எத்தனையோ ஆச்சரியங்கள் உண்டு! ஆசிரியர் அவர்கள் மிகப் பெரிய ஆச்சரியம்!
சுயமரியாதை மிக்க சமூகத்தை உருவாக்கிக் காட்டுவோம்!
சுயமரியாதை மிக்க சமூகத்தை உருவாக்கிக் காட்டுவோம்!
மறைமலைநகர், அக். 5– சென்னையை அடுத்த மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் நேற்று (4.10.225) நடைபெற்றது.
இந்த நிறைவு விழா மாநாட்டில் கருத்தரங்க நிறைவில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
மாநாட்டில் அவர் பேசியதாவது, “சுயமரியாதை இயக்கம் என்பதை, தந்தை பெரியாரை உலகம் முழுக்க இருக்கும் இளைஞர்களிடம் இன்றைய காலகட்டம் என்பது கொண்டு போய் சேர்த்துக் கொண்டிருக்கிறது. 100 ஆண்டுகள் ஆயிற்று… ஆனால் ஏன் ஒரு மனிதனை பார்த்து இப்படி பயப்படுகிறார்கள்? அந்த மனிதனின் கருத்துகள் என்ன? அந்த மனிதன் எதற்காக பேசினார்? அந்த இயக்கத்தின் அடிப்படை என்ன?
அந்த இயக்கத்தின் தொண்டர்கள் எதையெல்லாம் சாதித்திருக்கிறார்கள் என்று பார்த்தால்… இன்று தமிழ் நாட்டிலே நடைபெற்றுக்கொண்டிருக்கக் கூடிய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் அடிப்படையே தந்தை பெரியாரின் சுயமரியாதைதான்.
பக்கத்து மாநிலங்கள் தொட்டுவிட முடியாத உயரங்களை, சிகரங்களை நமது மாநிலம் பெரிய புரட்சி இல்லாமல் சிந்தனைப் புரட்சியாலேயே செயல்படுத்திக் கொண்டிருக்கிறது என்றால், அது என்ன என்று புரிந்து கொள்வதற்கு உலகத்தில் இருக்கும் அத்தனை சிந்தனையாளர்களும், இந்த சமூகத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்று படிக்கக் கூடிய வர்களும் நம்மைத் தேடித்தேடி வரக்கூடிய சூழலை உருவாக்கியிருக்கிறோம்.
நம்முடைய முதலமைச்சர் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திலே போய் தந்தை பெரியார் அவர்களுடைய படத்தைத் திறக்கக்கூடிய வாய்ப்பு இந்த நூற்றாண்டிலே நமக்கெல்லாம் கிடைத்திருக்கிறது.
ஏன், ஆர்.எஸ்.எஸ்.சை நாம் எதிர்த்துக் கொண்டிருக்கி றோம். அவர்கள் நம்மையெல்லாம் பார்த்து ‘ஆன்ட்டி நேஷனல்ஸ்’ என்பார்கள்… தேசத்துக்கு எதிரானவர்கள் என்று நம்மைச் சொல்வார்கள். ஏனென்றால் இந்துத்வத்துக்கும், பிஜேபிக்கும் எதிராக பேசினால் தேசத்துக்கு எதிரானவர்கள். ஆனால் முதன் முதலில் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய பிரதமராக இருந்த நேரு அவர்கள் கோல்வால்கருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
தேச விரோதி யார் என்பது
நமக்குத் தெரியும்!
நமக்குத் தெரியும்!
அந்தக் கடிதத்தில், “நீங்கள் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளீர்கள். மதத்தை பயன்படுத்துகிறீர்கள்’ என்று இந்த நாட்டின் பிரதமராக இருந்த நேரு ஆர்.எஸ்.எஸ். பற்றி குறிப்பிடுகிறார். அதனால் முதல் தேசவிரோதி யார் என்பது நமக்குத் தெரியும்.
அவர்கள் தீவிரவாதிகள் என்று சிலரையெல்லாம் குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தீவிரவாதிகள் என்றால் என்னென்ன செய்வார்கள் என்று நமக்குத் தெரியும். முதன் முதலாக நாடாளுமன்றத்தைத் தாக்க முற்பட்டது ஆர்.எஸ்.எஸ்.
