையும், கடுமையான தண்டனைகளுக்கும் ஆளாக்கி கொத்தடிமைகளாகவே நடத்தப்படுகின்றோம். நாங்கள் மனம், வாழ்வுரிமையோடு அடிப்படை சுதந்திர மனிதர்களாக வாழ பண்ணையார்கள் எதிராக உள்ளனர். ஆதிக்க ஜாதிக்காரர்கள் எங்கள் மனித உரிமைகளை மதிப்பதுமில்லை; கொடுப்பதுமில்லை. அவர்கள் பிடியில் சிக்கி கடும் மழையிலும், சுடும் வெய்யிலிலும் கடுமையாக உழைத்து  ஏமான் (எஜமான்)களின் சொத்தைப் பெருக்க, நாங்கள் அரை வயிற்று உணவோடு, அழுக்குச் சாக்கையே இடுப்புக்குக் கீழ் சாக்குப் பை உடையோடும் அவதிப்படுகிறோம். எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நம்பூதிரி பார்ப்பனர்கள், ‘சூத்திர’ நாயர்களும் தங்களுக்குக் கீழ் உள்ள அனைத்து மக்களையும் அடிமைகளாகவே நடத்தினர். தீண்டாமை, காணாமை, கல்லாமை என அனைத்துக் கொடுமைகளும் அவர்கள் மேல் திணிக்கப்பட்டன. அதில் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் சாணார்கள் என்றழைக்கப்பட்ட நாடார்களும், புலையர்கள் என்றழைக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களுமே. ‘‘பறையனைத் தொட்டால் தீட்டு, சாணானைப் பார்த்தாலே தீட்டு” என்ற சொலவடை அந்த நாட்டில் நிலவி வந்தது. (Ref:  Arunthathiyar.blogspot.com) புைலயர்களும் சாணார்களைப் போலவே எல்லாவித ஜாதிச் சட்டங்களுக்கு ஆளானவர்களே. மேலாடை அணியக்கூடாது, இருபாலரும்தான். இடுப்புக்குக் கீழும், முழங்காலுக்கு மேலும்தான் சாக்கு அல்லது துண்டு கட்ட வேண்டும். தலைப்பாகைக் கட்டக் கூடாது. அணிகலன்கள் அணியக் கூடாது. செருப்பு போடக்கூடாது. உயர் ஜாதி நம்பூதிரிகளின் கண்களில் படக்கூடாது. சமூக மரியாதை என்பதே இல்லாத புலையர்கள் மேற்கு தொடர்ச்சி மலையில் வாழ்ந்தவர்கள். வேட்டையாடுவதும், மலையில் சிறு, சிறு விவசாயம் செய்வதும் அவர்கள் தொழில். கனியன் என்பவரைத் தலைவராகக் கொண்டு வாழ்ந்து வந்தவர்கள். மலை வாழ் மக்களான இவர்கள் (ST)1976இல் தாழ்த்தப் பட்டோர் (sc) பட்டியலில் சேர்த்து வகைப்படுத்தப்பட்டனர். திருவாங்கூர் நாட்டில் தாழ்த்தப்பட்டோர் அனுபவித்த அத்தனைக் கொடுமைகளை இவர்களும் அனபவித்தனர். இவர்களும் பார்க்கக் கூடாத ஜாதியினர்தான். நம்பூதிரி பார்ப்பனர்களிடமிருந்து 96 அடியும், நாயர்களிடமிருந்து 60 அடியும் தள்ளி நின்றுதான் பார்க்கவும் பேச முடியும். எதிர் பாராமல் இந்த இடைவெளி குறுகும் நிலை ஏற்பட்டு விட்டால் அவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும். அவர்களை அப்படிப் பார்த்தோ, பேசிய மேல் ஜாதிக்காரன் தீட்டுப் பட்டவனாகி விடுவானாம். தீட்டுப் பட்டவன் குளத்திலோ, வீட்டிலோ குளித்து தான், தீட்டு கழித்தப் பின்தான் வீட்டினுள் செல்வான். உணவு உண்ண முடியும். தீட்டு கழிக்காமல் அவன் வீட்டினுள் நுழைந்து விட்டால்,  ஜாதிக்குப் ‘புறம்பானவராக்கப்’ படுவான். புலையர்கள் போன்ற எல்லா அடிமைகளும் இதே போன்ற பலவிதக் கொடுமைகளுக்கும் ஆளானவர்கள்தான். அடிமைகள் தங்கள் முதலாளிகள் முன் இடைவெளி விட்டு நிற்பதல்லாமல், பேசும்போது குனிந்து கைகளால் வாயைப் பொத்தியவாறு ‘‘ஏமானே” என்று விளித்துப் பேசும் பொழுது, “நான்” என்ற வார்த்தையில் கூட சொல்ல முடியாது. ‘‘அடியேன்” என்றுதான் கூற வேண்டும். வசிப்பிடமான குடிசையைக்கூட ‘‘மாடம்” என்றும், உணவை ‘‘கரிகாடி” என்றும் குழந்தைகளை ‘‘குரங்கு” என்றோ, ‘கன்றுக் குட்டி’ என்றோதான் அழைக்க வேண்டும். அடிமைகள் கழுத்தில், கருப்பு மணி அணி ஒன்றை அணிய வேண்டும். அவர்களை அடையாளப்படுத்தத்தான் இந்த அணி, அடிமைச் சந்தையில் ஆளின் உடற்கட்டுக்குத் தக்கவாறு ரூபாய் 3முதல் ரூபாய் 6 வரை விற்கப்பட்டனர். பெண் அடிமைகள் விலை அதில் பாதிதான்.

