தந்தை பெரியார் தந்த சுயமரியாதை வாழ்வியலைப் பற்றிய எவரும் தங்கள் வாழ்வில் தோல்வியுற்றதே இல்லை; சிலர் அதை சரி வரக் கடைப்பிடித்தொழுகாமல், வேறு திசை நோக்கி, வாழ்ந்தவர்கள் – வாழுபவர்கள் வேண்டுமானால் எங்கோ ஒரு பகுதியில் தோற்று இருக்கக் கூடும்!
தந்தை பெரியார் கற்றுத் தந்த சிக்கனம் என்ற வாழ்வியல் பண்பாட்டால் அதைக் கடைப்பிடித்ததின் மூலம் வளர்ந்து, முன்னேறியிருக்கிறார்கள், எடுத்துக்காட்டாக உள்ளார்கள். வெளியே அவர்கள் நல்ல செல்வந்தர் என்பதைக்கூட, அவரிடம் நெருங்கிப் பழகும் பல நண்பர்கள்கூட தெரிந்து கொள்ளப் பல ஆண்டுகள் ஆகும்!
எளிமை, அடக்கம், வெளிச்சத்தை விரும்பாத சுயக்கட்டுப்பாடு – இவைகளே அதற்குக் காரணம்.
தந்தை பெரியாரின் சிக்கனத்தைப் புரியாத புலம்பல் சிரோன்மணிகள் சிக்கனத்திற்கும், கஞ்சத்தனம் – கருமித்தனம் என்பதற்கும் உள்ள கடும் வேறுபாடு அறியாதவர்கள்!
தந்தை பெரியார் அவர்களே அதைப் பல திருமண மேடைப் பேச்சுகளாலும், வேறு நிகழ்ச்சிகளின்போதும் விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்களே!!
தேவைக்கு ஏற்ப செலவழிப்பது சிக்கனம்.
தேவைக்கு மேல் செலவழிப்பது – வெளிச்சம் விரும்புவது – ஆடம்பரம். தேவைக்கே செலவழிக்காமலிருப்பது கருமித்தனம்.
தேவைக்கும் செலவு செய்ய மனமின்றித் தங்களையும் வருத்திக் கொண்டு, பிறருக்கும் பயன்தரா வாழ்க்கை வாழும் வன்நெஞ்சர்கள்!
செலவு என்பதே அதன் தன்மையை – தேவையை – அவசரத்தைப் பொறுத்த ஒன்றேயாகும். அய்யா வாழ்வின் நடைமுறைச் செயல்களோ நமக்கு நல்ல பாடப் புத்தகங்களாகும்! ‘திருமண வாழ்த்து’ போன்றவைகளை அய்யா தமது லெட்டர் பேடில் அனுப்புவார். அதில் அய்யாவிடம் கையொப்பம் பெறப்போகும்போது – அதை இரண்டு முறைப் படித்துப் பார்த்து, ‘ஏம்பா, இந்தக் குறைந்த சொற்கள் உள்ள வாழ்த்துச் செய்தியைத் ஏன் தனி லெட்டர் பேடில் எழுதி, அதற்கு 2 அணா கவரை வீணாக்கிட வேண்டும்? முக்காலணா கார்டு (அஞ்சல் அட்டை – Post Card) போதாதா?’’ என்று கூறிப் ‘பாடம்’ எடுப்பார். தோழர்களைத் திருத்துவார்!
அந்த சிந்தனையைப் போதித்த தந்தை பெரியார் சில ரொக்க பாக்கிகளை இயக்கச் சார்பில் முதலீடு செய்து அதன் வட்டி இயக்க வளர்ச்சிக்குப் பயன்பட வேண்டி கோவையில் அவருக்கு வேண்டியவர்கள் – அவரது நம்பிக்கையைப் பெற்ற பஞ்சு மில்களில் போட்டு – மூன்று மாதத்திற்கு ஒரு முறை வட்டியை (மாதம் தொடங்கி ஒரு வாரத்திற்குள் – அந்த மாதத்தில்) அந்த மில் நிர்வாகம் கெடு தேதிக்குள் முறையாக காசோலை மூலம் அனுப்பத் தவறிடும்போது – வரவின் காலதாமதத்தைப் பொறுக்க முடியாதவர் – அவர்களுக்கு ஒரு தந்தி கொடுத்து, பதில் கேட்டு, வசூலிக்க வேக நடவடிக்கையில் இறங்க வேண்டுமென்பார்!
கூடுதல் கால தாமதம் ஏற்பட்டால் ‘‘நீங்கள், ஈரோடு எஸ்.ஆர். சாமியை (அய்யாவின் ஈரோடு சொத்துகள் – எஸ்டேட்டின் மேனேஜர் – மறைவு) அழைத்துக் கொண்டு கோவைக்குச் சென்று கையோடு வட்டிக்கான காசோலையை அவருடன் பெற்று வரத் தவறக் கூடாது’’ என்று அறிவுறுத்தி எங்களுக்கு ஆணையிடுவார்.
அத்தொகை வராவிட்டால் ‘‘எவ்வளவு வட்டி இழப்பு – நமது நிறுவனத்திற்கு; நேரில் செலவழித்துச் சென்று வசூலிப்பதனால் ரூபாய் கண்ணோட்டத்திலும் லாபம் தானே!’’ என்பது தந்தை பெரியாரின் நல்நோக்கு.
‘சிக்கனம்’ என்பதற்கு வாழ்வின் முக்கியத்தையொட்டி ‘‘அது வீண் செலவா அல்லது தேவையான செலவா’’ என்று பார்க்க வேண்டும் என்றுகூறி தனது சேமிப்பை உயர்த்தி மக்களுக்காக அத்தனையும் விட்டுச் சென்று தனித்ததோர் இமயமாய் இன்றும் உயர்ந்து நிற்கிறார்!
‘‘கடனற்று வாழக் கற்றுக் கொள்ளுங்கள்’’ என்பார்கள். அது முக்கியமானது. அதுபற்றிப் பிறகு பார்ப்போமா!
(வளரும்)