கரன்சியில் இருந்து 4 சுழியங்களை நீக்கும் ஈரான்

தெஹ்ரான், அக்.8-  ரியாலின் மதிப்பு ஒரு அமெரிக்க டாலருக்கு, 11,50,000ஆக குறைந்துள்ளதால், சுழியங்களை நீக்க அந்நாடு முடிவு செய்துள்ளது.

மத்தியக் கிழக்கில் மிக முக்கிய நாடுகளில் ஒன்றாக ஈரான் உள்ளது. சுமார் 9 கோடி மக்கள் தொகையுடன் உள்ள ஈரான் பொருளாதாரம் கடந்த சில காலமாகவே மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. அணு குண்டு ஆராய்ச்சி உள்ளிட்ட காரணங்களால் ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் ஏகப்பட்ட பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதனால் ஈரான் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் ஈரானில் விலைவாசியும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. இதனால் ஈரான் மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே பணவீக்கத்தைச் சமாளிக்க ஈரான் நாடாளுமன்றம் முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதாவது ஈரான் அரசு, தங்கள் ரியால் கரன்சியில் இருந்து நான்கு சுழியங்களை நீக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. பன்னாட்டு பொருளாதாரத் தடைகளால் ஈரானின் நாணயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதன் மதிப்பும் கடுமையாகச் சரிந்திருந்தது. இதனால் தினசரி பரிவர்த்தனைகளுக்கே பல லட்சம் ரியால் கொடுக்க வேண்டி இருந்தது. இது தினசரி பரிவர்த்தனைகளைக் கடினமாக மாற்றியது. இதைக் கருத்தில் கொண்டே ஈரான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் லாரிகளுக்கு 25 சதவீத வரி: அடங்காத டிரம்ப்

வாஷிங்டன், அக்.8- அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு நாடுகளின் மீது வரி விதித்து வருகிறார். இந்தியாவுக்கும் 50 சதவீத வரியை விதித்துள்ளார். அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்கள் மீதான வரியையும் அவர் உயர்த்தி வருகிறார். அண்மையில், அவர் சமையலறை மற்றும் கழிவறை உபகரணங்களுக்கு 50 சதவீத வரியும், பர்னிச்சருக்கு 30 சதவீத வரியும் விதித்தார்.

தற்போது, அதே வகையில், லாரி இறக்குமதிக்கும் வரி விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “நவம்பர் 1ஆம் தேதி முதல், பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் அனைத்து நடுத்தர மற்றும் கனரக லாரிகளுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும்,” என டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த புதிய வரி விதிப்பால் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் கனடா மற்றும் மெக்சிகோ அடங்குகின்றன.

‘திராவிட மாடல்’ ஆட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் ‘நான் முதல்வன்’ திட்டத்தால் பயன் பெற்றவர் நன்றி

சென்னை, அக்.8- திராவிட மாடல் ஆட்சியின் நான் முதல்வன் திட்டத்தால் பயன்பெற்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த அர்ச்சனா என்பவர் கூறியிருப்பதாவது:

என் பெயர் அர்ச்சனா. நான் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், வெள்ளக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவள். எனது இளநிலைப் பட்டப்படிப்பை தஞ்சாவூரில் உள்ள குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பயின்றேன்.

நான் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உள்ள SCOUT திட்டத்தின் வாயிலாக அயல்நாட்டிற்கு சென்று பணித்திறன் பெறும் அபூர்வ வாய்ப்பு கிடைத்தது. இது என் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது, ஏனெனில் ஒரு கிராமப்புற மாணவியாக எனக்கு இத்தகைய வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிது.

இந்தத் திட்டத்தின் மூலம் நான் ஜப்பான் நாட்டில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழகத்தின் IN-CBI ஆராய்ச்சி மய்யத்தில் பணித்திறன் பயிற்சி பெற்றேன். குறிப்பாக நுண்அறிவியல் நுட்பங்கள், புற்றுநோய் போன்ற தீராத நோய்களுக்கு எதிரான மருத்துவ முறைகள், மற்றும் எதிர்கால அறிவியல் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் குறித்து அறியும் வாய்ப்பு கிடைத்தது. பேராசிரியர் கணேஷ்பாண்டியன் நமச்சிவாயம் அவர்களின் வழிகாட்டுதலில் பயிற்சி பெற்றது எனக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. மேலும் ஜப்பானியர்களின் கல்விமுறை மற்றும் கலாச்சாரத்தை அனுபவிக்கும் அரிய சந்தர்ப்பமும் கிடைத்தது என்றார்..

11 ஆண்டு கோரிக்கை: குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிக்கிறதா?

புதுடில்லி, அக்.8- ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான ஒன்றிய அறங்காவலர் குழுவின் கூட்டம் வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூ.1,000 லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் தற்போது மாதத்திற்கு ரூ.1,000 ஆக உள்ளது. இந்தத் தொகை 2014ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 11 ஆண்டாக இந்தத் தொகை அப்படியே உள்ளது. தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பல்வேறு சங்கங்கள் நீண்ட காலமாக ஓய்வூதியத் தொகையை உயர்த்தக் கோரி வலியுறுத்தி வருகின்றன. எனவே இந்தக் கூட்டத்தில் ரூ.2,500 ஆக அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *