பேரா. முனைவர்
இரா.செந்தாமரை
முதல்வர் பெரியார்
மருந்தியல் கல்லூரி, திருச்சி
போதைகள் பலவிதம். புகழ் போதை, பதவி போதை, பண போதை, கைப்பேசி போதை என பல போதைகள் சமூகத்தில் இருந்தாலும் தற்பொழுது பொது மக்களிடத்தில் மது மற்றும் புகையிலை பொருட்கள் சார்ந்த போதைகள் அதிகமாகிக்கொண்டிருக்கின்றது. அதிலும் பெரியவர்கள், கல்லூரி மாணவர்கள் என்றில்லாமல் பள்ளியில் படிக்கக்கூடிய இளம் சிறார்கள் மத்தியில் போதை பழக்கம் அதிகமாகியுள்ளது என்பது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியாகும். இதனை ஒழிக்க அரசாங்கம் மட்டும் சட்டம் இயற்றினால் போதாது. பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சமூக சூழ்நிலைகளில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.
எப்படிப்பட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன?
புகைப்பிடித்தல், மது அருந்துதல், வெற்றிலை பாக்குடன் புகையிலை பயன்படுத்துதல், மூக்குப்பொடி உள்ளிட்ட போதைப்பொருட்கள் பொது வாக வழக்கத்திலிருந்த போதைப் பொருட்களாகும். ஆனால் தற்பொழுது பான்பராக், குட்கா, கூல் லிப் என்று சொல்லக்கூடிய நாக்குக்கு அடியில் வைக்கக்கூடிய போதைப்பொருள் அதிகமாகப் பயன் படுத்தப்பட்டு வருகின்றது. ஊசி மூலம் செலுத்தக்கூடியது மார்பின் (Morphine), ஹெராயின் (Heroin) அல்லது டை அசிட்டைல் மார்ஃபின் (diacetyl morphine). இது மார்பினை விட 5 முதல் 10 மடங்கு சக்தி வாய்ந்தது மற்றும் போதைக்கு அடிமையான பலர் இதனை பயன்படுத்துகின்றனர். மெபெரிடின் (Meperidine – Demerol), மெத்தடோன் (Methadone) மற்றும் லெவோர்பனால் (டevorphanol – டevo Dromoran) போன்ற ஓபியாய்டுகள் (Opioids) பயன்படுத்தப்படுகின்றன. இறக்கும் தருவாயிலுள்ள புற்றுநோயாளிகளுக்கு வலியின் வேதனை அறியாமலிருக்க அளிக்கும் வலி நிவாரணி மருந்துகளும் போதையை அளிக்கும். இவை வலியை மட்டும் குறைப்பதில்லாமல் வலியுடன் தொடர்புடைய துன்பம், கவலை, பயம் மற்றும் பீதியையும் குறைப்பதாக இருப்பதால் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. அம்மருந்துகளை போதைக்காக மற்றவர்கள் தவறாக பயன்படுத்துவதும், ஒயிட்னர் (Whitener), நெய்ல் பாலிஷ் (Nail polish) போன்ற ஆல்கஹால் கலந்த பொருட்களை போதைக்காக பயன்படுத்துவதும் வழக்கத்தில் உள்ளது.
ஹெராயின் அல்லது பிற போதைப்பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும், மருந்தை உள்ளிழுப்பதிலிருந்து தோலின் அடிப்பகுதி மற்றும் நரம்பு வழியாக ஊசி மூலம் பயன்படுத்துகின்றனர்.
போதைப்பொருள் எப்படிப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்துகின்றது?
போதைப்பொருட்களின் அதிகப்படி யான அளவு மத்திய நரம்பு மண்டலத்தை கடுமையாக பாதிக்கின்றது. இதன் விளைவாக சுவாசக் கோளாறு நரம்பியல் பிரச்சினைகள் மற்றும் இறுதியில் மரணம் ஏற்படுகின்றது. இது போன்ற போதைப் பொருட்களின் பயன்பாட்டி னால் அதீத மகிழ்ச்சி அல்லது அதீத தளர்வை ஏற்படுத்துவதுடன் எதிலும் கவனம் செலுத்தாமை அல்லது மூர்க்கத்தனமான அணுகுமுறை ஏற்படுகின்றது. மென்மேலும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் பொழுது இன்ப விளைவுகளை உடல் அடைவதாக கருதுகின்றனர். அதனால் இதனை அதிக அளவு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றி படிப்படியாக போதைக்கு அடிமையாகின்றனர். மேலும் போதை மருந்தின் பயன்பாடு நின்றவுடன் அவர் உடல் மற்றும் உளவியல் ரீதியாக பின்னடைவதற்கான வலி அறிகுறிகள் ஏற்படுகின்றது.
