சென்னை, அக்.6- ‘தந்தையின் கட்டுப் பாட்டில் இருக்கும் குழந் தைகளை, சட்டவிரோத காவலில் இருப்பதாக கூற முடியாது’ எனக் கூறிய உயர் நீதிமன்றம், குழந்தைகளை ஒப்படைக்கக்கோரி தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
குழந்தைகளை ஒப்படைக்கக்கோரி வழக்கு
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த வைத்தியநாதன் – கிருஷ்ணப்பிரியா இணையருக்கு 5½ மற்றும் 4½ வயதில் ஒரு பெண், ஆண் குழந்தை உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்
றனர்.
இந்த நிலையில் வைத்தியநாதன் தனது 2 குழந்தைகளையும் வலுக்கட்டாயமாக தன்னுடன் அழைத்து சென்று விட்டதாகவும், குழந்தைகள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியாததால் குழந்தைகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தன்னிடம் ஒப்படைக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கிருஷ்ணப்பிரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
சட்டவிரோத காவல் அல்ல
இந்த மனுவை நீதிபதி கள் பி.வேல்முருகன், ஜி.அருள்முருகன் ஆகியோர் விசாரித்தனர்.
முடிவில், ‘சட்ட விரோத காவலில் இருந்தால் மட்டுமே ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியும்.இந்த வழக்கை பொறுத்தமட்டில் தந்தையிடம் குழந்தைகள் இருக்கின்றனர். இதனை சட்டவிரோத காவல் என கூற முடியாது’ எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது சம்பந்தமாக உரிய நிவாரணம் கோரி மனுதாரர் கிருஷ்ணப்பிரியா சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.