ராஞ்சி, அக்.9- வேறு ஜாதி இளைஞரை திருமணம் செய்த சிறுமியை பச்சிளம் குழந்தையுடன் சேர்த்து அவரது தந்தையே ஆவேசமாக ஆணவக்கொலை செய்துள்ளார்.
17 வயது சிறுமி
ஜார்க்கண்ட் மாநிலம் கார்வா அருகே ஒரையா கிராமத்தைச் சேர்ந்தவர் அனில் சவுத்ரி (வயது 45) திருமணமான இவருக்கு ராதிகா குமாரி (17) என்ற மகள் இருந்தார். ராதிகா குமாரி பக்கத்து கிராமத்தை சேர்ந்த வேறு ஜாதி இளைஞரை காதலித்து வந்துள்ளார். காதலித்தபோது இருவரும் நெருக்கமாகப் பழகியுள்ளனர். இதில் அந்த சிறுமி கருவுற்றதாக கூறப்படுகிறது. தான் கருவுற்றதை அந்த சிறுமி தனது பெற்றோரிடம் மறைத்துள்ளார்.
பிரசவ வலி
இருப்பினும் மகளின் காதல் குறித்து அறிந்த அவருடைய தந்தை இதுகுறித்து காவல்துறையில் புகாரளித்தார். இதன்படி போக்சோ சட்டத்தின்கீழ் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ராதிகாவின் காதலரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் அந்த இளைஞர் ஜாமீனில் வெளியே வந்ததையடுத்து ராதிகா குமாரி வீட்டைவிட்டு வெளியேறி அவருடன் வசித்து வந்தார். அப்போது அவருக்கு பிரசவ வலி எடுத்ததைத் தொடர்ந்து கார்வாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தை பிறந்தது.
ஆணவக் கொலை
இதுகுறித்து தகவலறிந்த அனில் சவுத்ரி தனது மகள் மற்றும் அவருக்குப் பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்தார். அப்போது ஆத்திரம் தாங்காமல் ராதிகா குமாரியை கழுத்தை நெரித்து ஆணவக்கொலை செய்தார். ஆத்திரம் குறையாத அவர் அருகே தொட்டிலில் இருந்த ஒரு நாளே ஆன குழந்தையின் கழுத்தை நெரித்து மூச்சுத்திணற வைத்து கொலை செய்தார். அவர்களுடைய உடல்களை அங்கிருந்து தூக்கிச் சென்று சொந்த கிராமத்தில் புதைத்தார். இதுகுறித்து ராதிகாவின் காதலன் கொடுத்த புகாரின்பேரில் அனில் சவுத்ரி கைது செய்யப்பட்டார். புதைக்கப்பட்ட உடல்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறாய்விற்கு மருத்துவமனைக் அனுப்பி வைக்கப்பட்டன.