கேள்வி 1: தங்கள் தலைமையில் செங்கற்பட்டு மறைமலைநகரில் நடைபெறும் (4.10.2025) சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு தற்கால – வரும் காலங்களில் உருவாக்கும் விளைவுகள் என்று எவற்றைக் கூறுகிறீர்கள்?
– சீ. இலட்சுமிபதி, தாம்பரம்.
பதில்: மிகப்பெரிய உலகத் தொற்று நோயாக, ஜாதி – வருணாசிரம தர்மத்தின் ஏற்றுமதித் தொற்றாக, உலக நாடுகளில் புலம்பெயர்ந்து நல்வாழ்வு வாழும் நம்மக்களையும்கூட கீழமை பேதம் அடையச் செய்யும் ஜாதி வெறியை நீக்கும் போராட்ட வெற்றியாகவும், மானிடப் பரப்பின் சுயமரியாதைக்கு மங்கா புகழ் பெற்று ‘பெரியார் உலக மயமாவதற்கும்’ – ‘உலகம் பெரியார் மயமாவதற்கும்’ உரிய விளைச்சல்களைத் தருவது உறுதி!
நாம் பல ஆண்டுகளுக்கு முன் கூறிய 21ஆம் நூற்றாண்டு – பெரியார் நூற்றாண்டு என்பதற்கும், இனிவரும் நூற்றாண்டுகள் ‘பெரியார் என்ற இலட்சிய தாவர நூற்றாண்டுகளாக’ மாறும் வளர்ச்சிக்கும் உரமாகும்.
கேள்வி -2: கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவத்தில் பாஜக செய்து வருகின்ற சதியை முறியடிக்க காங்கிரஸ் தலையீடு அவசியம் என, வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தி இருப்பதற்கு காரணம் என்ன?
– இ. தனசேகரன், அரூர்.
பதில்: அகில இந்திய அளவில் பா.ஜ.க. திட்டமிட்டே தி.மு.க. அரசுக்கு எதிராக இருப்பதால் ஓர் அகில இந்திய கட்சியும் தன் பங்கைச் செலுத்தட்டும் என்ற நல்லெண்ண அடிப்படையே இக்கருத்து.
கேள்வி -3: ஒரு கட்சித் தலைவர் ஆறுதல்கூட சொல்லாமல் தனது பாதுகாப்பை மட்டுமே நினைத்து பயந்து சென்றதை இதுவரை வரலாறு பார்த்ததில்லை என்று கூறப்படுவது சரியா?
– ஜெ. பாபு ஜெனார்த்தனன், பொத்தேரி.
பதில்: ‘கைப்புண்ணுக்குக் கண்ணாடியா தேவை’ என்பது பழைய பழமொழி. பரந்த வெளிச்சத்திற்கு விளக்கொளியா ேதவை?
கேள்வி -4: முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிகளும் இருப்பதாக நம்பப்படும் இந்த பாரதப் ‘புண்ணிய’ பூமியில், அவர்கள் கரூர் துயரச் சம்பவத்தை தடுத்து நிறுத்த முன்வராதது பற்றி பக்தர்கள் சிந்திப்பதில்லையே – ஏன்?
– முனியம்மாள் சீதாபதி, வெங்கோடு.
பதில்: ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. வைதிக பக்த சிரோன்மணிகள் யாரையாவது அனுப்பி அறிந்து வரச்சொல்லுங்கள்!
கேள்வி -5: டில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பன்னாட்டு மய்யத்தில் நடைபெற்ற (அக்.1) ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை வெளியிட்டு, இந்திய இறையாண்மைக்கும், மதச்சார்பின்மைக்கும் எதிரான செயலைச் செய்யலாமா?
– வெ. மகாராணி, காஞ்சிபுரம்.
பதில்: அப்பட்டமான அரசியலமைப்புச் சட்ட விரோத, மதச்சார்பற்ற கொள்கையை எடுத்தெறிந்த, ஹிந்துத்துவ ராஷ்டிர பிரகடன வெறியின் வெளிப்பாடே! வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அரசியலமைப்புச் சட்ட பொறுப்பாளர்கள் கண்டனத்திற்கும் நியாயமானத் தேவையுள்ளது!
கேள்வி -6: திருப்பதி கோவிலில் பெண்கள் டிரம்ஸ் வாசிக்க இந்தக் காலத்திலும் எதிர்ப்பாமே?
க.கார்த்திகேயன், ஆண்டிமடம்
பதில்: மின்சாரம், எலெக்ட்ரிக் ைலட், கூட்டத்தைக் கட்டுப்படுத்த இஸ்ரோவிடம் உதவி வேண்டல், உண்டியலைப் பாதுகாக்க துப்பாக்கிக் காவலர்கள், கருவறை உள்ளிட்டு கோயிலில் ஏர்கண்டிஷன் வசதி, லட்டு தயாரிக்க இயந்திரம், பணம் எண்ணிக்கைக்கு இயந்திரம் – இவற்றையெல்லாம் பயன்படுத்த தெரியுமாம்.ஸநாதனத்தில் இவை
களுக்கு மட்டும் அனுமதி உண்டா என்ன? பெண்கள் டிரம்ஸ் இசைக்கக் கூடாதாம். என்னே இரட்டை நாக்கு, இரட்டை வேடம்!
கேள்வி -7: ‘ராஷ்ட்ரநீதி’ என்ற புதிய கல்வித் திட்டத்தின் கீழ், டில்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய பாடங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக டில்லி அரசு அறிவித்துள்ளது குறித்து?
ஆனந்தி, ஆவடி
பதில்: அந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் யார்? சிறையில் செக்கிழுத்துப் பொருளாதாரம் இழந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. போன்றவர்களா? மர்ம மரணம் – தீனதயாள் உபாத்தியாயா யார்? ஹெக்டேவர், கோல்வால்கர் பற்றியும் கேட்டுப்பாருங்கள். பீறிட்டு வரும் ‘24 கேரட்’ தேசப்பக்தர்கள்!
கேள்வி -8: காந்தியின் வழியைப் பின்பற்றுவோம் என்கிறாரே பிரதமர்மோடி?
சத்தியமூர்த்தி, நாமக்கல்.
பதில்: ‘நரி சைவமான கதை’ இது!
கேள்வி -9: உலகின் மிக உயரமான பாலம் சீன நாட்டில் திறக்கப்பட்டு இரண்டு மணி நேரப் பயணம், இனிமேல் அது வெறும் இரண்டு நிமிடங்களாகக் குறைந்திருப்பது போன்று அறிவியல் தொழில்நுட்ப சாதனைகள் இந்தியாவில் இல்லையே – ஏன்?
– எஸ். எல்லம்மாள், சுங்குவார்சத்திரம்.
பதில்: முப்பத்து முக்கோடி தேவர்கள் போன்று வேத விற்பன்னர்கள் புராணத்தில் புதிது புதிதாக எதையாவது கண்டுபிடித்துக் கொடுப்பார்கள்!
கேள்வி -10: ‘கத்தாரைத் தாக்கினால் அமெரிக்கா தக்க பதிலடியைத் தரும்! ’ என்று இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்து – அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்போது தடாலடியாக மாறியது ஏன்?
– சீதாலட்சுமி, திண்டிவனம்.
பதில்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பெரும் நிலைப்பாடுகளை ஞானக்கண்களால் பார்த்து விளக்கப்படுத்த முடியாது. ‘ஊனக்கண்’களால் பார்த்துதான் அந்த நோபல் பரிசு வேட்டையாளரின் விஷயங்களைப்பற்றி எளிதில் மதிப்பிட முடியும்.