மதிய உணவுத் திட்டம் கல்விக்கான ஒரு புரட்சிகரமான சமூக நலத் திட்டம். (நீதிக்கட்சி ஆட்சி காலத்தில், சென்னை மாநகராட்சி பள்ளிகள், பின்பு பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டு, எம்.ஜி.ஆர் காலத்தில் விரிவாக்கப்பட்டு, கலைஞர், ஜெயலலிதா என அனைவரது ஆட்சி காலத்திலும் மேம்படுத்தப்பட்டது) இத்திட்டம், பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை தீர்க்கவும், ஏழை மாணவர்கள் பள்ளியில் சேர்ந்து தொடர்ந்து படிக்கச் செய்யவும் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகர முயற்சிகள்.
தற்போது, காலை உணவுத் திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. இந்தத் திட்டங்களின் பயனாக பள்ளிச் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்குச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. பசி தடையாக இல்லாமல் கல்வி உரிமை அனைவருக்கும் கிடைக்க வழிவகுக்கின்றன.
‘‘இத்திட்டங்கள் 50 ஆண்டுகளாக இன்னும் தேவைப் படுவது ஏன்?” என சிலர் (அரசியல்வாதிகள் உட்பட) கேள்விகள் எழுப்புகின்றனர். மேம்போக்காகப் பார்த்தால், இந்த வாதம் சரியானது போல் தோன்றும். ஆனால் இது தவறான வாதம்.
ஏனெனில் மேம்பட்ட நாடுகளில்கூட பள்ளி உணவுத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இவை ஏழ்மை குறித்ததல்ல; சமத்துவம், ஊட்டச்சத்து, ஆரோக்கியம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கானவை.
இத்திட்டங்கள் தேவையில்லையா? ஏழ்மை குறைந் தாலும், சமத்துவம் அடையவில்லை. இத்திட்டங்கள் சமத்துவம் ஏற்படுத்தும் கருவி. உணவுப் பொருட்களின் விலை உயர்வு, நகர ஏழ்மை, இடம்பெயர்ந்த குடும்பங்கள் போன்ற சூழலில், இவை இன்னும் பாதுகாப்புக் கவசம்.
திராவிட முறை ஆட்சி, சமூக நீதி மற்றும் நலன் அரசின் பொறுப்பு என்று கருதுகிறது. மதிய உணவும் காலை உணவுத் திட்டமும் இதற்கான சின்னங்கள்: கல்வி என்பது உரிமை; பசி, ஏழ்மை, ஜாதி போன்ற தடைகள் கல்விக்கு இடையூறு செய்யக் கூடாது என பொறுப்புள்ள அரசாக திராவிட அரசு கருதுகிறது.
இத்திட்டங்களின் பயனாக இன்று தமிழ்நாட்டில் கல்வியில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது; உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களின் விகிதம் (GER) 50%–ஐ தாண்டியுள்ளது (அகில இந்திய சராசரி 26 விழுக்காடு). பெண்கள் கல்வியில் முன்னேற்றம் கண்டுள்ளது.
இந்தத் திட்டங்களை “50 ஆண்டுகளாக இருப்பதால் தோல்வி” என்று கூறுவது தவறான பார்வை. இவை தோல்வியின் அடையாளமல்ல, சமூக நீதி மற்றும் கல்விச் சமத்துவத்தை உறுதி செய்யும் கருவி. உலக நாடுகளிலும் உள்ளது போல, இவை தமிழ்நாட்டில் திராவிட ஆட்சியின் வெற்றிக் குறியீடு.
– கோ. கருணாநிதி
வெளியுறவுச் செயலாளர், திராவிடர் கழகம்