நேபிடாவ், அக்.9- மியான்மரில் 2021ஆம் ஆண்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. நாட்டின் அதிபராக இருந்த ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதேவேளை, ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கிளர்ச்சிக்குழுக்கள் போராடி வருகின்றன. அந்த குழுக்கள் நகரின் பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
இந்நிலையில், அந்நாட்டின் சஹாயிங் மாகாணம் மவ்யா மாவட்டம் சாங்-யூ நகரம் மக்கள் பாதுகாப்புப்படை என்ற கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த பகுதியில் கடந்த 6.10.2025 அன்று இரவு புத்தமத முக்கிய விழாவான தடிங்யட் முழு நிலவு விழா கொண்டாடப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு மத வழிபாடு செய்தனர்.
அப்போது, மத நிகழ்ச்சிக்காக கூடியிருந்தவர்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. பாராகிளைடர், பாராசூட்டில் வந்த ராணுவத்தினர் கூடியிருந்தவர்கள் மீது குண்டுகளை வீசினர். இந்த சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்தனர். மேலும், 80 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.