‘பேராசைக்காரனடா பார்ப்பான்!’ என்ற சொல் அறிஞர் அண்ணா தீட்டிய ‘ஆரிய மாயை’ என்ற நூலில் காணப்படும் அரிய சொல்லாடல் ஆகும்.
ஏதோ குறைகூற வேண்டும், இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டதல்ல இந்த வாசகம்!
இந்தச் சொல்லைப் பார்ப்பனப் – பாரதியாரும்கூட ‘பேராசைக்காரனடா பார்ப்பான் – பெரிய துரை என்றால் உடல் வேர்ப்பான்!’ என்று சொன்னதுண்டே! இதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும் என்றாலும் இப்பொழுது வெளிவந்த இரண்டு தகவல்களைக் கூறலாம்.
மும்பையில் உள்ள ஒரு கோவிலுக்கு ஒன்றிய இணை அமைச்சர் நாராயண் ரானே சென்றபோது அர்ச்சகர் ஒருவர் அவர் வழங்கிய ரூபாய் 25,000 பணக்கட்டை நொடிப்பொழுதில் மறைத்து, மற்ற அர்ச்சகர்களுக்குப் பங்கு கொடுக்காமல் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவிலுக்கு வந்திருந்த அமைச்சர் நாராயண் ரானே, பூஜை முடிந்ததும் காணிக்கையாக ரூ.25,000 மதிப்பிலான பணக்கட்டை ஒரு தட்டில் வைத்தார். அடுத்த விநாடியே அங்கிருந்த அர்ச்சகர் ஒருவர், அந்தப் பணத்தை எடுத்துத் தனது வேட்டிக்குள் மறைத்துக்கொண்டார்
அமைச்சர் சென்ற பிறகு, அந்தப் பணத்தில் பங்கு கேட்டு மற்ற அர்ச்சகர்கள் அவரிடம் சண்டையிட்டனர். பங்கு கொடுக்க மறுத்த அந்த அர்ச்சகர், உடனடியாக மோட்டார் சைக்கிளில் ஏறி வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மற்ற அர்ச்சகர்கள் அவரைப் பார்த்துச் சாபம் விட்டவாறே மீண்டும் கோவில் பூஜைகளுக்குத் திரும்பினர்.
அர்ச்சகர்களிடையே காணிக்கைப் பணம் காரணமாக நடந்த இந்த சண்டை, அர்ச்சகர் ஒருவரின் தந்திரமான செயல்பாடு பற்றி பலரால் பேசு பொருளானது.
தமிழ் திரைப்படத்தின் ஒரு காட்சியில் பெண்பார்க்கும் படலத்தின் போது ‘வாம்மா மின்னல்’ என்று கூறி பெண்ணை அழைக்கும் போது பெண் நடிகை வினாடியில் வந்து சென்று விடுவார்; அது போல் இங்கும் ரூபாய் கட்டை வைத்த சில நொடிகளில் எடுத்த வைத்துக் கொண்டது அந்தக் காட்சியைத்தான் நினைவுபடுத்துகிறது.
lll
திருப்பதி கோயில் உண்டியல் பணத்தில் ரூ.100 கோடி திருடப்பட்டது தொடர்பான காணொலி வெளியாகியுள்ளது. இந்த வழக்கை ஆந்திரா உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து சி.பி.அய்.யிடம் ஒப்படைத்துள்ளது.
ஏழுமலையான் கோவிலில் உண்டியல் பணம் எண்ணும் இடமான ‘பரகாமணி’யில் தேவஸ்தான ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், தன்னார்வலர்கள் (ஆண்கள் மட்டும்) உண்டியல் பணத்தை எண்ணுவது வழக்கம். மேனாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ஆட்சியின்போது, தேவஸ்தான ஊழியர் ரவிக்குமார் என்பவர், உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் வெளிநாட்டு கரன்சிகளைத் திருடி வந்துள்ளார். உண்டியல் பணத்தை எண்ணும்போது அடிக்கடி கழிப்பறைக்குச் சென்ற அவர், வெளிநாட்டுக் கரன்சிகளை பிளாஸ்டிக் கவரில் வைத்து ஆசன வாயிலில் திணித்து திருடி வந்துள்ளார்.
ஒருநாள் கண்காணிப்புக் கருவி உதவியுடன் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் அவரை கையும் களவுமாகப் பிடித்து, காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, சுமார் ரூ.100 கோடி வரை வெளிநாட்டுக் கரன்சிகளை அவர் திருடியது தெரியவந்தது. திருடிய பணத்தில் திருப்பதியில் வீடு, நிலம் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு திருப்பதி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு திடீரென லோக் அதாலத் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு திருப்பதி தேவஸ்தானமும், ஊழியர் ரவிக்குமாரும் சமரசம் செய்து கொண்டனர். திருடிய பணத்தில் வாங்கிய சொத்துகளை மீண்டும் தேவஸ்தானத்துக்கே வழங்க ரவிக்குமார் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, வழக்கை லோக் அதாலத் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், ரவிக்குமார் ரூ.100 கோடி அளவுக்கான சொத்துகளை தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கவில்லை. அப்போதைய அறங்காவலர் குழுத் தலைவர் கருணாகர் மற்றும் நிர்வாக அதிகாரி தர்மா ஆகியோர் ரவிக்குமாரிடம் இருந்து சில சொத்துகளை தங்களது பினாமிகளின் பெயர்களுக்கு எழுதி வாங்கிக் கொண்டதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் பணம் திருட்டு தொடர்பான காணொலி ஒன்று சமூகவலைதளத்தில் வெளியானது. அதில் திருமலையில் பணம் எண்ணும் இடத்தில் ஊழியர் ரவிக்குமார் யாருக்கும் தெரியாமல் வெளிநாட்டுக் கரன்சிகளை தனது கால் சட்டைப் பையில் மறைத்து வைக்கும் காட்சி அந்த காணொலியில் இடம்பெற்றிருந்தது.
கடவுள் எங்கும் நிறைந்தவர், சர்வசக்தி வாய்ந்தவர் என்றெல்லாம் சொல்வதில் ஒன்றும் குறைச்சல் இல்லை.
ஆனால் நடப்பது என்ன? அந்தக் கடவுள் முன்தான் இந்தத் திருட்டுகளும், கொள்ளைகளும் நடக்கின்றன.
கடவுள் என்ன செய்தார்? திருடிய பார்ப்பானின் கண்களையா குத்தினார், கையுங் களவுமாகவா பிடித்தார்?
ஒரு பொம்மையை வைத்து, சுரண்டலை ஒரு தொழிலாக மாற்றி பிறவி முதலாளியாக பார்ப்பான் வாழ்ந்து கொண்டிருக் கிறானே.
நிதி அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் ஒரு கோவிலுக்குச் சென்ற போது என்ன சொன்னார்?
‘‘பணத்தை உண்டியலில் போட வேண்டாம் – அய்யரின் அர்ச்சனைத் தட்டில் போடுங்கோ’’ என்றுதானே சொன்னார்.
இப்பொழுது நினையுங்கள் பார்ப்பனர் குறித்துத் தந்தை பெரியார் கணிப்புப்பற்றி?