கரூர், அக்.3– கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே இந்த சோக சம்பவம் உலுக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ‘புஸ்ஸி’ ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மதியழகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், தவெக பரப்புரை பேருந்து கேமராவில் பதிவான காட்சிகளை ஒப்படைக்க கோரி ஆதவ் அர்ஜுனாவுக்கு காவல் துறை அழைப்பாணை அனுப்பி
யுள்ளது.
அதேபோல், தவெக துணைப் பொதுச் செயலர் நிர்மல் குமாருக்கும் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பரப்புரை தொடர்பான காட்சிகளை ஒப்படைக்க கோரி காவல்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.