இளமையோடு திரும்பினார்கள்! (1)

5 Min Read

இளமையோடு திரும்பினார்கள்! (1)

திராவிடர் கழகத்தின் சார்பில் செங்கல்பட்டையடுத்த மறைமலை நகரில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – இயக்க வரலாற்றில் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே முத்திரை பொறித்த – என்றும் ஒளி வீசிக் ெகாண்டிருக்கும் ஒரு பெரும் மாநாடு.

1925இல் தந்தை பெரியாரால் தொடங்கப்பட்டது சுயமரியாதை இயக்கம். காங்கிரசிலிருந்து தந்தை பெரியார் வெளியேறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே ‘குடிஅரசு’ என்ற வார இதழைத் தொடங்கி விட்டார் தந்தை பெரியார்.

‘குடிஅரசை’த் (2.5.1925) தொடங்குமுன் மூவரிடம் ஆலோசனை கேட்டார் தந்தை பெரியார். ஒருவர் ஆச்சாரியார் (சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்), மற்ற இருவர்
திரு.வி.க.வும், டாக்டர் வரதராஜலு நாயுடுவும் ஆவர்.

ஆச்சாரியார் தடுத்தார் – மற்ற இருவரும் வாழ்த்துக்கூறி ஆதரவுக் கரம் நீட்டினர். இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

‘குடிஅரசு’ மக்கள் மத்தியில், அதுவரை நாட்டு மக்கள் கேள்விப்படாத – சிந்திக்காத புத்தம் புதிய சிந்தனைக் குருதி ஓட்டத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

தந்தை பெரியார் மாலை நேரங்களில் பொதுக் கூட்டம் என்ற பெயரில் மக்களைச் சந்தித்தார். அதைத்தான்  ‘‘தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார்; அவர் வகுப்புகள் மாலை நேரத்தில் மைதானங்களில் நடைபெறும்!’’ என்று அவ்வளவு நேர்த்தியாக தனக்கே உரித்தான முறையில் அறிஞர் அண்ணா அவர்கள் இலக்கிய மணத்துடன் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

ஒலிப் பெருக்கி இல்லாமலேயே மக்கள் மத்தியில் பல மணி நேரம் பேசுவார்; மிகச் சிறப்பான கூட்டம் என்றால், குறிப்பு: ‘ஒலிப் பெருக்கி வசதியுண்டு!’ என்று துண்டறிக்கையில் குறிப்பிட்டு இருப்பார்கள். (செய்யாறு அருகே உள்ள வாழ்குடையில் நடைபெற்ற திருமணத்தில் அய்ந்தரை மணி நேரமும், மயிலாடுதுறைப் பொதுக் கூட்டத்தில் நாலரை மணி நேரமும் பேசியுள்ளார்).

தொடக்கத்தில் அவர் பேசிய எந்தக் கூட்டத்திலும் கலவரம் இல்லாமல் முடிந்ததில்லை; கல்லடிகள், முட்டையில் ஓட்டை போட்டு, அதில் மலத்தை நிரப்பி வீசி இருக்கிறார்கள்.

கூட்டத்துக்குள் பாம்பை விடுவார்கள்; கழுதை வாலில் வெடியைக் கட்டி, தீ வைத்து கூட்டத்துக்குள் துரத்துவர்கள்; இவற்றை எல்லாம் சந்தித்துச் சந்தித்துதான் தமிழ்நாட்டின் அந்த முதல் பேராசிரியர் மக்கள் மத்தியில் தனது சுயசிந்தனையில் வெடித்துக் கிளம்பிய கருத்துகளைப் பேசிக் கொண்டே இருந்தார். எதிரிகள் வாலாட்டினாலும் அமைதியை நிலை நாட்டியவர் தந்தை பெரியார்.

மல்லுக்கு வந்தவர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள் – மனமாற்றம் பெற ஆரம்பித்தார்கள் – மாநாடுகளை நடத்தத் தொடங்கினார் தந்தை பெரியார்.

அதில் குறிப்பிடத்தக்கதுதான் செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் மாகாண சுயமரியாதை மாநாடு! (1929 பிப்ரவரி 17,18).

அந்த மாநாட்டிற்கு யாருக்கெல்லாம் குறிப்பாக அழைப்பு விடுத்தார் தந்தை பெரியார்!

‘‘தனிப்பட்ட ஸ்திரிகளும், தங்களை விதவைகள் என்றோ, வேசிகள் என்றோ நினைத்துக் கொண்டிருப்ப வர்களும் அவசியம் வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்!’’ என்று அழைப்பு விடுத்தார். (‘குடிஅரசு 13.1.1929).

‘விருதுநகர் நாடார்கள் சமைத்து, அவர்கள் பரிமாறுவார்கள்’ என்ற அறிவிப்பு ஒரு பக்கம்! அந்தக் கால கட்டத்தில் சமுதாய அமைப்பு எப்படி இருந்தது என்பதைக் கண்முன் நிறுத்தும் நிலைக் கண்ணாடி இது!

