மதுரை, அக். 10- தந்தை பெரியார் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாகக் கருத்தரங்கம் 28. 09. 2025 அன்று மாலை 6. 30 மணி அளவில் ,நடைபெற்றது
நிகழ்வுக்கு வந்திருந்த அனை வரையும் வரவேற்று மாநகர மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ. முருகானந்தம் உரை யாற்றினார். தொடர்ந்து நிகழ்வினை ஒருங்கிணைத்த திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் வே. செல்வம் ,தலைப்பு பற்றியும் நிகழ்வு பற்றியும் குறிப்பிட்டு ஒருங்கிணைத்தார். கழகச் சொற் பொழிவாளர் வேங்கைமாறன் தொடக்க உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு தலைமையேற்ற பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் முனைவர் வா. நேரு, விடுதலையில் ஆசிரியர் அவர்களின் அறிக்கை, அக்டோபர் 4ஆம் தேதி செங் கல்பட்டில் நடைபெறும் மாநாட்டில் பேச்சினை தயாரித்துக்கொண்டு வந்து குறிப்பிட்ட நேரத்தில் பேச்சினை முடிக்கவேண்டும் என்று சுட்டிக்காட்டி இருப்பதை சுட்டிக்காட்டி, கருத்தரங்கத்தில் உரையாற்றுவோர் குறிப்பிட்ட நேரத்திற்குள் உரையாற்றும்படி கேட்டுக்கொண்டார். ’தந்தை பெரியாரின் ஆற்றல்மிகு அறிவுத் தளம், அறிஞர் அண்ணாவின் அறிவார்ந்த அரசியல் தளம்’ என்னும் தலைப்பு சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டி கருத்தரங்கத்தில் உரையாற்ற ஒவ்வொருவராக அழைத்தார்.
பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் ‘தந்தை பெரியாரின் ஆற்றல் மிகு அறிவுத்தளம் ‘ என்னும் தலைப்பில் உரையாற்றினார். அவர் தனது உரையில் செப்டம்பர் மாதம் என்பது திராவிட மாதம். இங்கு இருப்பவர்கள் தந்தை பெரியார் பற்றித் தெரியாத வர்கள் அல்ல, ஆனால் நாம் நினைவுபடுத்துவதற்காக இந்தக் கூட்டத்தில் சில செய்திகளைச் சொல்கிறோம் என்று குறிப் பிட்டு பெரியாரின் கருத்து இன்றைக்கு உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது ,பெரியார் உலகமயமாகிறார் என்று உரை யாற்றினார்.
பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் வீர பழனிவேல்ராசன் ‘அறிஞர் அண்ணாவின் அறிவார்ந்த அரசியல் தளம்’ என்னும் தலைப்பில் உரையாற்றினார். ’ஏ தாழ்ந்த தமிழகமே’ என்று எழுதியவர் அறிஞர் அண்ணா ,வட நாட்டுச்சுரண்டலை அம் பலப்படுத்தியவர், ’பணத் தோட்டம்‘ என்ற நூலை எழுதி எப்படி மார்வாடிகள் தமிழ் நாட்டின் பொருளாதாரத்தை பாழ் படுத்துகிறார்கள் என்று குறிப்பிட்டு அவரின் அரசியல் கருத்துகள் இன்றைக்கும் பொருந்துகிறது என்றார்.
தொடர்ந்து பகுத்தறிவு எழுத் தாளர் மன்ற மாநிலச்செயலாளர் பாவலர் சுப. முருகானந்தம் தந்தை பெரியாரின் ஆற்றல்மிகு அறிவுத்தளம் பற்றி அடுக்கடுக்காய் எடுத்துக்காட்டுகளைக் காட்டி உரையாற்றினார். தந்தை பெரியாரின் அறிவுத்தளம் மிக வலிமையானது,வன்மையானது. ஒருவனின் அறிவு மக்களுக்குப் பயன்படவேண்டும் என்று குறிப்பிட்டவர் அய்யா,மனித வாழ்வின் உச்சம் மன நிறைவு ,அதற்காக நான் பொதுத்தொண்டு செய்கிறேன் என்று செய்தவர் தந்தை பெரியார் என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.
தொடர்ந்து திராவிட இயக்கத்தமிழர் பேரவையின் மாநில துணைச்செயலாளர் வழக்குரைஞர் இராம. வைரமுத்து,அண்ணாவின் அரசியல் பயணம் அறிவார்ந்த அரசியல் தளத்தின் அடிப்படையில் எப்படி நிகழ்ந்தது என்று குறிப்பிட்டார். ஆங்கிலத்தில் அண்ணாவின் புலமையை பல எடுத்துக்காட்டுகளோடு அவைக்கு எடுத்துவைத்தார். பார்ப்பனர் இல்லாத அமைச்சரவையை அன்றைக்கு அறிஞர் அண்ணா அமைத்தார். இன்றைக்கு திராவிட மாடல் அரசு, தளபதி மு. க. ஸ்டாலின் அவர்கள் இருக்கும் சட்டசபையில் பார்ப்பன உறுப்பினர்களே சட்டசபைக்குள் இல்லை என்று குறிப்பிட்டார். ’வீடு இருந்தால்தான் ஓடு மாட்டமுடியும்‘ என்று சொல்லி திராவிட நாடு பிரிவினை கோரிக்கையைக் கைவிட நேர்ந்தபோது எப்படி அதற்கான காரணங்களை தன் கட்சித்தொண்டர்களிடம் விளக்கி வெற்றி பெற்றார் என்பதைக் குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவுக் காலம்
இறுதியாக கருத்தரங்கத்தினை நிறைவு செய்து பகுத்தறிவு எழுத் தாளர் மன்ற மாநிலத்தலைவர் முனைவர் வா. நேரு உரையாற்றினார். இன்றைக்கு செயற்கை நுண்ணறிவுக் காலம். விடுதலையை தமிழில் முதன் முதலாக எப்படி இணையத்தில் திராவிடர் கழகத்தலைவர் வீரமணி அவர்கள் கொண்டு வந்தார்களோ அதனைப்போல செயற்கை நுண்ணறிவிலும் தந்தை பெரியார் முதலில் வருகின்றார். அதற்காக பெரியார் பன்னாட்டு அமைப்பு போன்ற அமைப்புகள் மிகப்பெரும் வேலையைச்செய்து கொண்டிருக்கிறார்கள். ஒருமுறை பேரா க. அன்பழகன் அவர்கள் ,நாங்கள் 1949-ல் தந்தை பெரியாரை விட்டுப்பிரிந்தது பெரியார் மணியம்மைத் திருமணத்தால் அல்ல. எங்களுக்கு அரசியலுக்குப் போகவேண்டும், பதவிகளைப் பிடித்து ,சுயமரியாதை இயக்க கருத்துகளை சட்டமாக்கவேண்டும் என்று ஆசை இருந்தது ,அதனால் பிரிந்தோம் என்று குறிப்பிட்டார். அரசியல் தளத்திற்கு சென்று பல சாதனைகளை நிகழ்த்தியவர் அண்ணா அவர்கள் என்று பல எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிட்டார். அறிஞர் அண்ணாவின் அறிவார்ந்த அரசியல்தளத்திற்கு அடித்தளமாக அமைந்தது தந்தை பெரியாரின் ஆற்றல்மிகு அறிவுத்தளமே என்று குறிப்பிட்டு கருத்தரங்கத்தினை நிறைவு செய்தார்.
இறுதியாக மாநில மாணவர் கழக துணைச்செயலாளர் சீ. தேவராஜபாண்டியன் நன்றி கூறினார். கருத்தரங்கத்தில் தலைமை யேற்ற,உரையாற்றிய அனைவருக்கும் பயனாடை போர்த்தப்பட்டது. நிகழ்வில் திராவிடர் கழக மாவட் டச்செயலாளர் இரா. லீ. சுரேசு,இரா. திருப்பதி,அழகுபாண்டி,பேக்கரி கண்ணன், க. அழகர்,போட்டோ இராதா, சிவா,மாரிமுத்து,பொதுக்குழு உறுப்பினர் இராக்கு,பா. சடகோபன், செல்ல. கிருட்டிணன், ஆட்டோ செல்வம்,. செல்லத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கருத்துகள் செறிவால் ஒரு நிறைவான கருத்தரங்கமாக,வந்திருந்த தோழர்களுக்கு அறிவு விருந்தாக நிகழ்வு அமைந்தது.