புதுடில்லி, அக்.3 தேசிய குற்ற ஆவண காப்பகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் பதிவாகும் குற்ற வழக்குகளின் புள்ளிவிவரங்களை வெளியிடுவது வழக்கம்.
இந்நிலையில், பொருளாதாரம் மற்றும் சைபர் குற்ற வழக்குகள் தொடர்பான ஆய்வு முடிவுகளை சமீபத்தில் அந்த அமைப்பு வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு: கடந்த 2023-இல் நம் நாட்டில் நிதி மோசடி அதிகம் நிகழ்ந்த மாநிலங்களில் 27,675 வழக்குகளு டன் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. தெலங்கானா 26,321 வழக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. 19,803 நிதி மோசடி வழக்குகளில் மகாராட்டிரா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த 2023-இல் பொருளாதார குற்றங்கள் அதிகம் நிகழ்ந்த பெருநகரங்களில் மும்பை 6,476 வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. இது, முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 484 வழக்குகள் குறைவாக பதிவாகியுள்ளன. தெலங்கானாவின் அய்தராபாத், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் ஆகியவை பொருளாதார குற்றங்கள் அதிகம் நிகழும் பெருநகரங்களின் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
கடந்த 2023-இல் சைபர் குற்றங்கள் அதிகம் பதிவான நகரமாக கருநாடகாவின் பெங்களூரு உள்ளது. இங்கு மட்டும் 17,631 வழக்குகள் பதிவானது தெரியவந்துள்ளது. தெலங்கானாவின் அய்தராபாத் 4,855 வழக்குகளுடன் இரண்டாமிடத்திலும், மும்பை 4,131 வழக்குடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.