ரிசர்வேஷன் கொண்டு வரவேண்டும் என்று ஒரு கருத்து சொல்லப்படு கிறது. உடனே அதை எதிர்த்து ஒரு ஆர்ப்பாட்டத்திலே ஈடுபடக் கூடிய அவர்கள், அங்கே நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு தாக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தை நோக்கி செல்கிறார்கள். அதனால், இந்தத் தீவிரவாதம், நாடாளுமன்றத்தை தாக்குவது என்பதெல்லாம் அன்று தொடங்கி இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று நாடாளுமன்றமே செயல்படுவதில்லை.
நாடாளுமன்றத்துக்கு பிரதமர் வருவதே கிடையாது. வாரத்துக்கு ஒரு நாள் அய்ந்து நிமிடம் வருவார். அல்லது அவர் பேச வேண்டுமென்றால் வருவார். மற்ற நாட்களிலே நாடாளுமன்றத்தைப் பற்றி அவருக்கு அக்கறை இல்லை. கேள்வி நேரத்தில் பிரதமர்கள் பதில் சொல்லியெல்லாம் நான் கேட்டிருக்கிறேன். ஆனால், இப்போதைய பிரதமரை நாடாளுமன்றத்திலேயே பார்க்க முடிவதில்லை. அப்படி நாடாளுமன்றத்தின் மீது அக்கறை கொண்டிருக்கும் ஆட்சிதான் இப்போது ஒன்றியத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
அவர்கள் எந்த காலத்திலும் நாடாளுமன்றத்தை நம்பியதில்லை. ஜனநாயகத்தில் அவர்களுக்கு அக்கறை இல்லை. அதனால்தான் நம்முடைய அரசியல் சாசனத்திலே இருக்கும் இரு முக்கியமான அம்சங்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்படக்கூடியவர்கள் அவர்கள்.
‘சயின்டிபிக் டெம்பர்’ எனப்படும் அறிவியல் பூர்வமாகச் சிந்திக்க வேண்டும் என்பது நம்முடைய அரசியல் அமைப்பில் அடிப்படையாக இருக்கக் கூடிய ஒரு விசயம். அறிவியல் பூர்வமாக சிந்திப்பது என்றால் அவர்களுக்கு என்னவென்று தெரியுமா? பிரதமர் என்னவெல்லாம் பேசியிருக்கிறார் என்று நாம் பார்த்திருக்கிறோம்.
பிளாஸ்டிக் சர்ஜரி புராண காலத்திலேயே நடந்திருக் கிறது என்று சொன்ன ஒரு பிரதமர் இருக்கக் கூடிய பெருமை இந்தியாவுக்குத்தான் உண்டு. இப்போது ஒரு மேனாள் அமைச்சர் கண்டுபிடித்து சொல்லியிருக்கிறார். நிலாவுக்கு முதன் முதலில் சென்றது யார் என்று.
நிலாவுக்கு முதன் முதலில் போனது யார் என்று மாணவர்களுக்கு கூட தெரியும். ஆனால் அனுராக் தாகூர் என்ற முன்னாள் அமைச்சர், இப்போது கூட அவரை கரூருக்கு அனுப்பியிருந்தார்கள். அவர் சிந்தித்து சொல்லியிருக்கிறார். மாணவர்களைப் பார்த்து நிலாவுக்கு போனது யார் என்று கேட்டுவிட்டு, அனுமான் என்று சொல்லியிருக்கிறார்.
நல்லவேளை அவருக்கு சின்ன வயதில், நிலாவில் வடை சுட்ட பாட்டி கதையை சொல்லி வளர்க்க வில்லை. அதை கேட்டிருந்தால், நிலாவுக்கு முதலில் போனது அந்த பாட்டிதான் என்று சொன்னாலும் சொல்லியிருப்பார்.
இன்று நாடாளுமன்றத்திலேயே ஒருவர் பேசுகிறார்… அவர் பெரிய பதவியில் இருந்தவர். அவரை நான் சொல்ல விரும்பவில்லை. இப்போது அவர் நாடாளு மன்ற உறுப்பினராக இருக்கிறார். அவர் பேசும்போது, ‘மனிதர்கள் குரங்கில் இருந்து வந்தார்கள் என்று சொல்கிறார்கள். அதெல்லாம் தவறு… நாமெல்லாம் ரிஷிகளிடம் இருந்துதான் வந்தோம்’ என்று அவர் கூறுகிறார்.
அடுத்து நான் பேசும்போது சொன்னேன்… ‘நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நாங்கள் ரிஷிகளில் இருந்து வரவில்லை. எங்களை எல்லாம் கணக்கிலேயே சேர்த்துக் கொள்ளாதீர்கள். நாங்கள் குரங்கில் இருந்துதான் வந்தோம்’ என்று பதில் சொன்னேன்.
இவர்கள் கையில்தான் நாடு சிக்கியிருக்கிறது!
ஆக, இந்த அளவுக்கு அறிவியல் பூர்வமான அடிப்படை அறிவை வளர்க்கக் கூடிய இயக்கம்தான் ஆர்.எஸ்.எஸ்.
இவர்கள் கையில்தான் இன்று நாடு சிக்கியிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அடுத்து, அரசியல் சாசனம் கொடுத்துள்ள இன்னொரு முக்கியமான அம்சம்… என்னுடைய மதத்தைத் தேர்ந்தெடுக்க, வழிபட அதன் படி வாழ கொடுத்துள்ள அடிப்படை உரிமை.
இதைத் தகர்க்கக் கூடிய இயக்கம்தான் ஆர்.எஸ்.எஸ். எல்லாரும் இந்துவாக இருக்க வேண்டும், இந்த நாடே இந்துத்வ நாடாக இருக்க வேண்டும். பன்முகத் தன்மை என்று சொல்லக்கூடிய ஒவ்வொரு இனக்குழுவுக்கும் இருக்கக் கூடிய நம்பிக்கைகள், ஒவ்வொரு மாநில மக்களுக்கும் இருக்கக் கூடிய வாழ்க்கை முறைகள் அத்தனையையும் மாற்றி இவர்கள் சொல்லக் கூடிய ஒரு வாழ்க்கை முறை.
நீ, இந்துவாகக் கூட இருக்கலாம். அசாமில் இருக்கக் கூடிய ஒரு இந்துவின் வாழ்க்கை முறை., கேரளாவில் இருக்கும் ஒரு இந்துவின் வாழ்க்கை முறையில் இருந்து வேறுபட்டதாகத்தான் இருக்கிறது.
ஆனால் அதையும் உடைத்து எறிந்துவிட்டு, இரண்டு பேரும் ஒரே வழியில்தான் வழிபட வேண்டும், ஒரே முறையில்தான் வழிபட வேண்டும் என்று எல்லாருடைய அடையாளத்தையும் அடித்து நொறுக்கிவிட வேண்டும் என்று நினைக்கக் கூடிய இயக்கம்தான் ஆர். எஸ்.எஸ்.
இவை எல்லாவற்றையும் தாண்டி அவர்களின் அடிப்படை நோக்கம் என்னவென்றால், ஒரு காலகட்டத் தில் இருந்தது போல ஜாதிக் கட்டுமான முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதுதான்.
தலையில் இருந்து பிறந்தவர்கள் தலையில் இருந்து பிறந்தவர்களாகவே இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும் என்பதுதான்.
நாம் என்ன சொல்கிறோம்., யாரும் தலையில் இருந்தும் பிறக்கவில்லை, யாரும் காலில் இருந்தும் பிறக்கவில்லை… நாம் எல்லாருமே தாயிடம் இருந்துதான் பிறந்திருக்கிறோம் என்பதுதான் திராவிட இயக்கம் தந்தை பெரியார் கூறுவது.
உலகத்தில் எந்தத் தலைவராவது சொல்லியிருக் கிறாரா? ‘நான் சொல்வதை அப்படியே கேட்க வேண்டும் என்று அவசியம் இல்லை. உன் அறிவுக்கு எது சரியென்று படுகிறதோ அதையே ஏற்றுக் கொள்’ என்று சொல்லக் கூடிய தன்னம்பிக்கை இருக்கக் கூடிய தலைவரை வேறு எங்காவது பார்த்திருக்கிறீர்களா?
சுயமரியாதையுடன் இருக்கக்கூடிய சமூகத்தை உருவாக்க வேண்டும்!
ஏனென்றால் தந்தை பெரியார் அவர்கள், ஓர் அளவுக்குள் நம்மை அடைத்துவிட வேண்டும் என்று நினைக்காத தலைவர். என்னைத் தாண்டி நீ வளர வேண்டும், என்னுடைய சிந்தனைகளைத் தாண்டி அடுத்தடுத்த கட்டத்துக்கு மனிதர்கள் சிந்தித்து உயர வேண்டும் என்று நினைத்த தலைவர் தந்தை பெரியார்.