நிலஉைடமையாளர்கள், ‘‘ஜென்மிகள்” என்றழைக்கப் பட்டனர். இவர்களிடம் வேலை செய்யும் அடிமைகள், அடிமைகளாகவே பிறந்து, அடிமைகளாகவே வாழ்ந்து, அடிமைகளாகவே மடிந்தனர். திருவாங்கூர் நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 8இல் 5முதல் 6 பகுதிகள் கீழ்ஜாதியினர் என்றால், அடிமைகள் 8இல் 2 முதல் 3 பங்கு இருந்தனர்.  ‘ஜென்மிகள்’ ஒவ்வொருவரும் தங்கள் பணக்காரத் தன்மைக்கேற்ப அடிமைகளை வைத்திருந்தனர். கீழ் ஜாதியினருக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடு களும், அடிமைகளுக்கும் இருந்தது. வெய்யிலிலும், மழையிலும் செல்ல எந்த வண்டியையும் பயன்படுத்தக் கூடாது. சைக்கிளைக்கூட அவர்கள் பயன்படுத்த முடியாது. முதலாளி கூறும் இடங்களுக்கு சுமைகளை சுமந்து கொண்டு கால் நடையாகத்தான் செல்ல வேண்டும். கோயில்களை கட்டிய கீழ் ஜாதிக்காரர்கள் அவை கட்டி முடித்தபின் அந்தக் கடவுள்களை வணங்கும் உரிமைக் கூட கிடையாது.

நம்பூதிரி பார்ப்பனர்கள் அந்தக் கோயில்களைச் சுற்றியிருந்த தெருக்களில் வசிப்பதால் “காணாமை’’க் கட்டுப்பாடுகள் இருந்ததால், கோயில் கட்டிய கீழ்ஜாதிக் காரர்கள் அந்தத் தெருக்களில் கூட நடக்க முடியாத நிலைதான் இருந்தது. (Ref: ‘‘திருவாங்கூர் அடிமைகள்” by முனைவர் சா.குமரேசன்)

அடிமைகள் விற்பனை ஒரு அனுமதிக்கப்பட்ட வணிகமாக இருந்தது. பஞ்ச காலத்தில் குழந்தைகள் கூட அடிமைகளாக விற்கப்பட்டனர். அடிமைகள் சொத்துக்களை அடமானம் வைப்பது போல் அடமானம் வைக்கப்பட்டனர்.

