பெங்களுரு, அக். 8- “ஜாதிக் கட்டமைப்பு நமது சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. ஜாதிக் கட்டமைப்பை வேரோடு பிடுங்கிட சமூகப் புரட்சியாளர் “பசவண்ணா ஒரு தனி மதத்தினை தொடங்கினார்” என பசவண்ணா பண்பாட்டு பிரச்சாரப் பயணத்தின் நிறைவு நிகழ்ச்சியில் (2025) கருநாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.
பசவண்ணாவின் கொள்கை வழி வாழ்ந்து வரும் லிங்காயத் பிரிவினரின் மடாதிபதிகளின் சங்கம் இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது. ஜாதி கணக்கெடுப்பு நடத்தப்படும் மாநிலச் சூழலில் லிங்காயத் பிரிவினர் இந்துக்கள் அல்ல; தனி மதத்தினர் எனும் பிரச்சாரம், பா.ஜ.க. இந்துத்துவவாதிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜாதி முறையானது இந்து மதத்தின் ஆதாரபலம் என்ற நிலையில் ஜாதி கணக்கெடுப்பு நடைபெறும் பொழுது லிங்காயத் வகுப்பினரை ‘இந்துக்கள்’ என்றே தெரிவிக்கும்படி பா.ஜ.க.வினர் வலியறுத்தி வருகிறார்கள்.
ஆனால் காங்கிரஸ் தரப்பில் லிங்காயத் வகுப்பினை ஒரு தனி மதமாக வகைப்படுத்திட – பசவண்ணாவின் கொளகை பிரகடனப்படி – முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விழாவில் பங்கேற்றுப் பேசிய கருநாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியதாவது:
“சதுர்வர்ண அமைப்பு முறையில் நான் ஒரு சூத்திரன். நான் ஒரு சூத்திரன் என்பதால் கல்வி கற்றிடும் வாய்ப்பும், சமத்துவமாக நடத்தப்படும் முறையும் மறுக்கப்படக் கூடாது. ஜாதி அடையாளத்தை எவரும் பெரிய உயர் நிலைக்கானவர் என்றோ புகழ் பெருமைக்கு உரியார் என்றோ கூற முடியாது. அறிவுத் தேடல் என்பது ஒருவருக்கு மட்டுமான தனிப்பட்ட சொத்தாக முடியாது. கல்வி பயிலும் வாய்ப்பு எவருக்கும் மறுக்கப்படக் கூடாது”
மேலும், ‘கீழான ஜாதியினர்’ என்று விதிக்கப்பட்ட மக்களும், புரட்சியாளர் பசவண்ணாவின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களும்’ ஜாதியற்ற சமுதாயத்தை அமைத்திட ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
வடபுலத்தின் சமதர்ம போராளி ராம் மனோகர் லோகியா கூற்றுப்படி, மக்கள் போராட்டப் பேரணி இரண்டு வகைப்படும். மக்கள் பேரணி என்பதால் அவைகளின் நோக்கமும் ஒன்றானது அல்ல. உயர் ஜாதிக்காரர்கள் உரிமை கோரி போராடினால் அந்தப் போராட்டம் உயர்வு – தாழ்வை நிலைப்படுத்தவே ஜாதிக் கட்டமைப்பை வலுப்படுத்தவே, ஆனால் சமுதாயத்தில் அடித்தள மக்கள் உரிமை வேண்டி பேரணி நடத்தினால் உயர்வு – தாழ்வு நிலைகளை மறுத்து சமத்துவத்துக்கான நோக்கமாகவே இருக்கும். சமத்துவ மனித சமுதாயத்தை அமைத்திட ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும் நிலையினை ஏற்படுத்திட வேண்டும்.
– இவ்வாறு லிங்காயத் மடாதிபதிகளின் சங்கம் ஏற்பாட்டில் பெங்களூருவில் நடைபெற்ற பசவண்ணா பண்பாட்டு பிரச்சார விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் கருநாடக முதலமைச்சர் சித்தராமையா பேசினார்.