லக்னோ, அக்.3- உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோ நாட்டின் பெரிய நகரங்களில் ஒன்று. இந்நிலையில், அங்கு நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்து பாலைவனமாகும் சூழலை லக்னோ எதிர் நோக்கியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் லக்னோவில் நிலத்தடி நீர்மட்டம் 160 அடி வரை குறைந்துள்ளது. குறிப்பாக ஆசாத் நகர் மற்றும் கீதப்பள்ளி போன்ற பகுதிகளில் முன்னர் 80 அடி ஆழத்தில் கிடைத்த நிலத்தடி நீர், இப்போது 240 அடியாக உள்ளது.
இதனை அறிந்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து நடத்திய விசாரணையின் முடிவில்,“லக்னோவில் தொகுதி வாரியாக நிலத்தடி நீர் மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த நிலை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்” என உத்தரப்பிரதேச அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. நிலத்தடி நீர் குறைவது தொடர்பாக லக்னோ மாவட்ட நீதிமன்றத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க. கூட்டணியில்
இணைவதற்கு பதில் பதவி விலகுவேன்
ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா
சிறீநகர், அக்.3- பாஜக கூட்டணியில் இணைவதற்கு பதில் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவேன் என தேசிய ஜனநாயக கூட்டணி தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சருமான உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஆனந்த்நாக் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் மேலும் கூறுகையில், “ஜம்மு-காஷ்மீருக்கு மாநில தகுதிக்காக எந்தவொரு அரசியல் சமரசத்தையும் ஏற்க மாட்டேன். பாஜகவுடன் கூட்டணி அமைக்க நான் தயாராக இல்லை. ஜம்மு-காஷ்மீர் அரசில் பாஜகவையும் சேர்க்க வேண்டும் என யாரும் (தேசிய மாநாட்டுக் கட்சி) விரும்பினால் எனது பதவி விலகலை ஏற்றுக்கொள்ளுங்கள். இங்குள்ள சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை முதலமைச்சர் பதவிக்கு உயர்த்தி பாஜகவுடன் அரசு அமைத்துக்கொள்ளுங்கள். ஜம்மு-காஷ்மீரின் அரசில் பாஜக இணைந்தால், ஒன்றிய அரசு விரைவாக மாநில தகுதியை வழங்கும்” என அவர் கூறியுள்ளார். முதலமைச்சர் உமர் அப்துல்லாவின் இந்த பேச்சு ஜம்மு-காஷ்மீரில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
யுள்ளது.