‘சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு’ என்றார் தந்தை பெரியார். சுயமரியாதை இயக்கம் ஒரு மனித சமத்துவ இயக்கம்! அடிமை வாழ்வையும், பிறவி இழிவையும் அகற்றிடப் போராடி ஒரு நூறாண்டு கண்ட வெற்றி இயக்கம். வெறும் வாய்ப் பேச்சு – உபதேசம் செய்யும் கதாகாலட்சேப மடம் அல்ல;
மனிதர்களுக்கு நல்வாழ்வு வாழக் கற்றுக் கொடுத்து, எளிமையைப் போதித்து, ‘சிக்கன வாழ்வே சீரான வாழ்வு’ என்று நடந்து காட்டி, நாட்டோரை நல்வழிப்படுத்திடும் மனித நல அறிவியக்கம்.
சக மனிதர்களைப் பிரித்து உயர்வு – தாழ்வு கற்பித்த, பிறவி பேத வருண ஜாதிக் கட்ட மைப்பைத் தகர்த்து, மனிதநேயத்தோடு மக்களை ஒருங்கிணைத்து, புதுவாழ்வு வாழ நாளும் போதித்து வரும் புதுமை – புரட்சி இயக்கம்.
ஒப்பற்ற சுய சிந்தனையாளரும், ஒப்பாரில்லாத எதிர் நீச்சல் வெற்றி வீரருமான தந்தை பெரியார் காட்டிய சுயமரியாதை வாழ்வு என்ற சுதந்திர சுகவாழ்வு, எப்படி முந்தைய வாழ்க்கை முறைகளின் பேதங்களை, பெருந்துயர், பேரிழிவு (பேர் + இழிவு) இவற்றை விரட்டி, மனிதர்களை – மனிதத்தன்மை பொங்கும் உண்மை மனிதர்களாக்கிய இயக்கம்!
அதனால் அவ்வியக்கத்தின் அறிவுப் பேராசான் தந்தை பெரியார் கண்ட ‘சுயமரியாதை’ என்ற மருத்துவம் முதலில் சற்று கசப்புதான் என்றாலும், பிறகு அதுவே வாழ்க்கையின் இனிப்பையும், மாறா மகிழ்ச்சியையும், சோதனைகளை எதிர் கொண்டு வெற்றி கண்டு சாதனை படைக்கும் மனத் திண்மையையும் உலக மக்களுக்கே பரப்பி வரும் ஓர் உன்னத இயக்கம்.
‘சுயமரியாதை வாழ்வு எப்படி சுகவாழ்வு?’ என்று கேட்பவர்களுக்கு அறிவுப்பூர்வ, நடைமுறை வெற்றி கண்ட தனித்தன்மைமிக்க வாழ்வு அது!
‘‘என்னைவிட தாழ்ந்தவன் என்று எவரும் இருப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
என்னைவிட உயர்ந்தவன் என்று கருதி எவரிடமும் அடிமையாக என்னை, நானே சங்கிலி விலங்குகளால் – பூட்டிக் கொண்டு – நடமாடும் சிறை வாழ்வை வாழாது – அறிவுச் சுதந்திரத்தோடு அர்த்தமுள்ள வாழ்வைப் பெற்று மன நிறைவுடன் மகிழ்ச்சி படரும் வாழ்வை அமைத்துக் கொள்வேன்.’’ என மனிதர்களை உறுதி பூணச் செய்வதே ‘சுயமரியாதை’ என்னும் சொல்லாகும்.
சுயமரியாதை வாழ்வில் ஆடம்பரம், போலிப் பெருமைக்காக கடன் வாங்கியும் தன் வாழ்வைச் சீரழித்து, சிதைத்து விடாத சிறப்புமிகு பெருமை தரும் வாழ்வு!
தந்தை பெரியார் பெரும் செல்வந்தர் – ஆனால் அவரது சிக்கனமோ அதனினும் மானப் பெரிது! பிரபல ஷேக்ஸ்பிரியரின் நாடகக் காவியத்தில் ஒரு வசன வரி உண்டு.
‘Neither be a borrower; Nor a lender’
‘நீங்கள் எவரிடமும் கடன் வாங்காதீர்! எவருக்கும் கடன் கொடுத்துப் பழகாதீர்கள்’
காரணம், கடன் பெற்றதால் நீண்ட கால உயிர் நட்புகூட முறிந்து வீழ்ந்து விடுவதுண்டு!
தந்தை பெரியார் அதை அப்படியே கடைப்பிடித்து தனது தோழர்களான தொண்டர்களுக்கும், ஏனைய பகுத்தறிவாளர்களுக்கும் வழிகாட்டினார்கள்!
தந்தை பெரியாரிடம் யாராவது கடன் கேட்டு வந்தால் அது எவ்வளவு நெருங்கிய நண்பர் அல்லது ரத்த உறவுக்காரர் என்றாலும் கடன் தந்ததில்லை.
(ஓரிரண்டு விதி விலக்குகள் – தவிர்க்க முடியாத தாட்சண்யத்தால் உண்டு என்றாலும்கூட)
‘‘சிக்கனத்தினையே சிறந்த வாழ்வுக்கான சிறப்பான அடிப்படை’’ என்று சொல்லிக் கொடுத்த ‘பெரியாரின் சிக்கனம்தான் தமிழ்நாட்டின் பொக்கிஷம்’ என்று திருச்சியில் வாழ்ந்த ஒரு பிரபல கல்வியாளர் எம்.எஸ். நாடார் பல ஆண்டுகளுக்குமுன் பாராட்டியதை, இன்று அவரது அருட்கொடையினால் மலர்ந்து விரிந்த பல்கலைக் கழகங்களில், கல்லூரி, பள்ளிகளில் பட்டங்கள், Phd, டாக்டர் பட்டம் வரை படித்துப் பெற்ற பலரும்கூட சிந்தித்திருக்க மாட்டார்கள்.
சிலர் தந்தை பெரியாரின் இந்த சிக்கனத்தை, நடைமுறைத் தத்துவத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாத குறை அறிவு காரணமாக குறை கூறுவது உண்டு. வாழ்க்கையையும், வாழ்க்கையில் திரட்டிய முழு செல்வத்தையும், சொத்துக்களையும் மக்களுக்கே – தமது (இரத்த உறவு மக்களுக்கு அல்ல) விட்டுச் சென்ற ஒரு மகத்தான மானுட நேயரை தமிழ்நாட்டில், தேடிக் கண்டுபிடிக்க முடியாது.
(வள்ளல் அழகப்பர் போன்ற ஒரு சிலர் உண்டு)
(வளரும்)