அய்யப்பன்தாங்கல், அக். 3- ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னை, அய்யப்பன்தாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சீருடை அணிந்த ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று (2.10.2025) காலை குருபூஜை மற்றும் ஷாகா பயிற்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தினர்.
உரிய அனுமதியின்றி இந்நிகழ்ச்சிகள் நடப்பதாக எஸ்.ஆர்.எம்.சி. (போரூர்) காவல்துறையினருக்கு, பொதுமக்கள் மூலம் புகார் சென்றது. இதையடுத்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். அதில் உரிய அனுமதியின்றி அரசுப் பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர், பயிற்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தியது தெரியவந்தது.
இதனால், உரிய அனுமதியின்றி பயிற்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தியதாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் என 47 பேரைக் கைது செய்து சமுதாய நலக் கூடத்தில் அடைத்துவைத்து, மாலையில் விடுவித்தனர்.