அந்த மாநாட்டுத் தீர்மானங்கள் இன்று வரை பேசு பொருளாக இருக்கின்றன, பெண்களுக்குச் சொத்துரிமை உட்பட 34 தீர்மானங்களில் பலவும் மாநில, ஒன்றிய அரசுகளால் பிற்காலத்தில் சட்டங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

கடந்த 4ஆம் தேதி செங்கற்பட்டையடுத்த மறைமலை நகரில் திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தத் தீர்மானங்களும் காலத்தின் பசியை ஆற்றக் கூடியவையே.

அரசுகளால் சட்டங்களாக ஆக்கப்படக் கூடியவை என்பதில் அய்யமில்லை.

திராவிடர் கழகத்தின் குடையின்கீழ் மறைமலை நகரே மறைந்தது. தாம்பரத்திலிருந்து இரு மருங்கிலும் கழகக் கொடி காடுகள்  – திராவிடர் கழகத்தின் இரட்டைக் குழல் துப்பாக்கியான தி.மு.க.வின் கொடிகளும் பட்டொளி வீசிப் பறந்தன.

பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளால் மறைமலைநகரே திணறியது, ஆனாலும் அமளியில்லை! பல்வேறு அம்சங்கள் மலர்ந்து குலுங்கும் பூஞ்சோலையாகக் காட்சி அளித்தது.

அஞ்சா நெஞ்சன் அழகிரி நினைவுப் பந்தலில் ‘சுயமரியாதை இயக்கத்தின் சமூகப் புரட்சி’’ என்ற வரலாற்றுக் கண்காட்சி – கண்கொள்ளா காட்சி – எத்தகைய தியாக வரலாறுகளின் கண்காட்சியாக மிளிர்ந்தது அது! ‘திராவிட மாடல்’ அரசின் அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர் மாண்புமிகு தா.மோ. அன்பரசன் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட ‘சுயமரியாதை இயக்கத்தின் சமூகப்புரட்சி கண்காட்சி’ அரங்கில் அடி எடுத்து வைத்த நமது முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு படத்தையும் பார்த்து சிலாகித்தார்.

மாநாட்டுத் தலைவர்  – தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் – பெரியார் சமூகக் காப்பு அணியின் அணி வகுப்பு மாநாட்டை ஏற்றுக் கொண்டு கழகக் கொடியை உயர்த்தினார்.

‘தந்தை பெரியார் வாழ்க!’

‘தமிழர் தலைவர் வாழ்க!’

‘திராவிடம் வெல்க’ என்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன.

தொடர்ந்து மாநாட்டு திறப்பு, தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் வெளியீடு, தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி 12) வெளியீடு, தீர்மான அரங்கம், கருத்தரங்கம், மறைமலை நகரையே குலுக்கிய எழுச்சி மிகு பேரணி ‘‘நூற்றாண்டு காணும் சுயமரியாதை இயக்கம்’’ என்ற பொருளில் நிறைவு விழா.

திராவிடர் கழகத் தலைவர் தலைமை உரை; சமூகநீதிக்கான சரித்திர நாயகர் திராவிட மாடல் அரசின் முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகியோரின் எழுச்சி முரசம்! அப்பப்பா… வார்த்தை சட்டகத்துக்குள் அடக்க முடியாதவை.

கருப்புச் சட்டைக்காரர்கள் – அதிலும் இளைஞர்களின் வருகை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ‘பிற்போக்கு மதவாத சக்திகளை பின்னங்கால்  பிடரியில் அடிபட ஓட்டம் பிடிக்க எழுந்தது காண்’ என்று சொல்லும் வண்ணம் இளைஞர் பட்டாளம்.

முதலமைச்சர் அந்தக் காட்சியைக் கண்டு உடல் சிலிர்த்தார். உள்ளத்தில் உணர்ச்சி அலைகள் பீறிட்டன. கருஞ்சட்டைக்காரர் ஊருக்கு ஒருவர் இருந்தால் ஊரையே வழி நடத்துவார் என்று உணர்ச்சிப் பெருக்குடன் முரசு கொட்டியதுடன் ‘கருஞ்சட்டைத் தோழர்களே! உங்களுக்கு எனது சல்யூட்!’ என்று முதலமைச்சர் அடித்த சல்யூட் மக்கள் திறளை உணர்ச்சியின் உச்சிக்கே கொண்டு சென்றது; கரஒலி அடங்க வெகு நேரம் – உணர்ச்சிமயமான அந்தத் தருணம் என்றைக்கும் நம் நெஞ்சில் நிலைத்து நிற்கும்.

‘தலைகுனிய விட மாட்டேன்!’ என்று முதலமைச்சரின் சங்கநாதமும், கழகத் தலைவரின் ‘அந்த உறுதிக்கு ஆயிரம் முத்தங்கள்!’ என்ற எழுச்சி நெகிழ்ச்சி உரையும் தமிழ் மண்ணில் புதிய வலிமையையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தின.

92 வயது தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் 29 வயது இளைஞராகவும், 72 வயது முதலமைச்சர் 27 வயது இளைஞராகவும் இல்லம் திரும்பினர்.

திரண்டிருந்த மக்களோ புதிய நம்பிக்கையுடன் விடை பெற்றனர்!

மறைமலை நகர் மாநாடு மறைக்கப்படவே முடியாத மாமலையாக என்றும் காட்சி அளிக்கும்!

வாழ்க பெரியார்!

வெல்க திராவிடம்!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *