நாணயமில்லா நாணயங்கள்! ஒரு நாள் அரசனின் நாணயமும் ஆர்.எஸ்.எஸ் 100 நாணயமும்-புதூரான்

3 Min Read

பழங்காலக் கதை இது. முகலாயப் பேரரசு இந்தியாவில் இன்னும் காலூன்றாத காலகட்டம். பாபர், 1526-ல் பானிபட் போரில் வென்றாலும், நான்கு ஆண்டுகளிலேயே காலமானார்.

அவர் மகன் ஹுமாயூன் டில்லி அரியணை ஏறினார். ஆனால், அவருடைய சிறிய சாம்ராஜ்யத்திற்குச் சவால் விடுத்தார் ஃபரித் கான், பின்னாளில் ஷேர் ஷா சூரி எனப் புகழ்பெற்றவர். இந்தியாவிலேயே முதன்முதலில் ‘ரூபாய்’ என்ற வெள்ளிக் காசுகளை அறிமுகப்படுத்தியவர் இவரே.

ஹுமாயூனுக்கும் ஷேர் ஷாவுக்கும் இடையே, கங்கை நதிக்கரையில் உள்ள சௌசா என்னும் இடத்தில், ஜூன் 26, 1539 அன்று ஒரு போர் நடந்தது. இதில் ஹுமாயூன் படுதோல்வி அடைந்து, ஷேர் ஷா முழுமையான வெற்றியைப் பெற்றார்.

போரில் தோற்ற ஹுமாயூன், காபூல் நோக்கித் தப்பி ஓடினார். எதிரிகள் விரட்டியதால், வேறு வழியின்றிப் பொங்கிப் பிரவகித்த கங்கை ஆற்றில் குதித்தார். நீரில் மூழ்கி மயக்கமடைந்த பாட்ஷாவை, ஒருவன் தன்னுடைய இரண்டு கைகளால் பிடித்து கரைக்குக் கொண்டு சேர்த்தான். அவர் ஒரு பிஷ்தி (Bhishti) – முகலாயப் படையில் தோல் பையில் தண்ணீர் சுமக்கும் வேலை செய்பவர்.

உயிர்பெற்ற ஹுமாயூன், நன்றியுணர்வுடன் அந்த பிஷ்தியிடம், “என் உயிரைக் காப்பாற்றினாய். நீ என்ன வேண்டுமானாலும் கேள்” என்றார். அதற்கு அந்த பிஷ்தி தலையைச் சொறிந்து கொண்டே, “அரசே, எனக்கு ஒரு புதிய தண்ணீர் தோல் பை (மஷ்க்) வாங்கிக் கொடுங்கள் போதும்” என்று கேட்டார். ஹுமாயூன் சிரித்துவிட்டார்.

மீண்டும் கிடைத்த ஆட்சி, மீண்டும் அழைக்கப்பட்ட பிஷ்தி 1555இல் ஷேர் ஷாவின் வாரிசுகளைத் தோற்கடித்து ஹுமாயூன் மீண்டும் டில்லி அரியணை யைக் கைப்பற்றினார். தான் சவுசா போரில் தன்னைக் காப்பாற்றிய அந்த பிஷ்தியைத் தேடிக் கண்டுபிடித்தார். அவர் அப்போதும் பழைய டில்லித் தெருக்களில் தனது தோல் பையுடன் “தண்ணீர்… தண்ணீர்…” என்று கத்திக் கொண்டிருந்தார்.

ஹுமாயூன் அவரை அரசவைக்கு அழைத்து, “சவுசாவில் என் உயிரைக் காப்பாற்றினாய். அதற்குப் பரிசாக, இன்று ஒரு நாள் முழுவதும் நீதான் இந்தியாவின் சக்கரவர்த்தி!” என்று அறிவித்தார்.

வாழ்க்கை முழுவதும் மற்றவர்களுக்காகத் தண்ணீர்த் தோல் பையை மட்டுமே சுமந்தவர், ஒரு நாள் சக்கரவர்த்தியானார்! அவர் தலையில் அரச மகுடம் சூட்டப்பட்டு, அரியணையில் அமர்த்தப்பட்டார்.

முதல் ‘தோல் நாணயம்’

பிஷ்தி பாட்ஷா, தான் பதவியில் இருக்கும் இந்த ஒரு நாளிலும் ஏதாவது மறக்க முடியாததைச் செய்ய வேண்டும் என்று நினைத்தார். அருகில் கிடந்த தனது தோல் பையைப் பார்த்ததும் அவருக்கு ஒரு யோசனை வந்தது.

அவர் ஓர் அரச ஆணையைப் பிறப்பித்தார்: “இன்றிலிருந்து தங்கம், வெள்ளி நாணயங்கள் செல்லாது! இனிமேல், தோல் நாணயங்கள்தான் புழக்கத்தில் இருக்கும்!”

உடனடியாக, தனது தண்ணீர் தோல் பையை கத்தரிக்கோலால் வட்ட வட்டத் துண்டுகளாக வெட்டி, அவற்றில் தன் சிரித்த முகத்தைப் பொறித்தார். அந்தத் ‘தோல் நாணயங்கள்’ டெல்லிச் சந்தையில் வெளியிடப்பட்டன.

அடுத்த சில மணி நேரங்களில் டில்லிச் சந்தையில் பெரும் குழப்பம் வெடித்தது. வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

  • மிட்டாய்க் கடைக்காரர், “இந்தச் சில்லறை என் லட்டுவை விட மலிவாக இருக்கிறதே!” என்றார்.
  • துணிக்கடைக்காரர், “இந்தத் தோலை என் நாய் கூட மெல்லாது!” என்று கத்தினார்.
  • தானிய வியாபாரி, “இதற்குப் பதிலாக வைக் கோல் கூட வாங்க மாட்டேன்!” என்று கோபப்பட்டார்.

மக்கள் இந்த மதிப்பு இல்லாத தோல் நாணயங்களை வீசத் தொடங்கினர். கடைகள் மூடப்பட்டு, வர்த்தகம் ஸ்தம்பித்தது. டில்லியின் தெருக்களில் ‘பிஷ்தி பாட்ஷாவின்’ நகைச்சுவை கதை பரவியது.

ஹுமாயூன் தன் தலையில் அடித்துக் கொண்டார். ஒரு முட்டாளை அரசனாக்கியதன் விளைவு இது என்று வருந்தினார். நாள் முடிவில், ஹுமாயூன் கோபத்துடன் பிஷ்தியிடம், “என்ன விளையாட்டு இது? நீ என் சாம்ராஜ்யத்தின் பொருளாதாரத்தையே ஒரு தோல் பையாக மாற்றிவிட்டாயே!” என்றார்.

பிஷ்தி தலையைச் சொறிந்து கொண்டே, “அரசே, தோல் மலிவானது. இது எல்லோரிடமும் இருந்தால், எல்லோரும் செல்வந்தர்களாக ஆகிவிடுவார்கள் என்று நினைத்தேன்! அத்துடன், என் படம் போட்ட நாணயங்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன, இல்லையா?” என்று வெள்ளந்தியாகக் கேட்டார்.

வரலாறு திரும்பும். ஆங்கிலேயரின் தோல் பையைத் தூக்குப வர்களுக்கு இன்று ஒரு நாள் ஆட்சி கிடைத்திருக்கிறது. சந்தை மந்தமாகி, மக்கள் சோகத்தில் உள்ளனர். ரூபாயின் மதிப்பு குறைந்துகொண்டே போகிறது. உண்மையான அரசனான பிரஜாபிரபுத் துவம் தலையில் கை வைத்துக்கொண்டிருக்கிறது. இன்று பிஷ்தி தனது முத்திரையிட்ட நாணயங்களை பார்த்து பரவசப்பட்டுக் கொண்டே இருக்கிறான். நிலைமை மாறும். மாற்றம் ஒன்றே மாறாது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *