சென்னை, அக்.9- தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் உண்ணா நிலை அறப்போராட்டம் சென்னை-எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் 07-10-2025 ஒரு நாள் முழுவதும் நடைபெற்றது.
இதில் திராவிடர் கழகத்தின் சார்பில் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.
தந்தை பெரியார் அவர்கள் உண்ணா நிலை போன்ற போராட்டங்களை ஏற்றுக்கொண்டவர் அல்ல; தன்னை வருத்திக்கொண்டு ஒவ்வொருவரும் போராடுவதை தவிர்த்து தந்தை பெரியார் அவர்கள் மாறுபட்ட கொள்கையை உடையவர். ஒவ்வொருவருக்கும் போராடக்கூடிய உரிமை உள்ளது அதனை அறவழியில் பல்வேறு வகையில் போராடலாமே தவிர உண்ணாநிலை போன்ற போராட்டங்களை அவர் ஏற்கவில்லை. இருந்தாலும் உங்கள் அமைப்பின் போராட்டம் நியாயமானது அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திராவிடர் கழகத்தின் சார்பில் இங்கு வந்து கலந்து கொண்டிருக்கிறோம்.
உணவு பாதுகாப்பு அலுவலர் பணியாளர்கள் முன்னெடுத்துள்ள ஆக்கபூர்வமான கோரிக்கைகளை திராவிடர் கழகத் தலை வர் ஆசிரியர் அவர்கள் நிச்சயமாக தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்வார் என்பதை உங்கள் இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த நான்காண்டு களில் திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வந்தாலும், இது போன்ற சில துறைகளில் ஏற்பட்டுள்ள குறைகளையும் முதல்வர் சரி செய்வார் என்பதில் சந்தேகமில்லை.
உங்களது நியாயமான கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு இந்தப் போராட்டத்தின் மூலமாக செல்லும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கழக பொருளாளர் உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலச் செயலாளர் மு.வீர பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, மற்றும் சமூக நீதிக்கான மருத்துவர்கள் பேரவையின் டாக்டர் ரவீந்திரநாத் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.
கூட்டத்தில் தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் ஸ்டாலின் ராஜரத்தினம் , மாநில பொறுப்பாளர்கள் காமராஜ் முத்துராஜா ஜெபராஜ், சோபன குமார், ரவிச்சந்திரன் ஜெ.ரவிச்சந்திரன் தங்க வேல் வெ.ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து ெகாண்டனர்.