ஜென்மிகளிடையே அடிமைகள் வணிகம் மூன்று வகையில் நடந்தது. முதல் முறை “ஜென்மம்” என்றழைக்கப் பட்டது . ஒரு முதலாளியிடம் வாழ்நாள் முழுவதும், ஒரு மனிதர் அடிமையாக இருக்க வேண்டும். இரண்டாம் முறை “அடமானம்”, அடிமையின் விலையில் மூன்றில், இரண்டு பங்கு கொடுத்து, குறிப்பிட்ட காலத்திற்கு இன்னொரு முதலாளி தன் பொறுப்பில் எடுத்துக் கொள்வது; மூன்றாம் முறை, ‘குத்தகை’க்கு அடிமையை ஒரு முதலாளி, மற்றவருக்குக் கைம்மாற்றி விடுவது. ஒவ்வொரு ஆண்டுக்கும் இந்த குத்தகை புதுப்பிக்கப்படும் குத்தகைத் தொகை, ஆண் என்றால் எட்டு பணம், பெண் என்றால் நான்கு பணம் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மொத்தத்தில் அடிமைகள் மனிதர்களுக்கு உள்ள உரிமைகள் ஏதுமின்றி கால் நடைகள் போலவே வணிகச் சந்தைகளில் விலை பேசப் பட்டனர்.

மிருகங்களைப் போல் வணிகம் செய்து, அடிமைகளை வாங்கவும், விற்கவும் அவர்களால் ஒழுங்கான குடும்ப வாழ்க்கை நடத்த முடியவில்லை. மனைவியை, கணவரிடம் இருந்து பிரித்தும், குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரித்து வேறொரு ஏது முதலாளிக்கு விற்பதும் சாதாரணமாக நடந்தது. ஒரு அழமையின் மனைவியை சில சமயம் இன்னொரு அடிமைக்கு மனைவியாக்கும் உரிமை கூட முதலாளிக்கு இருந்தது. அடிமைகளுக்கு தண்டனை என்ற பெயரில் அடிக்கவோ, சூடு போடவோ, கை, உடைக்கவோ, அவற்றைத் துண்டிக்கவோ, கொலை கூட செய்யும் உரிமை முதலாளிக்கு உண்டு. அடிமையின் விலை பத்திரத்திலேயும் மேலே சொன்ன தண்டனை உரிமைகளை முதலாளி
செய்யலாம் என்று குறிப்பிட்டதோடு, கொலை கூட செய்யலாம் என்றும் எழுதப்பட்டிருக்கும் (You May sell  him or kill him). இது போன்ற உரிமைகளை முதலாளிகளுக்கு அரசு சம்மதத்துடன்தான் அளிக்கப்பட்டிருந்தது.

அடிமைகளுக்கு சரிமான உணவு கூட முதலாளிகள் கொடுக்காமல், சக்கையாக வேலை வாங்கியதால் பலரும் இளம் வயதிலேயே நோய்வாய்படுவதும், இறந்து போவதும் சாதாரண நிகழ்வாகிப் போனது. தப்பிப் பிழைத்து முதுமை அடைந்த அடிமைகள் வேலை செய்ய முடியாத நிலைமை அடைந்து விட்டால் தெருவிற்குத் துரத்தப்பட்டனர். வருமானமும், உணவும் யின்றி அந்த மூத்த முன்னாள் அடிமைகள் பிச்சைக்காரர்களாக மாறி நாளடையில் பட்டினியால் செத்து மடிந்தனர்.  வாழ்வில் பிறந்ததைத் தவிர எந்த இன்பமும் அனுபவிக்காத, அமைதியற்ற வாழ்க்கை வாழ்ந்த அவர்களுக்கு மரணமே அமைதி தந்தது. அடிமைகளுக்குப் பிறக்கும் குழந்தையும் அடிமையாகவே பிறந்தது. அடிமையாகவே வளர்ந்தன. இப்படி கணவன் அடிமை, குழந்தையும் அடிமை என்ற நிலையில் அவர்களை தனித் தனியாக யாருக்கு வேண்டுமானால் விற்கும் உரிமை முதலாளிக்கு உண்டு சான்று! (Ref: ‘‘சமயத் தொண்டர்களும் சமுதாய மறுமலர்ச்சியும்’’ by டாக்டர் I.V.பீட்டர், டாக்டர் டி.பீட்டர் – ‘‘திருவாங்கூர் அடிமைகள்’’ by முனைவர் சா.குமரேசன்)

                                       (தொடருவேன்…)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *