இ |
ந்திய வரலாற்றில் அக்டோபர் மாதம் என்றாலே அது காந்தியாரின் பிறந்த நாள்தான் நினைவிற்கு வரும்.
- ஸநாதன வெறியே அடிப்படை
- சக மேனாள் நீதிபதிகள் குரல் கொடுக்க வேண்டும்
- ‘ஜெய்பீம்’ என்று கூறி வாழ்த்து
- நீதிமன்றத்தின் ஒருமித்தக் கண்டனம் எழவில்லை
- மல்லிகார்ஜூனகார்கே
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
- அதிர்ச்சி அளிக்கிறது
- கட்டுப்பாடில்லாத குதிரைகள்
- ஸநாதனத்தின் வீழ்ச்சியும் செருப்பு வீச்சும்
- ஒரு ஜாதியின் கீழ் இருந்த நீதித்துறை ஊழியர்களின் பணி சமநிலைக்கு வந்தது
- வலுவான அறிகுறி
காந்தியார் என்றாலே அவரைக் கொலை செய்த ஹிந்துத்துவக் கொள்கையின் கொடூரம் நம் கண்முன்னே வந்து செல்லும்.
தற்போது அந்தக் கொடூரத்தின் மற்றொரு அவதாரமும் புதிதாக முளைத்துள்ளது.
பெயர் தான் மாறி உள்ளது. அன்று கோட்சே; இன்று ராகேஷ் கிஷோர் – அவ்வளவுதான்.
ஆனால் ஹிந்துத்துவ அமைப்புகள் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் போட்டவிதை இன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவான பாஜகவின் 11 ஆண்டுகால ஆட்சியில் மதவாத உரமூட்டியதால் வளர்ந்து – அரசமைப்புச் சட்டத்தின் படி உயர் பதவியில் உள்ள தலைமை நீதிபதி மீதே செருப்பை வீசும் நிலைக்குச் சென்றுவிட்டது.
இங்கு செருப்பை வீசியவன் கூறிய வார்த்தை அன்று கோட்சேவின் துப்பாக்கி வழியாக காந்தியைக் கொன்றது என்பதை நினைவில் வைக்கவேண்டும்
காலணி வீசிய வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மேலும், காவல்துறையினர் தாராள மனப்பான்மையின் நிரந்தரப் (eternal display of generosity) பண்பை வெளிப்படுத்தி, காலணியை அவரிடமே திரும்ப ஒப்படைத்துள்ளனர்.
எந்த ஸநாதனத்தின் பெயரால், எந்த உரிமை உணர்வின் (sense of entitlement) அடிப்படையில் அந்தக் காலணி வீசப்பட்டதோ, அது அவரிடமே திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஸநாதன வெறியே அடிப்படை
தலைமை நீதிபதி மீது ஒரு வழக்குரைஞர் காலணியை வீசத் தூண்டிய அந்த உணர்வு என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். விவகாரம் காலணி பற்றியது அல்ல. ஸநாதனத்தை அவமதித்ததாகக் கூறி ஒரு வழக்குரைஞர் தலைமை நீதிபதி மீது காலணியை வீசும் அந்தத் திமிர், ஆணவம் பற்றியதுதான். காலணியை வீசிய பிறகும், அவர் தன் ஆணவ அடையாளத்தை (identity) வெளிப்படுத்துகிறார்.
பாதுகாவலர்களால் நீதிமன்ற அறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும்போது, வழக்கு ரைஞர் ராகேஷ் கிஷோர், “ஸநாதனத்தின் அவமதிப்பை பாரதம் பொறுத்துக்கொள்ளாது” என்று முழக்கமிட்டார்.
இதேபோல, ஸநாதனத்தைத் தவிர வேறு ஏதோ ஒன்றைக் கூறி வேறொருவர் காலணியை வீசியிருந்தால் அல்லது தலைமை நீதிபதி இடத்தில் வேறு ஓர்
உயர்ஜாதி நீதிபதி அமர்ந்திருத்தால் என்ன நடந்திருக்கும்?
காலணி வீசப்படுவதற்கு முன்னரே, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பற்றி சமூக ஊடகங்களில் கண்டபடி பேசத் தொடங்கிய அந்த சித்தாந்த ரீதியான உரிமை உணர்வு (ideological sense of entitlement) பற்றியது.
இப்படிப் பேசுபவர்கள் யார்? இவர்கள் அதிகாரத்தின் மய்யங்களில் நன்கு அறியப்பட்டவர்கள். ஆனால், அவர்களுக்கு எதிராக அனைவரும் மவுனம் ஜாதித்தனர். அதனால்தான், இன்று உச்ச நீதிமன்றத்தில் காலணி வீசப்பட்டதன் மூலம், சமூக ஊடகங்களில் தலைமை நீதிபதிக்கு பல்வேறு வழிகளில் அச்சுறுத்தல் விடுத்து, அவருக்கு எதிராக ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி, வெறுப்பைத் தூண்டும் அந்த உணர்வே வெற்றி பெற்றுள்ளது.
சக மேனாள் நீதிபதிகள் குரல் கொடுக்க வேண்டும்
இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அவர்களால் தனிப்பட்ட முறையில் எதுவும் பேச முடியாது. ஆனால், அவருடைய சக நீதிபதிகளும், மேனாள் நீதிபதிகளும், தலைமை நீதிபதியைப் பற்றி தனிப்பட்ட முறையில் இழிவான கருத்துகளைக் கூறக் கூடாது என்றும், அவருடைய தலித் அடையாளத்தைக் (Dalit identity) குறித்து இழிவான கருத்துகளை வெளியிடக் கூடாது என்றும் குரல் கொடுக்க வேண்டும்.
காலணி வீசப்பட்ட பிறகு, ஊடகங்களில் ஒரு செய்தி வெளியானது: தலைமை நீதிபதி இந்தத் தாக்குதலால் கலங்கவில்லை. அவர், “இதனால் எனது கவனம் சிதறாது, இதுபோன்ற விஷயங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை” என்று கூறியதாகப் பதிவாகியுள்ளது. அவர் கவலைப்படவில்லை என்பது நல்ல விஷயம். ஆனால், அவருடைய கருத்தைக் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துகளைப் பதிவிட்டவர்கள், கண்டபடி பேசியவர்கள் மீது கவலைப்படாமல் இருப்பது சரியா? அதைக் கண்டுகொள்ளாமல் விடுவது (to ignore) என்பது மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும் தலைமை நீதிபதி தலித் என்பதால், அவர் குறித்து இந்த அளவிற்கு வெறுப்பு நிறைந்த கருத்துகளை யாரோ ஒருவர் வெளியிட முடியும் என்று இருக்க முடியாது. தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இந்தியாவின் இரண்டாவது தலித் தலைமை நீதிபதி மற்றும் முதல் பவுத்த தலைமை நீதிபதி ஆவார்.
‘ஜெய்பீம்’ என்று கூறி வாழ்த்து
தலைமை நீதிபதியே மவுனம் காக்கும்போது, மற்ற நீதிபதிகள் முன்வந்து இதைக் கண்டித்திருக்க வேண்டும். தான் தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற பிறகு நீதிமன்ற அறைக்கு வந்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், “ஜெய்பீம்” என்று கூறி வழக்குரைஞர்களை வாழ்த்தினார்.
“ஜெய்பீம்” என்பது ஜாதிய மனப்பான்மையைத் தடுக்கிற நெறிமுறை பலத்தின் முழக்கமாகும். இது ஒரு அரசியலமைப்புச் சட்டத்தின் ஓர் அம்சமான முழக்கம்.
காலணி வீசப்பட்ட சம்பவம் சாதாரணமானது அல்ல. அதற்கு முன்பிருந்தே, சமூக ஊடகங்களில் தலைமை நீதிபதிக்கு எதிராக முறையாக காணொலிகளில் சிலர் பதிவு செய்து கண்டபடி பேசிக்கொண்டிருந்தனர்.
அந்த அனைத்து அறிக்கைகளும் இன்றும் உள்ளன. மேலும், அவர்கள் ஆளுங்கட்சியின் பக்கம் உள்ளவர்கள் என்பதால், அவர்கள் மீது எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படாது. காலணி வீசியதற்கும், ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கும் தொடர்பு உள்ளது, மேலும் அதற்கு அதிகாரத்துடனும் தொடர்பு உள்ளது அதனால்தான் தாராள மனப்பான்மையும், கண்ணியமும் சிதைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் ஒருமித்தக்
கண்டனம் எழவில்லை
கண்டனம் எழவில்லை
இந்தச் சம்பவம், மத அரசியல் அனைத்து அதிகாரங்களையும் பெற்றுவிட்டது என்பதைக் காட்டுகிறது. இனிமேல், மரியாதை என்ன, அவமானம் என்ன, அரசியலமைப்புச் சட்டம் என்ன என்பதை அதுவே தீர்மானிக்கும். இந்த அரசியல், நீதிமன்றத்தின் சில தீர்ப்புகளைத் தனக்கான சலுகைகளாகவே எப்போதும் பார்த்து வந்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அதன் பலத்தின் முன் தலைவணங்குவதைப் பார்த்துள்ளது. இந்த அரசியல் அதிலிருந்து ஆதாயம் பெற்றுக் கொண்டிருந்தது. இப்போது, இதே அரசியல், நீதிமன்றத்தை நோக்கி, யாருடைய இடம் எது என்பதை ஒரு விதத்தில் நினைவுபடுத்துகிறது. இதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
சமூகத்தின் சிந்தனையை மாற்றும் திசையில் நீதிமன்றம் ஒரு முன்னெடுப்பை எடுத்திருக்க வேண்டிய தருணம் இது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள சிந்தனையை நீதிமன்றம் ஒருமித்த குரலில் கண்டித்திருந்தால் மட்டுமே அது சாத்தியமாகியிருக்கும்.
ஸநாதனம் என்ற பெயரில் இன்று ராகேஷ் கிஷோர் பெற்றிருக்கும் இந்தச் சலுகையின் விளைவாக, தெருவில் அவரைப் போன்றவர்களின் தைரியம் அதிகரிக்கக்கூடும்.
இதனால் என்ன நடக்கும் என்பதற்கு நாம் ஏற்கெனவே உதாரணங்களைப் பார்த்திருக்கிறோம். அதே அரசியல், அதே உணர்வுதான், ஓடும் ரயிலில் ஒரு காவலரைக் கொண்டு மூன்று முஸ்லிம்களைச் சுட்டுக் கொல்ல வைக்கிறது. மேலும், இதுவே நடுசாலையில் “ஜெய் சிறீராம்” என்று சொல்லச் சொல்லி இஸ்லாமியரை அடித்துக் கொல்லச் செய்கிறது. குறைந்தபட்சம் இந்தச் சம்பவத்தை வலுவாகக் கண்டித்திருக்க வேண்டும். நீதிமன்றத்தின் இந்தக் கண்ணியம் ராகேஷ் கிஷோரை ஒரு நாயகனாக மாற்றுகிறது.
மல்லிகார்ஜூனகார்கே
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும் போது “தலைமை நீதிபதி மீது தாக்குதல் நடத்த முயன்றது வெட்கக்கேடானது இது நீதித்துறையின் கவரவம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதான நேரடித் தாக்குதல் ஆகும்.
தனது கல்வித் தகுதி, நேர்மை மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் மீது அபார அறிவாற்றல் காரணமாக நாட்டின் உச்சபட்ச நீதித்துறைப் பதவியை அடைந்த ஒரு தலைமை நீதிபதி இந்த விதத்தில் குறிவைக்கப்படும்போது, அது மிகவும் கவலைக்குரிய செய்தியை அளிக்கிறது. இது, அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பதற்காக சமூகக் கட்டுப்பாடுகளைத் தகர்த்த ஒருவரை அச்சுறுத்துவதற்கும், அவமானப்படுத்துவதற்கும் செய்யப்படும் ஒரு முயற்சியாகும். கடந்த 10 ஆண்டுகளில் வெறுப்பு, மதவெறி மற்றும் மதப்பற்று, வெறி ஆகியவை நம் சமூகத்தை எந்த அளவிற்குப் பிடித்துக்கொண்டுள்ளன என்பதைக் காட்டுவதாக இந்தச் சம்பவம் உள்ளது.” காங்கிரஸின் மேனாள் தலைவர் சோனியா காந்தி அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “தலைமை நீதிபதி மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டிக்க வார்த்தைகளே போதாது. இது அவர் மீதான தாக்குதல் மட்டுமல்ல; நம் அரசியலமைப்புச் சட்டம் மீதான தாக்குதல் ஆகும். தலைமை நீதிபதி கண்ணியத்துடன் செயல்பட்டாலும், நாடு அவருக்கு உறுதுணையாக நிற்க வேண்டும். இந்தச் சம்பவத்தால் நாம் அனைவரும் துயருற்றுள்ளோம், கோபமும் அடைந்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் உடனடியாக கண்டன அறிக் கையை வெளியிட்டார்.