அந்த பெரியாரின் கருத்துகளை தான் நம்முடைய ஆசிரியர் அவர்கள் ஓயாமல் பரப்பிக் கொண்டிருக்கிறார். நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது… ஒரு வாரம் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார், ஒரு வாரம் சிங்கப்பூரில் இருக்கிறார், ஒரு வாரம் தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் இருக்கிறார்… இதோ இப்போது மாநாடு… தொடர்ந்து எழுத்துப் பணிகள், எப்படி ஒரு மனிதரால் இப்படி உழைக்க முடிகிறது… உங்களைப் பார்க்கும்போதுதான் தந்தை பெரியார் அவர்கள் எப்படி உழைத்திருப்பார் என்று உணர்ந்துகொள்ள முடிகிறது.
எத்தனையோ ஆச்சரியங்களைப் பற்றி சொல் கிறார்கள். நம்முடைய ஆசிரியர் அவர்களே மிகப்பெரிய ஆச்சரியம்தான். ஏனென்றால் தான் கொண்டிருக்கக் கூடிய கொள்கையை ஒவ்வொருவரிடமும் சேர்த்துவிட வேண்டும் என்ற உறுதி… மனிதர்களை மனிதர்களாக வாழ விட வேண்டும் சுய மரியாதையுடன் இருக்கக் கூடிய சமூகத்தை உருவாக்கிவிட வேண்டும் என்ற உறுதி.
நாம் தொடர்ந்து உழைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இன்னமும் ஜாதியின் பெயரால் கொலைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
இன்னும் சில கோயில்களுக்குள் எல்லா ஜாதிக்காரர் களும் சென்று விடலாம் என்ற நிலைமை வரவில்லை. நாம் போவதில்லை. ஆனால்… போகணும் என நினைக்கிறவர்களுக்காக போராடிக் கொண்டிருப்ப வர்கள் நாம்.
அதைத் தாண்டி இன்னும் சில தெருக்களில் குறிப்பிட்டவர்கள் நடந்து போனால் ஏற்றுக் கொள்ள முடியாத சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோம். இதில் மறுபடியும் நம்மிடம் ஜாதிப் பெருமையை திணிக்கக் கூடிய வேலைகளையும் நிறைய பேர் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சமுதாயத்திலே நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும், தொடர்ந்து பாடுபட வேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
நாம் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விட்டோமா என்றால் இல்லை. மிகப்பெரிய மாற்றங்களை இந்த சமூகத்தில் திராவிட இயக்கம் உருவாக்கியிருக்கிறது, நம்முடைய கருத்துகள் உருவாக்கியிருக்கின்றன. ஆனால், இன்னும் போக வேண்டிய தூரத்துக்கு போய்விட்டோமா என்றால் இல்லை.
பெரியாருடைய கனவு, பெண்கள் படித்துவிட்டு வேலைக்கு போக வேண்டும் என்பது. யாரையும் நம்பி நீ வாழக் கூடாது என்று சொன்னவர்தான் பெரியார். இன்று இந்தியாவிலேயே 42% வேலைக்கு செல்லக் கூடிய பெண்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள். அந்த உயர்வை பெற்றிருக்கக் கூடிய மாநிலம் தமிழ்நாடு.
அதேநேரம் மூடநம்பிக்கை என்பது நமது தாத்தா, அப்பா, அம்மா நம்பியதை நாமும் நம்புவது மட்டுமே மூடநம்பிக்கை இல்லை. நாமாக உருவாக்கிக் கொண்ட மூட நம்பிக்கைகளும் நிறைய இருக்கின்றன. ஒருவரை நம்பி அவர் யார் என்ன, அவர்களால் இதை செய்ய முடியுமா இல்லையா? என்னுடைய மாநிலத்தை யாரால் ஆட்சி செய்ய முடியும், அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது… எதைப் பற்றியும் கவலைப்படாமல் பிம்பங்களை நிஜம் என்று நம்பி இங்கே ஓடுவதும் மூடநம்பிக்கைதான் என்பதை நாம் உணர வேண்டும்.
பிம்பங்கள் என்றும் நிஜம் ஆகாது. எனக்கென என்ன கருத்து இருக்கிறது. எனக்கென என்ன நம்பிக்கை இருக்கிறது. நான் உங்களிடம் ஒரு விசயத்தை சொல்கிறேன் என்றால் அதை எப்படி நான் செய்வேன், அதற்கான பாதை, அதை அடைவது பற்றிய புரிதல் எனக்கு இருக்கிறதா என சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இதை உணர்ந்தவர்கள்தான் மூட நம்பிக்கை இல்லாதவர்கள்.
அவர் சொல்லிவிட்டார்… செஞ்சிடுவார்… அவர் வந்துட்டாரு… எல்லாமே மாறிடும் என்று நினைப்பதும் மூட நம்பிக்கைதான். அதனால் கற்பிக்கப்பட்ட மூட நம்பிக்கைகளைத் தாண்டி, நாம் கற்பித்துக் கொள்ளக் கூடிய மூட நம்பிக்கைகளையும் கடக்க வேண்டிய கடப்பாடு நமக்கு இருக்கிறது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
சோசியல் மீடியாவை எடுத்துக் கொள்ளுங்கள்… ஒவ்வொரு நாளும் நமக்கு தவறான செய்திகளை சொல்லிக் கொண்டே இருக்கிறது. அதிலிருந்து மீள… அது சரியா, இல்லையா… உண்மையா என்று புரிந்துகொள்வதில் கூட நமக்கு தந்தை பெரியார் அவர்கள் தேவைப்படுகிறார்.
ஒரு திரைப்படமாக இருக்கட்டும்… சோசியல் மீடியாவாக இருக்கட்டும், அது ஒவ்வொரு நாளும் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் செய்திகளில் எது உண்மை, எது இல்லை என்று சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். எப்போதோ நடந்த ஒரு விஷயம் இருக்கும். அதற்கு புது பூச்சு போட்டு, புது கதை கட்டி ஜோடித்து நம்மிடம் எப்படி அதை சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அப்படி அதை சேர்ப்பார்கள்.
இது முகலாய பேரரசர்களில் இருந்து ஆரம்பித்து தலைவர் கலைஞர் பற்றிய பொய்க் கதைகள் வரை தொடர்கிறது. ஒன்றே ஒன்றைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.
தலைவர் கலைஞர் அவர்கள் அவரைப் பற்றி தொடர்ந்து சொல்லப்பட்ட பரப்புரைகள் என்ன? அவரைப் பற்றிய தவறான கட்டமைப்பை உருவாக்க யாரெல்லாம் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்று தெரியும். காரணம், அவர் தந்தை பெரியாரின் கொள்கை வழியே வந்தவர்.
அதைத் தாண்டி எந்த சமூகத்தில் பிறந்த ஒரு மனிதன் எந்த இடத்துக்கு வரக் கூடாது என்று அவர்கள் நினைத்தார்களோ, ஆசைப்பட்டார்களோ… அந்த இடத்துக்கு அனைத்தையும் உடைத்து விட்டு வந்து சேர்ந்த ஒரு மனிதர்.
அவர் மீது எந்த வழக்கும் இல்லை… எதுவும் நிரூபிக்கப்பட வில்லை. அப்பழுக்கே இல்லாமல் ஆட்சி செய்த மனிதர் தலைவர் கலைஞர். ஆனால் அவரைப் பற்றி குறை சொல்வார்கள்.
ஆனால் அதேநேரம்… இந்தப் பக்கம் பார்த்தீர்கள் என்றால்… யார் அந்த இடத்துக்கு வந்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறார்களோ அவர்கள் அந்த பதவியிலே இருந்தார்கள். அவர்கள் தண்டிக்கப் பட்டார்கள். ஆனால், இன்றும் அவர்களுக்காக வக்காலத்து வாங்கி. அவர்களை துடைத்துத் துடைத்துத் துடைத்துத் துலங்கச் செய்யும் ஒரு சமூகத்தை நாம் பார்த்து வருகிறோம்.
அதனால் யார் எந்த இடத்துக்கு வரவேண்டும் என்று அவர்கள் மனதில் ஒரு கோடு இருக்கிறது. அந்த கோட்டை உடைப்பதுதான் திராவிட இயக்கம். நீ என்ன பண்ணினாலும் அதை உடைப்போம் இந்த சமூகத்தை மாற்றி அமைப்போம், தந்தை பெரியாரின் உலகத்தை வரும் தலைமுறைக்கு நிச்சயமாக நாங்கள் உருவாக்கிக் காட்டுவோம்.
இவ்வாறு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி உரையாற்றினார்.