ஏன் போதைப் பொருட்களின் மோகம் அதிகமாகியிருக்கின்றது?
இன்று இருக்கக்கூடிய குடும்ப அமைப்பு முறை, பணி சூழ்நிலை, சமூக சூழல் அனைத்தும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. குடும்ப அமைப்பில் கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்ந்தாலே அது கூட்டுக்குடும்பமாக பார்க்கும் அவல நிலை நடந்து கொண்டிருக்கின்றது. பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசக் கூடிய பெற்றோர்கள் மிகவும் குறைந்து விட்டனர். பெற்றோரை விட கைப்பேசி வேண்டியவற்றை தருவதாகவும், இன்பம் அளிப்பதாகவும் பிள்ளைகள் நினைக்கின்றனர். அதுமட்டுமல்ல பள்ளி, கல்லூரிகளில் முன்னாளிலிருந்த ஆசிரியர் மாணவர் உறவு இன்னாளில் சிதைந்திருக்கின்றது. வேலியே பயிரை மேயும் கொடூரங்களும் நடக்கின்றன என்று சொல்வதில் ஒரு கல்வியாளராக மனம் புண்படுகின்றது. வேலைப் பளுவினால் மாணவர்களை எந்நேரமும் உற்றுநோக்கும் அளவிற்கான சூழ்நிலை இல்லாமை, உடலுழைப்பு அதிகம் இருக்கக்கூடிய கட்டடப் பணியாளர்கள், இரவு நேர வாகன ஓட்டுநர்கள் என உடம்பின் அசதி வலி அறியாமலிருக்கவும் அதிக நேரம் கண் விழிக்க வேண்டும் என்பதற்காகவும் இதனை சிலர் பயன்படுத்துகின்றனர். அது மட்டுமல்லாமல் சமூகத்தில் ஏற்பட்டிருக்கின்ற தொழில்நுட்ப மாற்றம் இவையனைத்தும் தான் ஒருவர் போதையின் மோகத்தில் சிக்கித்தவிப்பதற்கு காரணமாக இருக்கின்றது. தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத மனநிலை, எதையும் எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்ற கட்டுக்கடங்காத ஆசை. இவ்வாறு இருக்கக்கூடிய மனநிலையில் முரணான சூழ்நிலை உருவாகும் பொழுது ஏற்படுகின்ற மன அழுத்தம், மன இறுக்கம் போதையின் பிடியில் சிக்க வைக்கின்றது.
எவ்வாறு போதைப் பொருட்கள் பயன்பாட்டை தடுப்பது?
* போதைப் பொருட்களுக்கு எதிரான அரசின் சட்ட திட்டங்களை தீவிரமாக்கல், தண்டனைகளை கடுமையாக்குவது
* பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் அரசின் கூட்டு முயற்சியிருந்தால் நிச்சயம் போதைப்பொருட்களை ஒழிக்க முடியும்
* பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசி னாலே சமுதாயத்தின் அனைத்து பிரச்சி னைகளும் தீர்ந்து விடும். நம்முடைய பிள்ளைகளின் நண்பர்கள், அவர்கள் யாருடன் நெருங்கிப் பழகுகின்ற னர் என்பதையெல்லாம் பெற்றோர்கள் அறிய வேண்டியது மிக அவசியம்.
* ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி முறையில் ஒழுக்கத்தில் சிறு, சிறு மாற்றம் நிகழும்போதே அதனை உற்றுநோக்கி, ஆராய்ந்து அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கவுன்சிலிங் அளிப்பதன் மூலம் ஆரம்பத்திலேயே சரி செய்ய முடியும்.