கேரளா மற்றும் தமிழ்நாட்டின் முதலமைச்சர்களும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ளனர்.
முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் கண்டனம்
மு.க.ஸ்டாலின் கண்டனம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “இந்தச் சம்பவம் கடுமைான கண்டனத்திற்குரியது ஆகும். தலைமை நீதிபதி காட்டிய சகிப்புத்தன்மை, கண்ணியம் இந்த நிறுவனத்தின் வலிமையை வெளிப் படுத்துகிறது. ஆனால், நாம் இந்தச் சம்பவத்தை சாதாரண விஷயமாகக் கருத முடியாது. தாக்குதல் நடத்தியவர் கூறிய காரணங்கள் நம் சமூகத்தில் ஆழமாக வேரூன்றி, ஜாதிவெறி மனப்பான்மையுடன் தொடர்புடையவை. ஆங்கிலத்தில் இது ஒடுக்குமுறை மற்றும் படிநிலை மனப்பான்மை என்று குறிப்பிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள், “இந்தச் சம்பவத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, தற்போது அதிகரித்து வரும் சகிப்பின்மையைப் புறக்கணிப்பதாகும். மதத் தீவிரவாதம் நாட்டின் தலைமை நீதிபதியையே தாக்கத் துணியும்போது, அதன் பிளவுபடுத்தும் நச்சுத்தன்மை வாய்ந்த அச்சுறுத்தல்கள் தெளிவாகின்றன. இவற்றை எந்தத் தயக்கமும் இன்றி எதிர்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
அதிர்ச்சி அளிக்கிறது
உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “தலைமை நீதிபதி மீது உச்ச நீதிமன்ற பார் உறுப்பினரால் செய்யப்பட்ட இந்த நாகரிகமற்ற செயல் பகிரங்கமாகக் கண்டிக்கப்பட வேண்டும். இந்தச் சம்பவம் குறித்து பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் சட்ட அமைச்சர் ஆகியோர் மவுனம் காப்பது அதிர்ச்சி அளிக்கிறது” என்று எழுதியுள்ளார். உச்ச நீதிமன்ற பார் சங்கம் (SCBA) இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ளது.
காலணி வீசும்போது முழக்கமிட்ட வர்களை, ஆதரிப்பவர்களின் அடையாளத் தைக் கண்டுபிடிப்பது கடினம் அல்ல. ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க யாருக்கும் தைரியம் இல்லை என்பதில் யாருக்கும் குழப்பம் இருக்க வேண்டியதில்லை.
உச்ச நீதிமன்றமும், தலைமை நீதிபதியும் இந்த விவகாரத்தில் பேசியிருக்க வேண்டும். அவர்களின் இந்த மவுனம், ஜாதி அடிப்படையிலான பாகுபாட்டிலிருந்து பாதுகாக்கிற, அதோடு மட்டுமல்லாமல், மதத்தின் ஆக்கிரமிப்பிலிருந்தும் பாதுகாக்கிற அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வுகளைப் பலவீனப்படுத்துகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் அந்த விதிகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள நோக்கத்திற்காக தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், உச்ச நீதிமன்றமும் குரல் கொடுத்திருக்க வேண்டும்.
இதன் காரணமாகத்தான், பார்ப்பனரல்லாத ஒவ்வொரு தனிநபரும் அரசியலமைப்புச் சட்டத்தையும் உச்ச நீதிமன்றத் தையும் நம்பிப் பார்க்கிறார்கள்.
