வாஷிங்டன் அக்.3- அமெரிக்க அரசின் செலவின மசோதா நிறைவேறுவதில் சிக்கல் நீடிப்பதால் அரசு நிர்வாகம் நேற்று 2-வது நாளாக முடங்கி உள்ளது. இதனால் சுமார் 7 ½ லட்சம் அரசு ஊழியர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
மசோதா
அமெரிக்காவில் அரசு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதற்காக செலவின மசோதா தாக்கல் செய்யப்படும். அந்த வகையில் குறுகிய கால செலவின மசோதா ஒன்று நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட் டது. ஆளும் குடியரசு கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை இடங்களை பெற்றி ருந்தாலும் செலவின மசோதா நிறைவேறுவதற்கு தேவையான 60 சதவீத வாக்குகளுக்கான பெரும்பான்மையை செனட் சபையில் பெற்றிருக்கவில்லை. எனவே எதிர்க் கட்சியான ஜனநாயக கட்சியின் ஆதரவை அந்தக் கட்சி பெற்றாக வேண்டும்.
அரசு துறைகள் முடக்கம்
ஆனால் செலவின மசோதாவில் மலிவு விலை பராமரிப்பு சட்டத்தின் கீழ் வரும் சுகாதார காப்பீடு பிரிமியங்களுக்கான சலுகைகளை வழங்க வேண்டும் என ஜனநாயக கட்சியினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதற்கு குடியரசு கட்சி மறுக்கவே, மேற்படி செலவின மசோதாவுக்கு ஜனநாயக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மசோதா நிறைவேறுவதில் சிக்கல் நீடிக்கிறது.
செலவின மசோதா நிறைவேற்ற முடியாததால் அரசு துறைகளுக்கான நிதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அரசு துறைகள் அனைத்தும் முடங்கி உள்ளன. கடந்த 1-ந்தேதி அதிகாலை 12.01 முதல் ஏற்பட்டு இருக்கும் இந்த முட்டுக்கட்டை நேற்று 2-வது நாளாக நீடித்தது.
7.50 லட்சம்
ஊழியர்கள் பாதிப்பு
அமெரிக்காவின் ராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு, விமான சேவை, அறிவியல் ஆய்வு, வங்கிகள் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகள் மட்டுமே இயங்கும். எனினும் அந்த ஊழியர்களுக்காக ஊதியம் நிறுத்தி வைக்கப்படும்.
அதேநேரம் தேசிய பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், பார்வையாளர் மய்யங்கள் உள்ளிட்ட சுற்றுலா மய்யங்கள் போன்ற அத்தியாவசிய மற்ற துறைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. இதனால் இந்த துறைகளில் பணியாற்றி வரும் சுமார் 7.50 லட்சம் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு உள்ளனர். இவர்கள் எந்த நேரத்திலும் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்த முடக்கத்தால் அமெரிக்க அரசுக்கு நாளொன்றுக்கு 400 மில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
மக்கள் ஏமாற்றம்
மறுபுறம் ஏராளமான உள்கட்டமைப்பு திட்டங்களும் முடங்கி உள்ளன. அந்தவகையில் நியூயார்க் சுரங்கப்பாதை மற்றும் ஹட்சன் சுரங்க திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட 18 பில்லியன் டாலரை நிறுத்தி வைத்திருப்பதாக நிர்வாகம் மற்றும் பட்ஜெட் அலுவலகம் அறிவித்து உள்ளது. அமெரிக்காவில் இவ்வாறு அரசு நிர்வாகம் தீவிரமாக முடங்கி இருப்பதால் நாடு முழுவதும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுற்றுலா தலங்களுக்கு சென்ற மக்கள் பலரும் அவை மூடப்பட்டு இருப்பதை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வருகின்றனர்.
இதைப்போல இயங்கி வரும் துறைகளிலும் பணியாளர்கள் குறைவாகவே இருப்பதால் சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
டிரம்புடன் விரைவில் பேச்சுவார்த்தை
மேலும் இந்த முடக்க த்தால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து உள்ளது. இதுநாட்டின் பொருளாதாரத்தில் தீவிர பாதிப்பை ஏற்படுத் தும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. செலவின மசோதா விவகாரத்தில் ஆளும் குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் இது உடனடியாக நிறைவேறும் நிலை தற்போது இல்லை.
இந்த விவகா ரத்தில் தீர்வை எட்டுவதற்காக நாடாளுமன்ற கட்சித்தலைவர்கள் அதிபர் டிரம்புடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். எனினும் நாடாளுமன்றம் மீண்டும் அடுத்த வாரம்தான் கூடுவதால், இந்த முட்டுக்கட்டை மேலும் சில நாட்கள் நீடிக்கும் என தெரிகிறது.
வாய்ப்பாக கருதும் டிரம்ப்
இதற்கிடையே இந்த அரசு நிர்வாக முடக்கத்துக்கு டிரம்பின் செயல்பாடுகள் தான் காரணம் என ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரான ஹக்கீம் ஜெப்ரீஸ் கூறியுள்ளார். 2-வது முறையாக பதவியேற்ற ஜனவரி 20-ந்தேதி முதல் டிரம்ப் நிர்வாகம் செய்து வரும் நடவடிக்கைகளே இதற்கு காரணம் என அவர் குற்றம் சாட்டினார்.
அதேநேரம் அமெரிக்க பணியாளர் தொகுப்பை மறுவரையறை செய்யவும், எதிர்ப்பாளர்களை தண்டிக்கவும் இந்த அரசு நிர்வாக முடக்கத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த டிரம்ப் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக ஜனநாயக கட்சியை சேர்ந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.