வாசிங்டன், அக்.8- 2025ம் ஆண்டு அய்டி ஊழியர்களுக்கு பெரும் சிக்கலாக மாறி உள்ளது. பல முன்னணி அய்டி நிறுவனங்கள் தொடர்ந்து தங்களின் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் 2025 ஜனவரி மாதம் முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை 10 மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 80 ஆயிரத்து 94 அய்டி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு வருகையால் இந்த பணி நீக்கம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அய்டி துறையில் பணியாற்றும் ஊழியர்கள் பெரும் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு பொருளாதார மந்தநிலை காரணமாக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதன்பிறகு நிலைமை சரியானது. பணி நீக்கம் இருக்காது என்று ஊழியர்கள் நினைத்தனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. தொடர்ந்து அய்டி நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன. இதில் அதிகபட்சமான பணி நீக்கம் என்றால் பிப்ரவரி மாதம் 16 ஆயிரம் பேரும், ஏப்ரல் மாதம் 23 ஆயிரம் பேர் பணியை இழந்துள்ளனர். மேலும் அமெரிக்க நிறுவனங்கள் தான் அதிகமானவர்களை பணி நீக்கி வருகிறது. இதில் அமேசான், மைக்ரோசாப்ட், ஆரக்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும். இன்டெல் இதுவரை மொத்தம் 33,900 பேரை பணியில் இருந்து வீட்டுக்கு அனுப்பி உள்ளது. மைக்ரோசாப்ட் 19,215 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. இந்த ஆண்டு முதல் 10 மாதத்தில் அமெரிக்க நிறுவனங்கள் 1,19,368 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. இது மொத்த பணி நீக்கத்தில் 66.3 சதவீதம் ஆகும்.
அதேபோல் அய்ரோப்பியாவின் அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அக்சென்சர் அய்டி நிறுவனம் சமீபத்திய 3 மாதத்தில் அக்சென்ச்சர் அய்டி நிறுவனம் 11,000 பேரை பணி நீக்கம் செய்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் ஏஐ ஆகும். அந்த வகையில் பார்த்தால் 2025ல் மொத்தம் 1,80,094 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதில் 50, 184 பேரின் பணியை ஏஐ தான் பறித்துள்ளது. இதனால் ஏஐயின் வருகை அய்டி ஊழியர்களின் பணிகளுக்கு பெரிய ஆப்பு வைக்கிறது என்று Rational Fx சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அய்டி துறையை உன்னிப்பாக கவனித்து வரும் ஆலன் கோஹன் என்பவர் கூறுகையில், ஏஐ பயன்பாடு அதிகரித்தது, பொருளாதார அழுத்தங்கள் உள்ளிட்டவற்றால் 2025ம் ஆண்டில் அய்டி துறையில் ஊழியர்களின் பணி நீக்கம் அதிகரித்துள்ளது. இதனால் இன்டெல், மைக்ரோசாப்ட், டிசிஎஸ், அக்சென்ச்சர் உள்ளிட்ட நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் அய்டி துறையில் உள்ளவர்களுக்கு பணி பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. ஏஐ பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவது 2026ம் ஆண்டிலும் அய்டி ஊழியர்களை அதிகமாக பாதிக்க உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.