* தமிழ்நாட்டில் மருத்துவர் பரிந்துரைச்சீட்டு (Prescription) இல்லாமல் வலி நிவாரணிகளை மருந்துக் கடைக்காரர்கள் கொடுப்பதில்லை. வலி நிவாரணிகள் உள்ளிட்ட பிற போதை தரும் மாத்திரைகளை வாங்குவதற்கான மருத்துவர் பரிந்துரைச் சீட்டு 15 நாட்களுக்குள் பெறப்பட்டதாக இருக்க வேண்டும். 15 நாட்களுக்கு பிந்தைய தேதியிட்ட பரிந்துரைச் சீட்டுகளுக்கு அந்த மருந்துகளைக் கொடுக்கக்கூடாது. ஆனால் இதிலும் நிறைய தவறுகள் நடக்கின்றது. மருந்துக்கடைகளில் பணியாற்றுபவர்களிடம் கேட்டு அல்லது தங்களுக்கு பழக்கமான மருந்துக்கடைகளில் ஒரு மாத்திரை அல்லது இரண்டு மாத்திரைகள் என வாங்கிக்கொள்கிறார்கள். இதே போல சில மருந்துக்கடைகளில் ஏறி, இறங்கி வாங்கும்போது மொத்தமாக 10, 20 மாத்திரைகளை எளிதாக வாங்கிவிடுகின்றனர். கடந்த அய்ந்து ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன. ஆனாலும் மொத்த வியாபாரிகளிடம் வேலை பார்க்கும் தற்காலிக பணியாளர்கள் இதுபோன்ற மருந்துகளை வெளியே எடுத்து விற்பனை செய்கிறார்கள். மருந்து தயாரிப்புத் துறையில் இதுபோன்ற போதை தரும் மாத்திரைகளின் ஒவ்வொரு அட்டையிலும் ரேடியோ ஃப்ரீக்வன்சி டேக் (Radio-frequency Tag) இணைத்தால் அந்த மாத்திரை எங்கே போகிறது என்று எளிதாகக் கண்டறிய முடியும்.
* மதுவுக்கு அடிமையாவது போன்றுதான் போதைப் பொருள் அல்லது போதை தரும் மாத்திரைகளுக்கு அடிமையாதல். வலி நிவாரண மருந்துகள் உபயோகிப்பவர்களுக்கு அதுவே ஒரு கட்டத்தில் போதையாக மாறும் ஆபத்தை அதிகம் பார்க்கிறோம்.
சிலருக்கு சின்ன வலிகளைக்கூட பொறுத்துக் கொள்ள முடியாது. உதார ணத்திற்கு சிறிது தூரம் நடந்தாலே கால் வலிக்கிறது என உடனே அதற்கு வலி நிவாரணி எடுத்துக்கொள்வார்கள். ஒரு கட்டத்தில் அந்த உணர்வு நன்றாக இருப்பதாக உணர ஆரம்பித்து தேவையே இல்லாமல் வலி நிவாரணிகள் எடுப்பதைத் தொடர்வார்கள். இதுவும் ஒருவித போதைதான். இதனால் கல்லீரல் வெகுவாக பாதிப்படைகின்றது. இதனை தவிர்க்க வேண்டும்
* மருந்துக்கடைகளில் மருந்தாளு நர்களை மட்டுமே பணியமர்த்துதல்
*மருந்துக்கடைகளுக்கான கண்காணிப்புக் களை மேம்படுத்துதல்
* மருந்து பாதுகாப்பு மற்றும் விநி யோகச் சட்டங்களை கடுமையாக்குதல்
* மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், உளவியலாளர்கள் போன்ற நலவாழ்வுத் தொடர்புடைய நபர்கள் கல்வி நிறுவனங்களின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
* ஏழ்மை, வறுமை, பாரபட்சம், அடிமைத்தனம் போன்ற சமுதாய சிக்கல்களற்ற சூழ்நிலையை உருவாக்குதல்
* போதை ஒழிப்பு தொடர்பான நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துதல்
*ஊடகங்களின் மூலம் பொதுமக்களுக்கு அதிகமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல்
போதை எவற்றில் இருந்தாலும் அது அழிக்கப்பட வேண்டும். ஒழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் மனிதன் சிந்திக்கும் அறிவை பெறுகிறான். அப்படிப்பட்ட பகுத்தறிவை சிதைக்கும் போதையினை ஒழிப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. போதையில்லா சமுதாயம் அமைக்க ஒவ்வொருவரும் உறுதியேற்போம். போதைப்பொருட்களை ஒழிப்போம்.