தலித் நபர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கு வரும்போது, அது அரசியலமைப்புச் சட்டத்தின் மிக உயர்ந்த தன்மை ஆகும். அந்தத் தலைமை நீதிபதியின் நாற்காலியில் அமர்ந்திருப்பவரே பாதுகாப்பற்றவராக இருந்தால், அவருக்கே இத்தகைய நிலை ஏற்பட முடியுமானால், தெருக்களிலும், சமூகத்திலும், கிராமங்களிலும் ஒரு தலித் நபருக்கு என்னவெல்லாம் நடக்க முடியும்? என்னவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது? என்பதை நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
இதேபோன்று, 2017ஆம் ஆண்டில், இராஜஸ்தானின் உதய்பூரில் ஒரு கும்பல் வந்தது. மாவட்ட நீதிமன்றக் கட்டடத்துடன் இணைந்த சுவரில் ஏறி, காவிக்கொடியை ஏற்றிவிட்டுச் சென்றது. அக்டோபர் 6ஆம் தேதி நடந்த தாக்குதலுக்கான சதித்திட்டம் செப்டம்பர் 16ஆம் தேதியே எழுதப்பட்டிருக்கலாம். “முன்பு நாம் நியூட்டனின் விதிகளைப் பற்றிப் படித்தோம் அதாவது, ஒவ்வொரு வினைக்கும் அதே விகிதத்தில் எதிர்வினை இருக்கும் என்று. ஆனால், இப்போது ஒரு புதிய விதி வந்துவிட்டது: ஒவ்வொரு வினைக்கும் தவறான மற்றும் விகிதத்திற்கு முரணான எதிர்வினை ஏற்படுகிறது.”
கட்டுப்பாடில்லாத குதிரைகள்
இந்தச் சம்பவம் நடந்தபோது, கபில் சிபல் அவர்களும் நீதிமன்றத்தில் இருந்தார். அவர் சமூக ஊடகங்களை கட்டுப்பாடில்லாத குதிரையுடன் ஒப்பிட்டார். வெளிப்படையாக, சொலிசிட்டர் ஜெனரல் சமூக ஊடகத்தின் எதிர்
வினையை அளவுக்கு அதிகமானதாகக் குறிப்பிட்டார்.
செப்டம்பர் மாதத்தில் விஸ்வ இந்து பரிஷத்தின் தேசியத் தலைவர் அலோக் குமார் அவர்களின் அறிக்கை செய்தித்தாள்களில் வெளியானது.
“தலைமை நீதிபதியின் வாய்வழி கருத்துகள் இந்து மதத்தின், நம்பிக்கைகளை அவமானப்படுத்தியதாக நாங்கள் உணர்கிறோம்’’ என்றார். விஸ்வ இந்து பரிஷத்தின் தலைவர் அலோக் குமாரும் ஒரு வழக்குரைஞரே.
ஜாதிய மனப்பான்மை மதத்தின் ஆதிக்கத்தை ஒரு முகமூடியாக அணிந்து கொண்டிருக்கிறது, மேலும் அதன் முன் நிறுவனங்கள் சரணடைந்து கொண்டிருக்கின்றன. இதை நாம் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.
மதத்தின் ஆதிக்கத்திற்கு முன், அரசியலமைப்புச் சட்டத்தின் ஆதிக்கம் பலவீனமடைந்து வருகிறதென்று என்று நாம் கருதலாமா? மத விவகாரங்களில் இனிமேல் நீதிமன்றம் என்ன பேசும் என்பதை அக்கிரகாரம் – உச்சிக்குடிமிகள் முடிவு செய்வார்களா? உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் அவர்கள் இன்று கூறிய அதே சொற்களைத்தான் அன்று தந்தை பெரியாரும் ஊர் ஊராக தெருத்தெருவாக, சென்று பரப்புரை செய்தார்
ஸநாதனத்தின் வீழ்ச்சியும் செருப்பு வீச்சும்
பெரியார் அன்று ஸநாதன சக்தியை எதிர்த்துப் பேசும்போது ஒரு கருத்தைக் கூறினார்: ‘‘சூத்திரன் அடித்துப்பிடித்துப் படித்து உச்ச நீதிமன்றம் போனால், அங்கே ஒரு ஸநாதனவாதிதான் அமர்ந்திருப்பான்’’ என்று! ஆனால், அவர்களின் கெடுவாய்ப்பாக, இன்று அங்கே நம் ஒடுக்கப்பட்ட மக்களின் தொடர்ச்சியான பிரதிநிதியாக நீதிபதி பி.ஆர். கவாய் அமர்ந்திருக்கிறார்! ஆனால், கெட்டவாய்ப்பாக, செருப்பு அதே ஸநாதனக் கைகளில் இன்னமும் இருக்கிறது.
இதுதான் அம்பேத்கர்-பெரியார் தத்துவத்தின் வளர்ச்சியும் – சிந்தனை எழுச்சியும் ஆகும்!
சமதர்மம் பேசியதால் அன்று அடிக்க எடுக்கப்பட்ட செருப்பு, சுமார் 80 ஆண்டுகள் கழித்தும், எடுத்தவன் கைகளிலேயே இன்னமும் இருக்கிறது. ஆனால், கவாய் எனும் அடையாளம், பெரியார் – அம்பேத்கரின் உரிமைப் போராட்டத்தின் சாட்சியாக, உச்சத்தில், உச்ச நீதிமன்றத்தில் வீற்றிருக்கிறது. இதுதான் ஸநாதனத்தின் வீழ்ச்சி!
ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்:
அவர்கள் கைகளில் எப்போதும் அந்தச் செருப்பு மட்டுமே இருக்கும்! அதுதான் அவனுக்கான ஒரே கல்வி!
அதே செருப்பை அவன் தன் தலையிலேயே அவனே அடித்துக் கொள்ளும் வரை, நாம் முற்போக்குச் சிந்தனையாலும், உலகப் பொதுவுடைமைச் சிந்தனையாலும், அறிவியல் கண்டுபிடிப்புகளோடும் வீர நடை போடுவோம்!
ஒரு ஜாதியின் கீழ் இருந்த நீதித்துறை
ஊழியர்களின் பணி சமநிலைக்கு வந்தது
ஊழியர்களின் பணி சமநிலைக்கு வந்தது
நீதிபதி பி.ஆர். கவாய் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றதும், நீதித்துறையின் வரலாற்றிலேயே முதன்முறையாக, உச்ச நீதிமன்ற ஊழியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார். இதன் மூலம், 75 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ஜாதியின் ஆதிக்கத்தில் இருந்த நீதித்துறை ஊழியர்களின் பதவியை அவர் சமத்துவமாகப் பொதுவாக்கினார்.
மேலும், பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின் எந்த ஓர் அதிகாரப் பதவியையும் ஏற்க மாட்டேன் எனப் பதவியேற்ற உடனேயே அறிவித்துவிட்டார். இது, ஓய்வுக்குப் பின் பதவிகளைப் பெறும் நீதிபதிகள் குறித்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் துணிச்சலான சமத்துவப் பிரகடனம். காலில் செருப்பு போட அனுமதிக்காத பட்டியலில் இருந்து வந்த ஒருவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக வந்து, அவர் எல்லோருக்கான நீதியைப் பேசுகிற போது, அந்தச் செருப்பை அவர்கள் அவர் மீதே எறிகிறார்கள்.
சுயமரியாதை, சமூக நீதி பேசி, அம்பேத்கரைத் தூக்கிப் பிடித்த ஒரே காரணத்திற்காக, மதவாத
சக்திகளால் சூறையாடப்பட்டு வருகிறார் தலைமை நீதிபதி கவாய்.
வலுவான அறிகுறி
இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறதோ, அதுதான் பெரும்பான்மை இந்தியர்களுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது.
இந்தச் செருப்பு வீச்சு, ஒரு தனிநபர் மீதான தாக்குதல் அல்ல; அது சமத்துவக் கொள்கை மீதும், அரசியலமைப்புச் சட்டம் மீதும் நடத்தப்பட்ட ஆதிக்கத்தின் கடைசி அஸ்திரமாகும். ஆனால், தலைமை நீதிபதி கவாயின் இருப்பு, ஸநாதனம் வீழத் தொடங்கிவிட்டது என்பதற்கான வலுவான அறிகுறியாகும்.