வாசிங்டன், அக். 7- இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துவதற்கான அமைதி நடவடிக்கையை மேற்கொள்ளா விட்டால் ரத்த ஆறு ஓடும் என டிரம்ப் எச்சரித்தார்.
இரண்டு ஆண்டுகள் நிறைவு
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினரிடையே போர் தொடங்கி இன்றோடு (7.0.2025) 2 ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் சார்பில் 20 அம்ச அமைதி திட்டம் பரிந்துரைக்கப்பட்டது. இதனை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் அமைப்பினரின் முக்கிய தளபதிகள் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தனர். இருப்பினும் அதில் உள்ள ஒரு சில பகுதிகள் குறித்து விரிவாக பேச வேண்டும் என இருதரப்பினர் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டது.
பேச்சுவார்த்தை
20 அம்ச திட்டத்தை ஏற்றுக்கொண்டு சரண் அடைய ஹமாஸ் அமைப்பினருக்கு விதிக்கப்பட்ட 72 மணிநேர கெடு நேற்றுடன் (6.10.2025) முடிவடைந்தது. இதனை தொடர்ந்து நடுநிலை நாடான எகிப்தில் 20 அம்ச திட்டம் குறித்து விரிவாக பேச முடிவெடுக்கப்பட்டது.
எகிப்தின் செங்கடல் அருகே அமைந்துள்ள துறைமுக நகரான ஷர்ம் அல்-ஷேக்கில் உள்ள துறைமுகத்தில் இந்த பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பில் முக்கிய அமைச்சர்கள் மற்றும் ராணுவ தளபதிகள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். அப்போது 20 அம்ச அமைதி திட்டம், பணய கைதிகள் பரிமாற்றம் குறித்து விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.
எச்சரிக்கை
ஏற்கெனவே போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல்-ஹமாஸ் தரப்பில் முதற்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தநிலையில் விரைவில் பேச்சுவார்த்தையை முடித்து கொண்டு முழுமையான போர் நிறுத்தத்தில் ஈடுபட டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர், “முதல் கட்ட பேச்சு வார்த்தை இந்த வாரம் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் அனைவரும் வேகமாக முடிவெடுக்க கேட்டுக்கொள்கிறேன். அமைதி நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால் ரத்த ஆறு ஓடுவதை தடுக்க முடியாது” என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
முன்னதாக காசாவுக்கு கப்பல்கள் மூலமாக மனிதாபிமான உதவிகளை செய்ய வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டதுன்பெர்க் உள்ளிட்ட 470 பேரை இஸ்ரேல் கைது செய்தநிலையில் அவர்கள் சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டனர்.